🔗

அபூதாவூத்: 5192

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

أَنَّ نَفَرًا مِنْ أَهْلِ الْعِرَاقِ قَالُوا: يَا ابْنَ عَبَّاسٍ كَيْفَ تَرَى فِي هَذِهِ الْآيَةِ الَّتِي أُمِرْنَا فِيهَا بِمَا أُمِرْنَا، وَلَا يَعْمَلُ بِهَا أَحَدٌ؟ قَوْلُ اللَّهِ عَزَّ وَجَلَّ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِيَسْتَأْذِنْكُمُ الَّذِينَ مَلَكَتْ أَيْمَانُكُمْ وَالَّذِينَ لَمْ يَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلَاثَ مَرَّاتٍ مِنْ قَبْلِ صَلَاةِ الْفَجْرِ وَحِينَ تَضَعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ وَمِنْ بَعْدِ صَلَاةِ الْعِشَاءِ ثَلَاثُ عَوْرَاتٍ} [النور: 58] لَكُمْ لَيْسَ عَلَيْكُمْ وَلَا عَلَيْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ طَوَّافُونَ عَلَيْكُمْ قَرَأَ الْقَعْنَبِيُّ إِلَى {عَلِيمٌ حَكِيمٌ} [النور: 59] قَالَ ابْنُ عَبَّاسٍ: «إِنَّ اللَّهَ حَلِيمٌ رَحِيمٌ بِالْمُؤْمِنِينَ يُحِبُّ السَّتْرَ، وَكَانَ النَّاسُ لَيْسَ لِبُيُوتِهِمْ سُتُورٌ وَلَا حِجَالٌ، فَرُبَّمَا دَخَلَ الْخَادِمُ أَوِ الْوَلَدُ أَوْ يَتِيمَةُ الرَّجُلِ وَالرَّجُلُ عَلَى أَهْلِهِ، فَأَمَرَهُمُ اللَّهُ بِالِاسْتِئْذَانِ فِي تِلْكَ الْعَوْرَاتِ، فَجَاءَهُمُ اللَّهُ بِالسُّتُورِ وَالْخَيْرِ، فَلَمْ أَرَ أَحَدًا يَعْمَلُ بِذَلِكَ بَعْدُ»


5192. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஈராக்வாசிகளில் சிலர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் வந்து, “இப்னு அப்பாஸ் அவர்களே! அல்லாஹ் நமக்கு உத்தரவிட்ட ஒரு வசனத்தைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அந்த வசனத்தின்படி யாரும் செயல்படுவதில்லையே!. அந்த வசனம் (கீழ்க்கண்ட) இதுதான்” என்று கூறினர்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய மூன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க (நேர)ங்கள். இவையல்லாத மற்ற நேரங்களில் (வருவது) அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன்: 24:58)

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் விசயத்தில் பொறுமையுடையவனாகவும் கருணையுடையவனாகவும் இருக்கிறான். மறைப்பதை அவன் விரும்புகிறான்.

அன்றைய காலத்தில் வீடுகளுக்குத் திரைகளோ, கூடாரங்களோ இருக்கவில்லை. ஆகவே, சில சமயம் ஒரு பணியாளரோ, ஒரு குழந்தையோ அல்லது ஒரு அநாதைப் பெண்ணோ ஒருவர் தமது மனைவியுடன் இருக்கும்போது உள்ளே வந்துவிடக்கூடும். எனவேதான், அல்லாஹ் அவர்களுக்கு இந்த மூன்று நேரங்களிலும் அனுமதி கோருமாறு கட்டளையிட்டான். அதன் பின்னர் அல்லாஹ் அவர்களுக்குத் திரைகளையும் நற்செல்வங்களையும் கொடுத்தான். அதன் பிறகு அந்த வசனத்தின்படி எவரும் செயல்படுவதை நான் காணவில்லை” என்று கூறினார்கள்.


அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

ஹதீஸ் எண்-5191 இல் வரும் உபைதுல்லாஹ் (ரஹ்), அதாஃ (ரஹ்) ஆகியோரின் அறிவிப்புகள் இந்த ஹதீஸை பலவீனமாக்குகிறது.