أَنَّ ثَعْلَبَةَ بْنَ حَاطِبٍ الْأَنْصَارِيَّ، أَتَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، ادْعُ اللهَ أَنْ يَرْزُقَنِي اللهُ. قَالَ: «وَيْحَكَ يَا ثَعْلَبَةُ، قَلِيلٌ تُؤَدِّي شُكْرَهُ خَيْرٌ مِنْ كَثِيرٍ لَا تُطِيقُهُ»
ثُمَّ رَجَعَ إِلَيْهِ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، ادْعُ اللهَ أَنْ يَرْزُقَنِي مَالًا، قَالَ: «وَيْحَكَ يَا ثَعْلَبَةُ، أَمَا تُرِيدُ أَنْ تَكُونَ مِثْلَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاللهِ لَوْ سَأَلْتَ أَنْ يَسِيلَ لِيَ الْجِبَالَ ذَهَبًا وَفِضَّةً لَسَالَتْ»
ثُمَّ رَجَعَ إِلَيْهِ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، ادْعُ اللهَ أَنْ يَرْزُقَنِي مَالًا، وَاللهِ لَئِنْ أَتَانِي اللهُ مَالًا لَأُوتِيَنَّ كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللهُمَّ ارْزُقْ ثَعْلَبَةَ مَالًا» فَاتَّخَذَ غَنَمًا، فَنَمَتْ كَمَا يَنْمُو الدُّودُ حَتَّى ضَاقَتْ عَنْهَا أَزِقَّةُ الْمَدِينَةِ، فَتَنَحَّى بِهَا، وَكَانَ يَشْهَدُ الصَّلَاةَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَخْرُجُ إِلَيْهَا، ثُمَّ نَمَتْ حَتَّى تَعَذَّرَتْ عَلَيْهِ مَرَاعِي الْمَدِينَةِ، فَتَنَحَّى بِهَا، فَكَانَ يَشْهَدُ الْجُمُعَةَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَخْرُجُ إِلَيْهَا، ثُمَّ نَمَتْ فَتَنَحَّى بِهَا، فَتَرَكَ الْجُمُعَةَ وَالْجَمَاعَاتِ فَيَتَلَقَّى الرُّكْبَانُ، وَيَقُولُ: مَاذَا عِنْدَكُمْ مِنَ الْخَبَرِ؟ وَمَا كَانَ مِنْ أَمْرِ النَّاسِ؟ فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ عَلَى رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا} [التوبة: 103] قَالَ: فَاسْتَعْمَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الصَّدَقَاتِ رَجُلَيْنِ: رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، وَرَجُلٌ مِنْ بَنِي سُلَيْمٍ، وَكَتَبَ لَهُمْا سَنَةَ الصَّدَقَةِ وَأَسْنَانَهَا، وَأَمَرَهُمَا أَنْ يَصْدُقَا النَّاسَ، وَأَنْ يَمُرَّا بِثَعْلَبَةَ، فَيَأْخُذَا مِنْهُ صَدَقَةَ مَالِهِ، فَفَعَلَا حَتَّى ذَهَبَا إِلَى ثَعْلَبَةَ، فَأَقْرَآهُ كِتَابَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ صَدِّقَا النَّاسَ فَإِذَا فَرَغْتُمَا، فَمُرَّا بِي. فَفَعَلَا، فَقَالَ: وَاللهِ مَا هَذِهِ إِلَّا أُخَيَّةُ الْجِزْيَةِ، فَانْطَلَقَا حَتَّى لَحِقَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ عَلَى رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ} [التوبة: 75] إِلَى قَوْلِهِ {يَكْذِبُونَ} [التوبة: 77] قَالَ: فَرَكِبَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ قَرِيبٌ لِثَعْلَبَةَ رَاحِلَةً حَتَّى أَتَى ثَعْلَبَةَ، فَقَالَ: وَيْحَكَ يَا ثَعْلَبَةُ، هَلَكْتَ، أَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ فِيكَ مِنَ الْقُرْآنِ كَذَا، فَأَقْبَلَ ثَعْلَبَةُ، وَوَضَعَ التُّرَابَ عَلَى رَأْسِهِ وَهُوَ يَبْكِي، وَيَقُولُ: يَا رَسُولَ اللهِ، يَا رَسُولَ اللهِ. فَلَمْ يَقْبَلْ مِنْهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَدَقَتَهُ حَتَّى قَبَضَ اللهُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَتَى أَبَا بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ بَعْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا أَبَا بَكْرٍ قَدْ عَرَفْتَ مَوْقِعِي مِنْ قَوْمِي، وَمَكَانِي مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاقْبَلْ مِنِّي، فَأَبَى أَنْ يَقْبَلَهُ، ثُمَّ أَتَى عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ، فَأَبَى أَنْ يَقْبَلَ مِنْهُ، ثُمَّ أَتَى عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ فَأَبَى أَنْ يَقْبَلَ مِنْهُ، ثُمَّ مَاتَ ثَعْلَبَةُ فِي خِلَافَةِ عُثْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ
7873. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்ஸாரி நபித்தோழர்களில் ஒருவரான ஸஃலபா பின் ஹாதிப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் செல்வத்தை வழங்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஸஃலபாவே! உமக்குக் கேடுதான். எதற்கு உம்மால் நன்றி செலுத்த முடியுமோ அந்தக் குறைந்த செல்வமே, உம்மால் தாங்கிக்கொள்ள முடியாத அதிகப்படியான செல்வத்தை விடச் சிறந்தது” என்று கூறினார்கள்.
பிறகு அவர் மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் செல்வத்தை வழங்குமாறு அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஸஃலபாவே! அல்லாஹ்வின் தூதராகிய என்னைப் போன்று நீர் இருக்க விரும்பவில்லையா? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மலைகள் தங்கமாகவும் வெள்ளியாகவும் மாறி எனக்குப் பின்னால் ஓடி வர வேண்டும் என்று நீ கேட்டால், அவை அவ்வாறே செய்திருக்கும் (ஆயினும் நான் எளிமையையே விரும்புகிறேன்)” என்றார்கள்.
பிறகு அவர் மூன்றாவது தடவை மீண்டும் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் செல்வத்தை வழங்குமாறு அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் எனக்குச் செல்வத்தைக் கொடுத்தால், ஒவ்வொரு உரிமையாளருக்கும் அவருக்குரிய உரிமையை நான் வழங்கிவிடுவேன்” என்று (வாக்குறுதி) அளித்தார். நபி (ஸல்) அவர்கள், “யா அல்லாஹ்! ஸஃலபாவிற்குச் செல்வத்தை வழங்குவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள்.
அவர் சில ஆடுகளை வளர்க்கத் தொடங்கினார். அவை புழுக்கள் பெருகுவது போல (அசுர வேகத்தில்) பெருகின. மதீனாவின் வீதிகள் அவற்றுக்குப் போதாமல் போயின. எனவே, அவர் மதீனாவுக்கு வெளியே சென்று தங்கினார். அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுகைகளில் கலந்துகொண்டுவிட்டு, பிறகு ஆடுகளிடம் சென்றுவிடுவார். மீண்டும் ஆடுகள் பெருகவே மதீனாவின் மேய்ச்சல் நிலங்கள் அவருக்குப் பற்றாக்குறையாகின. இதனால் இன்னும் தூரம் தள்ளிச் சென்றார். அதன் பின் ஜுமுஆத் தொழுகைக்கு மட்டும் வந்துவிட்டுத் திரும்பிவிடுவார்.
பிறகு ஆடுகள் இன்னும் பெருகவே, அவர் வெகுதூரம் சென்றுவிட்டார். இறுதியில் அவர் ஜுமுஆத் தொழுகையையும் ஜமாஅத் தொழுகைகளையும் விட்டுவிட்டார். (மதீனாவுக்குச் செல்லும்) பயணிகளிடம், “மக்களிடம் என்ன செய்தி? அங்கே விவகாரங்கள் எப்படிப் போகின்றன?” என்று மட்டும் கேட்டுத் தெரிந்துகொள்வார்.
அப்போது அல்லாஹ் தன் தூதருக்கு, “(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதி அளிக்கும். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன்: 9:103) என்ற வசனத்தை இறக்கினான்.
நபி (ஸல்) அவர்கள் ஸகாத் வசூலிப்பதற்காக அன்சாரிகளில் ஒருவரையும், பனூ ஸுலைம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரையும் நியமித்தார்கள். அவர்களுக்கு ஸகாத் பற்றிய சட்டங்களையும், எதிலிருந்து எவ்வளவு எடுக்க வேண்டும் என்பதையும் எழுதிக் கொடுத்தார்கள். மக்களிடம் ஸகாத் வசூலிக்கும்போது ஸஃலபாவிடமும் சென்று ஸகாத்தைப் பெற்று வருமாறு கட்டளையிட்டார்கள்.
அவ்விருவரும் மக்களிடம் வசூலித்துவிட்டு ஸஃலபாவிடம் சென்றனர். நபி (ஸல்) அவர்களின் கடிதத்தை அவருக்கு வாசித்துக் காட்டினர். அதற்கு அவர், “மற்றவர்களிடம் வசூலித்துவிட்டு கடைசியாக என்னிடம் வாருங்கள்” என்றார். அவர்கள் அவ்வாறே செய்துவிட்டுத் திரும்பியபோது ஸஃலபா அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இது (முஸ்லிமல்லாதவர்களிடம் வாங்கப்படும்) ‘ஜிஸ்யா’ வரியைப் போலல்லவா இருக்கிறது?” என்று (கொடுக்க மறுத்துக்) கூறினார். அவ்விருவரும் திரும்பி வந்து நபி (ஸல்) அவர்களிடம் நடந்ததைச் சொன்னார்கள்.
“அல்லாஹ் தனது அருளை எங்களுக்கு வழங்கினால் தர்மம் செய்வோம்; நல்லோர்களாக ஆவோம்” என்று அல்லாஹ்விடம் உறுதிமொழி எடுத்தோரும் அவர்களில் உள்ளனர்.
அல்லாஹ் தனது அருளை அவர்களுக்கு வழங்கியபோது அதில் கஞ்சத்தனம் செய்தனர். அலட்சியம் செய்து புறக்கணித்தனர்.
அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை மீறியதாலும், பொய்யுரைத்துக் கொண்டிருந்ததாலும் அவனை அவர்கள் சந்திக்கும் நாள் வரை அவர்களின் உள்ளங்களில் நயவஞ்சகத்தை அவன் தொடரச் செய்தான். (அல்குர்ஆன்: 9:75-77) என்ற வசனங்களை இறக்கினான்.
ஸஃலபாவின் உறவினரான ஓர் அன்சாரித் தோழர் வாகனத்தில் ஏறி ஸஃலபாவிடம் வந்து, “ஸஃலபாவே! உமக்குக் கேடுதான், நீர் அழிந்துவிட்டீர்! உம்மைப் பற்றி குர்ஆனில் இத்தகைய வசனங்கள் இறங்கிவிட்டன” என்று கூறினார். இதைக் கேட்ட ஸஃலபா அவர்கள் ஓடி வந்து, தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டு அழுது புலம்பியவாறு, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் தூதரே!” என்று கெஞ்சினார். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவரிடமிருந்து ஸகாத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். நபியவர்கள் மரணிக்கும் வரை அவரிடமிருந்து எதையும் ஏற்கவில்லை.
நபியவர்களின் மறைவுக்குப் பின் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் வந்து, “அபூபக்கர் அவர்களே! எனது சமுதாயத்தில் எனக்கிருந்த மதிப்பையும், நபியவர்களிடம் எனக்கிருந்த இடத்தையும் நீங்கள் அறிவீர்கள். எனவே என்னிடமிருந்து (ஸகாத்தை) ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். அவரும் மறுத்துவிட்டார். பிறகு உமர் (ரலி) அவர்களிடம் வந்தார். அவர்களும் மறுத்துவிட்டார்கள். பின்னர் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் வந்து (ஸகாத்தை) ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். அவர்களும் மறுத்துவிட்டார்கள். இறுதியில் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலேயே ஸஃலபா (ரலி) மரணமடைந்தார்.