🔗

அபூதாவூத்: 4607

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

أَتَيْنَا الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ، وَهُوَ مِمَّنْ نَزَلَ فِيهِ {وَلَا عَلَى الَّذِينَ إِذَا مَا أَتَوْكَ لِتَحْمِلَهُمْ قُلْتَ لَا أَجِدُ مَا أَحْمِلُكُمْ عَلَيْهِ} [التوبة: 92] فَسَلَّمْنَا، وَقُلْنَا: أَتَيْنَاكَ زَائِرِينَ وَعَائِدِينَ وَمُقْتَبِسِينَ، فَقَالَ الْعِرْبَاضُ: صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا فَوَعَظَنَا مَوْعِظَةً بَلِيغَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ، فَقَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ كَأَنَّ هَذِهِ مَوْعِظَةُ مُوَدِّعٍ، فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا؟ فَقَالَ «أُوصِيكُمْ بِتَقْوَى اللَّهِ وَالسَّمْعِ وَالطَّاعَةِ، وَإِنْ عَبْدًا حَبَشِيًّا، فَإِنَّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا، فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الْمَهْدِيِّينَ الرَّاشِدِينَ، تَمَسَّكُوا بِهَا وَعَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ، وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الْأُمُورِ، فَإِنَّ كُلَّ مُحْدَثَةٍ بِدْعَةٌ، وَكُلَّ بِدْعَةٍ ضَلَالَةٌ»


4607. அப்துர்ரஹ்மான் பின் அம்ர் அஸ்ஸுலமீ (ரஹ்), ஹுஜ்ர் பின் ஹுஜ்ர் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

நாங்கள் இர்பாள் பின் ஸாரியா (ரலி) அவர்களிடம் வந்தோம். அவர்கள், “(முஹம்மதே!) வாகனம் கேட்டு உம்மிடம் வந்தோரிடம் “உங்களை ஏற்றி அனுப்புவதற்குரியது (வாகனம்) என்னிடம் இல்லை” என்று நீர் கூறியபோது … (அல்குர்ஆன் 9:92). எனும் வசனத்தில் கூறப்பட்ட தோழர்களில் ஒருவராவார். நாங்கள் அவருக்கு ஸலாம் கூறிவிட்டு, “உங்களைச் சந்திப்பதற்காகவும், நலம் விசாரிப்பதற்காகவும், உங்களிடமிருந்து (கல்வியைப்) பெற்றுக்கொள்வதற்காகவும் வந்துள்ளோம்” என்று கூறினோம்.

அதற்கு இர்பாள் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு, எங்களை நோக்கித் திரும்பி, கண்கள் குளமாகி, இதயங்கள் நடுங்கும் அளவிற்கு மிக உருக்கமான அறிவுரை வழங்கினார்கள். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! இது விடைபெற்றுச் செல்பவரின் அறிவுரை போன்று உள்ளதே! எனவே எங்களுக்கு என்ன கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறும், ஓர் அபிசீனிய அடிமை உங்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவருக்குச் செவிசாய்த்து கட்டுப்படுமாறும் உங்களுக்கு நான் உபதேசிக்கிறேன். எனக்குப் பின் உங்களில் எவர் வாழ்கிறாரோ, அவர் பல கருத்து வேறுபாடுகளைக் காண்பார். எனவே, எனது வழிமுறையையும், நேர்வழி பெற்ற சீரிய கலீஃபாக்களின் வழிமுறையையும் கடைப்பிடியுங்கள். அதனை உங்கள் கடைவாய்ப் பற்களால் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படும் காரியங்களைப் பற்றி உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொன்றும் பித்அத் (புதுமை) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.