🔗

புகாரி: 1660

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَتَبَ عَبْدُ المَلِكِ إِلَى الحَجَّاجِ: أَنْ لاَ يُخَالِفَ ابْنَ عُمَرَ فِي الحَجِّ، فَجَاءَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَأَنَا مَعَهُ يَوْمَ عَرَفَةَ حِينَ زَالَتِ الشَّمْسُ، فَصَاحَ عِنْدَ سُرَادِقِ الحَجَّاجِ، فَخَرَجَ وَعَلَيْهِ مِلْحَفَةٌ مُعَصْفَرَةٌ فَقَالَ: مَا لَكَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ فَقَالَ: «الرَّوَاحَ إِنْ كُنْتَ تُرِيدُ السُّنَّةَ»، قَالَ: هَذِهِ السَّاعَةَ؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَأَنْظِرْنِي حَتَّى أُفِيضَ عَلَى رَأْسِي ثُمَّ أَخْرُجُ، فَنَزَلَ حَتَّى خَرَجَ الحَجَّاجُ فَسَارَ بَيْنِي وَبَيْنَ أَبِي فَقُلْتُ: إِنْ كُنْتَ تُرِيدُ السُّنَّةَ فَاقْصُرِ الخُطْبَةَ وَعَجِّلِ الوُقُوفَ، فَجَعَلَ يَنْظُرُ إِلَى عَبْدِ اللَّهِ فَلَمَّا رَأَى ذَلِكَ عَبْدُ اللَّهِ قَالَ: «صَدَقَ»


1660. ஸாலிம் அறிவித்தார்.

அப்துல் மலிக்(பின் மர்வான்), ஹஜ்ஜின்போது இப்னு உமருக்கு மாற்றமாக நடந்து கொள்ள வேண்டாம் என ஹஜ்ஜாஜுக்குக் கடிதம் எழுதினார். அரஃபா நாளில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது இப்னு உமர்(ரலி) (ஹஜ்ஜுக்கு) வந்தார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். அவர் ஹஜ்ஜாஜின் கூடாரத்திற்குச் சென்று (புறப்படுமாறு) சப்தமிட்டார். உடனே ஹஜ்ஜாஜ் சாயம் பூசப்பட்ட போர்வையுடன் வெளிவந்து, ‘அபூ அப்திர் ரஹ்மானே (இப்னு உமரே)! என்ன விஷயம்?’ எனக் கேட்டதற்கு இப்னு உமர்(ரலி), ‘நீர் நபிவழியைப் பின்பற்ற நாடினால் இங்கிருந்து புறப்பட வேண்டியது தான்’ என்றார்.

ஹஜ்ஜாஜ் ‘இப்போதேவா?’ எனக் கேட்டதற்கு அவர் ‘ஆம்’ என்றார். ஹஜ்ஜாஜ் ‘நான் இதோ குளித்துவிட்டுப் புறப்படுகிறேன்; அவகாசம் கொடுங்கள்’ எனக் கூறினார். இப்னு உமர்(ரலி) ஹஜ்ஜாஜ் புறப்படுவது வரை (தம் வாகனத்தைவிட்டு) இறங்கி நின்றார்.

ஹஜ்ஜாஜ் எனக்கும் என்னுடைய தந்தை (இப்னு உமரு)க்குமிடையே நடந்து கொண்டிருந்தபோது நான் ஹஜ்ஜாஜிடம், நீர் நபிவழியைப் பின்பற்ற நாடினால் உரையைச் சுருக்கி, (அரஃபாவில்) தங்குவதைத் துரிதப்படுத்தும் என்றேன். உடனே அவர் அப்துல்லாஹ் இப்னு உமரைப் பார்த்தார். இப்னு உமர்(ரலி), ‘(ஸாலிம்) உண்மையே கூறினார்’ என்றார்.
Book :25