🔗

புகாரி: 1689

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً، فَقَالَ: «ارْكَبْهَا» فَقَالَ: إِنَّهَا بَدَنَةٌ فَقَالَ: «ارْكَبْهَا» قَالَ: إِنَّهَا بَدَنَةٌ قَالَ: «ارْكَبْهَا وَيْلَكَ» فِي الثَّالِثَةِ أَوْ فِي الثَّانِيَةِ


பாடம்: 103

(குர்பானி) ஒட்டகங்களில் பயணம் செய்தல்.

அல்லாஹ் கூறுகின்றான்: “இன்னும் (குர்பானி) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக நாம் ஆக்கியிருக்கிறோம். உங்களுக்கு அவற்றில் நன்மை உள்ளது. எனவே, (அவை உரிய முறையில்) நிற்கும்போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பானி கொடுத்துவிடு)வீர்களாக!

பிறகு அவை பக்கவாட்டில் சாய்ந்து கீழே விழுந்(து உயிர் பிரிந்)ததும் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும் (வறுமையிலும்) கையேந்தாமல் இருப்பவருக்கும் உண்ணக்கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்.

குர்பானிப் பிராணிகளின் மாமிசங்களோ அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை; மாறாக, உங்களிடமுள்ள இறையச்சமே அவனை அடையும். அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்தும் பொருட்டு, அவற்றை உங்களுக்கு இவ்வாறு அவன் வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான். ஆகவே, நன்மை செய்வோருக்கு நீர் நற்செய்தி கூறுவீராக! (22:36, 37)

(மேற்கண்ட வசனங்களில் இடம்பெற்றுள்ள சொற்களின் பொருள் விளக்கம் தொடர்பாக) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘அல்புத்ன்’ என குர்பானி ஒட்டகங் களுக்குப் பெயர் வரக்காரணம், அவை கொழுத்தவையாக இருக்கும் என்பதே. (‘பத்ன்’ என்பதற்கு ‘கொழுத்த உடல்’ என்பதே சொற்பொருளாகும்.)

‘கானிஉ’: யாசிப்பவர்;

‘அல்முஅதா்’: அந்த ஒட்டகங்களை (ஏக்கத்தோடு) பார்க்கும் பணக்காரர் அல்லது ஏழை (ஆனால், யாசிக்காதவர்);

‘ஷஆயிர்’ (அடையாளச் சின்னங்கள்): குர்பானி ஒட்டகங்களை மதிப்பதும் அவற்றிடம் வாஞ்சையோடு நடந்து கொள்வதும்;

‘வஜபத்’ பூமியில் சரிந்து விழுதல்; சூரியன் மறையப்போவதற்கும் ‘வஜபத்’ என்பர்.

(“தொன்மை வாய்ந்த அந்த ஆலயத்தை அவர்கள் சுற்றிவரட்டும்’! (22:29) எனும் வசனத்தில் உள்ள) ‘அ(த்)தீக்’ என்பதற்கு, ‘கொடுங்கோலர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டது’ என்பது பொருள்.


1689. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் குர்பானி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து) செல்வதைப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதில் ஏறிக்கொள்வீராக!” என்று கூறினார்கள். அதற்கு அவர் “இது குர்பானி ஒட்டகமாயிற்றே!” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(பரவாயில்லை) நீர் அதில் ஏறிக்கொள்ளும்!” என்றார்கள்.

அவர் “இது குர்பானி ஒட்டகம்” என்றார். (மீண்டும்) “அதில் ஏறிக்கொள்வீராக!” எள்றார்கள். (அவர் அதில் ஏறாததால்) இரண்டாவது தடவையிலோ, மூன்றாவது தடவையிலோ நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடு உண்டாகட்டும்! ஏறுவீராக!” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 25