خَلَقَ اللَّهُ آدَمَ وَطُولُهُ سِتُّونَ ذِرَاعًا، ثُمَّ قَالَ: اذْهَبْ فَسَلِّمْ عَلَى أُولَئِكَ مِنَ المَلاَئِكَةِ، فَاسْتَمِعْ مَا يُحَيُّونَكَ، تَحِيَّتُكَ وَتَحِيَّةُ ذُرِّيَّتِكَ، فَقَالَ السَّلاَمُ عَلَيْكُمْ، فَقَالُوا: السَّلاَمُ عَلَيْكَ وَرَحْمَةُ اللَّهِ ، فَزَادُوهُ: وَرَحْمَةُ اللَّهِ، فَكُلُّ مَنْ يَدْخُلُ الجَنَّةَ عَلَى صُورَةِ آدَمَ، فَلَمْ يَزَلِ الخَلْقُ يَنْقُصُ حَتَّى الآنَ
அத்தியாயம்: 60.
நபிமார்களின் செய்திகள்.
பாடம்: 1
ஆதம் (அலை) அவர்களையும், அவர்களின் சந்ததிகளையும் படைத்தது.
அல்லாஹ் கூறுகின்றான்: கருப்புக் களிமண்ணில் இருந்து – மணல் கலந்த களிமண்ணில் இருந்து – மனிதனைப் படைத்தோம். (அல்குர்ஆன்: 15:26)
இங்கு காய்ந்த களிமண் என்பதைக் குறிக்க மூலத்தில் ‘ஸல்ஸால்’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது மணலுடன் கலந்த காய்ந்த களிமண்ணைக் குறிக்கும். குயவன் சுட்ட மண்பானையைத் தட்டும்போது எழும் சப்தத்தைப் போன்று இதிலும் (ஸல்ஸல் எனும்) சப்தம் எழும். நாற்றமெடுக்கும் களிமண் என்றும் சொல்லப்படுகிறது.
கதவு சாத்தப்படும்போது எழும் சப்தத்தை ‘ஸர்ஸர்’ என்பர். நான் அதைக் கவிழ்த்தேன் என்பதைக் குறிக்கும் ‘கப்கப்துஹு’ என்பது போன்றதாகும்.
புறட்டும்போது எழும் சப்தத்திற்கு யிகப் கப்’ என்பர். அவ்வாறே, காய்ந்த களிமண் தட்டப்படும் போது எழும் சப்தம் ‘ஸல்ஸல்’ எனப்படுகிறது.
…..அவன்தான் உங்களை ஒரே உயிரிலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் துணையையும் படைத்தான். அதனிடம் மனஅமைதி பெறுவதற்காக அவர் அவளைத் தழுவியபோது, அவள் (சிரமமில்லாத) எளிய கர்ப்பத்தைச் சுமந்தாள். அது அவளில் தொடர்ந்தது … (அல்குர்ஆன்: 7:189)
அதாவது கர்ப்பம் அவளில் முழுமை அடையும்வரை நீடித்தது.
(ஆதமுக்குச் சிரம்பணியுமாறு ஷைத்தானே!) உனக்கு நான் கட்டளையிட்டபோது, சிரம்பணியாமல் (அதாவது சிரம்பணிவதிலிருந்து) உன்னைத் தடுத்தது எது? (அல்குர்ஆன்: 7:12)
(நபியே!) உம்முடைய இறைவன் வானவர்களிடம், ‘‘நான் பூமியில் வாழையடி வாழையாக வரும் ஓர் இனத்தைப் படைக்கப்போகிறேன்” என்று கூறியதை எண்ணிப்பார்ப்பீராக! (அல்குர்ஆன்: 2:30)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வோர் உயிர்மீதும் கண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை. (அல்குர்ஆன்: 86:4)
இதிலுள்ள யிலம்மா’ என்பதற்கு யிஇல்லா’ என்பதன் பொருளாகும். மனிதனைச் சிரமப்படுபவனாகவே (கபத்) நாம் படைத்துள்ளோம். (அல்குர்ஆன்: 90:4)
அதாவது மற்றெல்லாப் படைப்புகளைவிடச் சிரமப்படுபவனாக.
ஆதமின் மக்களே! (மனிதர்களே!) உங்களின் அலங்காரத்தையும் (ரீஷ்) உங்களுக்கு நாம் அருளியுள்ளோம். (அல்குர்ஆன்: 7:26)
இதில் யிரீஷ்’ என்பது ஆடை அலங்காரத் தைக் குறிக்கும். இதையே சிலர் யிரியாஷ்’ என உச்சரித்துள்ளனர். இதறகு செல்வம்’ என்பது பொருள். ரீஷ், ரியாஷ் இரண்டுமே, வெளியே தெரியும் ஆடையைக் குறிக்கும் என்றே மற்றவர்கள் கூறுகின்றனர்.
விந்தாகச் செலுத்துகிறீர்களே அதைப் பற்றிச் சிந்தித்துக் பார்த்தீர்களா?. (அல்குர்ஆன்: 56:58)
அதாவது பெண்களின் கருப்பையில் செலுத்தும் விந்து குறித்துச் சிந்தித்தீர்களா? முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நிச்சயமாக அவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன்: (86:8) அதாவது விந்தை ஆணுறுப்பில் திருப்பிக் கொண்டுவருவதற்கு அவன் ஆற்றலுள்ளவன்.
இரட்டையின் மீதும் ஒற்றையின் மீதும் சத்தியமாக!. (அல்குர்ஆன்: 89:3)
இறைவன் படைத்துள்ள ஒவ்வொரு பொருட்களும் இணைகள்தான். வானத்திற்கும் இணை (பூமி) உண்டு. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மட்டுமே ஒற்றையானவன். மனிதனை அழகிய வடிவில் (தக்வீம்) படைத்தோம். பின்னர் அவனைக் கீழிலும் கீழாக மாற்றினோம். (அல்குர்ஆன்: 95:4,5)
அழகிய உருவில் படைக்கப்பட்ட மனிதன் (தன் செயல்களால்) அவ்வாறு மாறுகிறான்; இறைநம்பிக்கை கொண்டோர் தவிர. நிச்சயமாக மனிதன் இழப்பில் இருக்கிறான் (103:2) என்று கூறிவிட்டு, இறைநம்பிக்கை கொண்டோர் தவிர என விலக்களிக்கின்றான் இறைவன்.
நிச்சயமாக நாம் அவர்களை பிசுபிசுப்பான (லாஸிப்) களிமண்ணால் படைத்தோம் (37:11).
யிலாஸிப்’ என்றால் யிஒட்டிக்கொள்கிற’ என்பது பொருள். நீங்கள் அறியாத வகையில் (அதாவது நாம் விரும்பும் ஏதோவொரு வடிவில்) உங்களை நாம் படைக்க இயலாதோர் அல்லர். (56:61)
நாங்கள்தான் உன்னைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருக்கிறோமே (மகிமைப் படுத்துகிறோமே!) என்று (வானவர்கள்) கூறினர். (2:30)
அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில சொற்களைப் பெற்றார் (2:37).
‘‘எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக்கொண்டோம்” (7:23) என்பது தான் அச்சொற்கள். அவ்விருவரையும் ஷைத்தான் வழி தவறச் செய்தான் (அஸல்லஹுமா). (2:36) உமது உணவும் பானமும் கெட்டுப் போகாமல் (லம் யத்தசன்னஹ்) இருப்பதைக் காண்பீராக! (2:259). மாற்றமடையாத தண்ணீர் (47:15). ஆசின்லிமாற்றமடைவது. பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்ணிலிருந்து (மஸ்னூன்) மனிதனை நாம் படைத் தோம் (15:26).
மஸ்னூன்லிமாற்றமடைந்தது; யிஹமஉ’ (களிமண்) என்பது யிஹம்அத்’ என்பதன் பன்மை. இதற்கு (நிறம்) மாறிய களிமண் என்பது பொருள். அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்தபோது, அவர்களின் வெட்கத் தலங்கள் (பிறப்புறுப்புகள்) அவர்களுக்கு வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைப் பறித்து (யக்ஸிஃபானி) தம்மேல் போர்த்திக்கொள்ளத் தலைப்பட்டனர். (7:22)
அதாவது இலைகளை எடுத்து ஒன்றோடு ஒன்றை இணைத்து உடலில் போர்த்திக்கொண்டனர். குறிப்பிட்ட காலம் (ஹீன்)வரை அனுபவிக்கும் வசதியாக (இவ்வுலக வாழ்க்கை) இருக்கலாம். (21:11) அதாவது இப்போதிருந்து மறுமை நாள்வரை. அரபியரிடம் யிஹீன்’ என்பது சிறிது நேரத்தையும் எண்ண முடியாத காலத்தையும் குறிக்கும்.
அவனும் (ஷைத்தானும்) அவனுடைய படையும், அவர்களை நீங்கள் பார்க்காத வகையில் உங்களைப் பார்க்கின்றனர் (7:27).
அவனுடைய படை அவனுடைய வழித்தோன்றல்கள். அவனும் அவர்களில் அடங்குவான்.
3326. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்களை (களிமண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது. பிறகு, ‘‘நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக்கொள்ளுங்கள். அது தான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்” என்று சொன்னான்.
அவ்வாறே ஆதம் (அலை) அவர்கள் (வானவர்களிடம் சென்று), ‘‘அஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது சாந்தி பொழியட்டும்)” என்று கூறினார்கள். அதற்கு வானவர்கள், ‘‘உங்கள்மீதும் சாந்தியும் இறைக் கருணையும் பொழியட்டும்” என்று பதில் கூறினார்கள். இறைவனின் கருணையும் (உங்கள்மீது பொழியட்டும்) எனும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) கூடுதலாகச் சொன்னார்கள்.
ஆகவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் (அலை) அவர்களின் உருவத்தில்தான் நுழைவார்கள். ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்து இன்றுவரை (மனிதப்) படைப்புகள் (உருவத்திலும், அழகிலும்) குறைந்துகொண்டே வருகின்றன.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
அத்தியாயம்: 60