🔗

புகாரி: 3059

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


3059. உமர்(ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமை அஸ்லம்(ரஹ்) அறிவித்தார்.

உமர் இப்னு கத்தாப்(ரலி), (ஸகாத் கால்நடைகளின்) பிரத்தியேக மேய்ச்சல் நிலம் ஒன்றுக்கு ‘ஹுனைன் என்றழைக்கப்படும் தம் அடிமை ஒருவரை (காவலராக) நியமித்தார்கள். அப்போது, ‘ஹுனையே! உன் கையை முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதிலிருந்து காத்துக் கொள். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபப் பிரார்த்தனைக்கு அஞ்சு. ஏனெனில், அநீதியிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை (அல்லாஹ்வினால்) எற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும்.

சிறு ஒட்டக மந்தைகளையும் சிறு ஆட்டு மந்தைகளையும் ஓட்டி வருபவர்கள் (மேய்ச்சல் நிலத்திற்குள்) நுழைய அனுமதியளி. (செல்வந்தர்களான) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் மற்றும் உஸ்மான் இப்னு அஃப்பான் ஆகியோரின் கால்நடைகளைக் குறித்து எச்சரிக்கையாய் இரு. (அவற்றை உள்ளே நுழைய விடாதே) ஏனெனில், அவ்விருவரின் கால்நடைகளும் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய்விட்டால் அவர்களிருவரும் (தம் பிழைப்பிற்குத் தம்) பேரீச்சந் தோட்டங்களையும் விளைநிலங்களையும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

ஆனால், சிறிய ஒட்டக மந்தைகளையும் சிறிய ஆட்டு மந்தைகளையும் வைத்திருப்பவர்கள் தங்கள் கால்நடைகள் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய்விட்டால் (கலீஃபாவான) என்னிடம் தம் பிள்ளை குட்டிகளை அழைத்து வந்து, ‘விசுவாசிகளின் தலைவரே! நான் இவர்களை (பட்டினி கிடந்து) சாகவிட்டு விடவா?’ என்ற கேட்பார்கள். எனவே, (முஸ்லிம்களின் பொதுநிதியிலிருந்து) தங்கத்தையும் வெள்ளியையும் (அவர்களுக்குத் தருவதை) விட (அரசின் பிரத்தியேக மேய்ச்சல் நிலங்களிலிருந்து) தண்ணீரையும் புற்பூண்டுகளையும் தருவது எனக்கு இலேசானதாகும்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவர்களுக்கு அநீதியிழைத்து விட்டதாக இவர்கள் கருதுகிறார்கள். இது அவர்களின் நாடு. இதற்காக இவர்கள் அறியாமைக் காலத்திலும் போரிட்டிருக்கிறார்கள்; இஸ்லாத்தின் காலத்திலும் இஸ்லாத்தைத் தழுவி இதற்காகப் போரிட்டிருக்கிறார்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! இறைவழியில் (போரிடுவோரை) நான் ஏற்றியனுப்ப வேண்டிய (கால்நடைச்) செல்வம் மட்டும் தேவையில்லையென்றால் இவர்களுடைய நாட்டிலிருந்து ஓர் அங்குலத்தைக் கூட (கையகப்படுத்தி) பிரத்தியேக மேய்ச்சல் நிலமாக நான் ஆக்கியிருக்க மாட்டேன்’ என்று கூறினார்கள்.
Book :56