كَانَ لَا يَجْلِسُ مَجْلِسًا لِلذِّكْرِ حِينَ يَجْلِسُ إِلَّا قَالَ: «اللَّهُ حَكَمٌ قِسْطٌ هَلَكَ الْمُرْتَابُونَ»، فَقَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ يَوْمًا: ” إِنَّ مِنْ وَرَائِكُمْ فِتَنًا يَكْثُرُ فِيهَا الْمَالُ، وَيُفْتَحُ فِيهَا الْقُرْآنُ حَتَّى يَأْخُذَهُ الْمُؤْمِنُ وَالْمُنَافِقُ، وَالرَّجُلُ، وَالْمَرْأَةُ، وَالصَّغِيرُ، وَالْكَبِيرُ، وَالْعَبْدُ، وَالْحُرُّ، فَيُوشِكُ قَائِلٌ أَنْ يَقُولَ: مَا لِلنَّاسِ لَا يَتَّبِعُونِي وَقَدْ قَرَأْتُ الْقُرْآنَ؟ مَا هُمْ بِمُتَّبِعِيَّ حَتَّى أَبْتَدِعَ لَهُمْ غَيْرَهُ، فَإِيَّاكُمْ وَمَا ابْتُدِعَ، فَإِنَّ مَا ابْتُدِعَ ضَلَالَةٌ، وَأُحَذِّرُكُمْ زَيْغَةَ الْحَكِيمِ، فَإِنَّ الشَّيْطَانَ قَدْ يَقُولُ كَلِمَةَ الضَّلَالَةِ عَلَى لِسَانِ الْحَكِيمِ، وَقَدْ يَقُولُ الْمُنَافِقُ كَلِمَةَ الْحَقِّ “، قَالَ: قُلْتُ لِمُعَاذٍ: مَا يُدْرِينِي رَحِمَكَ اللَّهُ أَنَّ الْحَكِيمَ قَدْ يَقُولُ كَلِمَةَ الضَّلَالَةِ وَأَنَّ الْمُنَافِقَ قَدْ يَقُولُ كَلِمَةَ الْحَقِّ؟ قَالَ: «بَلَى، اجْتَنِبْ مِنْ كَلَامِ الْحَكِيمِ الْمُشْتَهِرَاتِ الَّتِي يُقَالُ لَهَا مَا هَذِهِ، وَلَا يُثْنِيَنَّكَ ذَلِكَ عَنْهُ، فَإِنَّهُ لَعَلَّهُ أَنْ يُرَاجِعَ، وَتَلَقَّ الْحَقَّ إِذَا سَمِعْتَهُ فَإِنَّ عَلَى الْحَقِّ نُورًا»،
4611. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் தோழர்களில் ஒருவரான யஸீத் பின் உமைரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் எந்த ஒரு திக்ருடைய அமர்வில் அமர்ந்தாலும், ‘அல்லாஹ்தான் நீதியுள்ள தீர்ப்பாளன்; சந்தேகங்கொண்டோர் அழிந்தனர்!’ என்று கூறாமல் இருந்ததில்லை.
ஒருநாள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் சொன்னார்கள்:
“நிச்சயமாக உங்களுக்குப் பின்னால் பெரும் குழப்பங்கள் வர இருக்கின்றன. அவற்றில் (சில), செல்வம் (அளவுக்கு அதிகமாக) பெருகும். மேலும், குர்ஆனின் (கல்வி) விரிவுபடுத்தப்படும். அதனால் அதை நம்பிக்கை கொண்டோரும், நயவஞ்சகர்களும், ஆணும், பெண்ணும், சிறியோரும், பெரியோரும், அடிமையும், சுதந்திரமானவரும் என அனைவரும் கற்றுக்கொள்வார்கள்.
அப்போது (குர்ஆனைப் படித்த) ஒருவர், ‘நான் குர்ஆனைப் படித்துள்ளேன்! ஏன் மக்கள் என்னைப் பின்பற்ற மறுக்கிறார்கள்? நான் அவர்களுக்காக இதல்லாத வேறொன்றைப் புதிதாக உருவாக்காமல், அவர்கள் என்னைப் பின்பற்றப்போவதில்லை’ என்று சொல்லும் நிலை ஏற்படலாம்.
எனவே, நீங்கள் புதிதாக உருவாக்கப்பட்டவற்றை விட்டும் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்தும் வழிகேடே ஆகும்.
ஒரு அறிஞர் நேர்வழியிலிருந்து விலகுவதைப் பற்றி நான் உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் சில சமயங்களில் ஷைத்தான் ஒரு அறிஞரின் நாவின் மூலம் தவறான வார்த்தையை பேச வைக்கிறான்; மேலும் சில சமயங்களில் ஒரு நயவஞ்சகன் உண்மையின் வார்த்தையைப் பேசக்கூடும்.
நான் முஆத் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! அறிஞர் வழிகேடான ஒரு வார்த்தையைச் சொல்லலாம் என்றும், நயவஞ்சகன் உண்மையின் வார்த்தையைச் சொல்லலாம் என்றும் நான் புரிந்துக் கொள்ளமுடியவில்லையே?” என்று கேட்டேன்.
அதற்கு முஆத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “ஆம்! (புரிந்துக் கொள்ளமுடியாது தான்). அறிஞரின் பேச்சில், ‘இது என்ன?’ என்று (மக்கள் குழம்பிவிடும்) கருத்துக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
ஆனால், அந்த ஒரு காரணத்திற்காகவே, அவரை விட்டும் நீங்கள் முற்றிலும் விலகிவிட வேண்டாம். ஏனென்றால், அவர் (தவறை உணர்ந்து) திருந்தக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. மேலும், நீங்கள் உண்மையைக் கேட்கும்போது அதை ஏற்று நடத்திக்கொள்ளுங்கள். ஏனெனில், உண்மைக்கு ஒளி இருக்கிறது.
அபூதாவூத் இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியை ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் மஃமர் அவர்கள், “வ லா யுஸ்னியன்னக” என்பதற்குப் பதிலாக “வ லா யுன்இயன்னக” என்று அறிவித்துள்ளார். இரண்டும் “உன்னை விலக்கி விட வேண்டாம்” என்ற ஒரே பொருளைக் கொண்டது.
இந்தச் செய்தியை ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸாலிஹ் பின் கைஸான் அவர்கள், “முஷ்தஹிராதி” என்பதற்குப் பதிலாக “முஷப்பிஹாதி” என்று அறிவித்துள்ளார். மேலும் உகைல் அவர்கள் கூறியது போன்றே “லா யுஸ்னியன்னக” என்று அறிவித்துள்ளார்.
இந்தச் செய்தியை ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னு இஸ்ஹாக் அவர்கள், “ஆம், ஒரு அறிஞரின் பேச்சைப் பற்றி நீங்கள் சந்தேகம் கொண்டால், ‘இந்த வார்த்தையின் மூலம் அவர் என்ன கருதினார்?’ என்று நீங்கள் கேட்டு, அதற்கு விளக்கம் கிடைக்காத போது (சந்தேகப்படுங்கள்)” என்ற கருத்தை அறிவித்துள்ளார்.