أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَ فَرَسًا مِنْ أَعْرَابِيٍّ، فَاسْتَتْبَعَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَقْضِيَهُ ثَمَنَ فَرَسِهِ، فَأَسْرَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَشْيَ وَأَبْطَأَ الْأَعْرَابِيُّ، فَطَفِقَ رِجَالٌ يَعْتَرِضُونَ الْأَعْرَابِيَّ، فَيُسَاوِمُونَهُ بِالْفَرَسِ وَلَا يَشْعُرُونَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْتَاعَهُ، فَنَادَى الْأَعْرَابِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنْ كُنْتَ مُبْتَاعًا هَذَا الْفَرَسِ وَإِلَّا بِعْتُهُ؟ فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ سَمِعَ نِدَاءَ الْأَعْرَابِيِّ، فَقَالَ: «أَوْ لَيْسَ قَدِ ابْتَعْتُهُ مِنْكَ؟» فَقَالَ الْأَعْرَابِيُّ: لَا، وَاللَّهِ مَا بِعْتُكَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بَلَى، قَدِ ابْتَعْتُهُ مِنْكَ» فَطَفِقَ الْأَعْرَابِيُّ، يَقُولُ هَلُمَّ شَهِيدًا، فَقَالَ خُزَيْمَةُ بْنُ ثَابِتٍ: أَنَا أَشْهَدُ أَنَّكَ قَدْ بَايَعْتَهُ، فَأَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى خُزَيْمَةَ فَقَالَ: «بِمَ تَشْهَدُ؟»، فَقَالَ: بِتَصْدِيقِكَ يَا رَسُولَ اللَّهِ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهَادَةَ خُزَيْمَةَ بِشَهَادَةِ رَجُلَيْنِ
பாடம்:
ஒரு நீதிபதி, ஒற்றைச் சாட்சியாளரின் உண்மையை (வாய்மையை) அறிந்து கொண்டால், அதனடிப்படையில் அவர் தீர்ப்பு வழங்குவது மார்க்க அடிப்படையில் அனுமதிக்கப்பட்டதாகும்.
3607. நபித்தோழர்களில் ஒருவரான குஸைமா பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு கிராமவாசியிடம் குதிரையை விலைபேசி முடித்தார்கள். அந்தக் கிராமவாசி (அதற்கான தொகையைப் பெறுவதற்காக) நபி (ஸல்) அவர்களைப் பின் தொடர்ந்து வந்தார். நபி (ஸல்) அவர்கள் விரைந்து நடக்க, அந்தக் கிராமவாசி மெதுவாக நடந்து வந்தார்.
நபி (ஸல்) அவர்கள் விலைபேசி வாங்கியதை அறியாத மக்கள் அந்தக் கிராமவாசியிடம் கூடுதல் விலைக்கு கேட்கலானார்கள். அப்போது கிராமவாசி நபி (ஸல்) அவர்களை சத்தமாக அழைத்து நீங்கள் இதை வாங்குவதாக இருந்தால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் நான் மற்றவருக்கு விற்று விடுவேன் என்று கூறினார்.
உடனே நபி (ஸல்) அவர்கள் நின்றார்கள். நான்தான் உன்னிடம் விலை பேசி வாங்கி விட்டேனே என்று கூறினார்கள். அந்தக் கிராமவாசி அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இதை உங்களுக்கு விற்கவில்லை என்றார். நபி (ஸல்) அவர்கள், “இல்லை நான் உன்னிடம் இதை விலைக்கு வாங்கி விட்டேன்” என்று கூறினார்கள். அப்போது கிராமவாசி இதற்கு சாட்சியைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார். அப்போது நான் கிராமவாசியைப் பார்த்து நீ நபி (ஸல்) அவர்களிடம் விற்றுவிட்டாய் என்று நான் சாட்சி கூறுகிறேன் என்றேன்.
நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, “நீர் எதன் அடிப்படையில் சாட்சி கூறுகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! உங்களின் வாய்மையின் (உண்மைத்துவத்தின்) அடிப்படையிலேயே நான் சாட்சி கூறுகிறேன்” என்று பதிலளித்தேன்.
(அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்:) இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் குஸைமா (ரலி) அவர்களின் சாட்சியத்தை இருவரின் சாட்சியத்துக்குச் சமமாக ஆக்கினார்கள்.