قَدِمَ عَبَّادُ بْنُ كَثِيرٍ الْمَدِينَةَ، فَمَالَ إِلَى مَجْلِسِ الْعَلَاءِ، فَأَخَذَ بِيَدِهِ، فَأَقَامَهُ، ثُمَّ قَالَ: اللَّهُمَّ إِنَّ هَذَا يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا انْتَصَفَ شَعْبَانُ، فَلَا تَصُومُوا»،
فَقَالَ الْعَلَاءُ: اللَّهُمَّ إِنَّ أَبِي، حَدَّثَنِي، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ.
2337. அப்துல்அஸீஸ் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்பாத் பின் கஸீர் என்பவர் மதீனாவுக்கு வந்தார். அவர் (அங்குள்ள) அலாஉ (பின் அப்துர்ரஹ்மான்) அவர்களின் சபைக்குச் சென்று, அவரது கரத்தைப் பிடித்து அவரை எழுப்பிவிட்டு இவ்வாறு கூறினார்:
அல்லாஹ்வே! நிச்சயமாக இவர், தம் தந்தையிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஷஃபான் மாதம் பாதி வந்துவிட்டால், அதற்குப் பிறகு நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்” என்று கூறியதாக அறிவிக்கிறார்.
அப்போது அலாஉ அவர்களும், “அல்லாஹ்வே! நிச்சயமாக எனது தந்தை, அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக எனக்கு அறிவித்தார்” என்று (உறுதியாகக்) கூறினார்.
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ, ஷிப்ல் பின் அலாஉ, அபூஉமைஸ், ஸுஹைர் பின் முஹம்மத் ஆகியோரும் அலாஉ பின் அப்துர்ரஹ்மான் அவர்களிடமிருந்து அறிவித்துள்ளனர்.
அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ அவர்கள் இந்த ஹதீஸை (மக்களுக்கு) அறிவிக்காதவராக இருந்தார். எனவே நான் அஹ்மத் இமாம் அவர்களிடம், ‘ஏன் அவர் அவ்வாறு செய்தார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தை ரமளானுடன் இணைத்து (தொடர்ந்து) நோன்பு நோற்பார்கள் என்பது அவரிடம் (ஆதாரப்பூர்வமான செய்தியாக) இருந்தது. எனவே, இதற்கு மாற்றமான கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் அவர் இதை அறிவிக்கவில்லை’ என்று விடையளித்தார்கள்.
என்னைப் பொறுத்தவரை இந்தச் செய்தி (அதாவது ஷஃபான் பாதிக்கு பிறகு நோன்பை நிறுத்துவது, ரமளானுடன் இணைத்து நோன்பு நோற்பது குறித்து வந்துள்ள செய்திக்கு) முரணானது கிடையாது. மேலும், அலாஉ பின் அப்துர்ரஹ்மான் அவர்களைத் தவிர வேறு யாரும் (அவருடைய) தந்தையிடமிருந்து இந்த ஹதீஸை அறிவிக்கவில்லை தான்.