ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الفَتْحِ، فَوَجَدْتُهُ يَغْتَسِلُ وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ، قَالَتْ: فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: «مَنْ هَذِهِ» ، فَقُلْتُ: أَنَا أُمُّ هَانِئٍ بِنْتُ أَبِي طَالِبٍ فَقَالَ: «مَرْحَبًا بِأُمِّ هَانِئٍ»، فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ، قَامَ فَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ، فَلَمَّا انْصَرَفَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، زَعَمَ ابْنُ أُمِّي أَنَّهُ قَاتِلٌ رَجُلًا قَدْ أَجَرْتُهُ، فُلاَنَ ابْنَ هُبَيْرَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ يَا أُمَّ هَانِئٍ» قَالَتْ أُمُّ هَانِئٍ: وَذَاكَ ضُحًى
357. உம்முஹானி பின்த் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். (வெற்றி கிட்டிய அந்த நாளில்) நபி (ஸல்) அவர்கள் குளித்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களை, அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் (ஒரு துணியால்) மறைத்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அவர்களுக்கு நான் ஸலாம் கூறினேன். (அதைக் கேட்ட) அவர்கள், “யார் அது?” என்று கேட்டார்கள். அதற்கு “நான் உம்மு ஹானீ பின்த் அபீதாலிப்” என்றேன். “உம்மு ஹானியே! வருக!” என்று சொன்னார்கள்.
அவர்கள் குளித்து முடித்ததும் ஒரே ஆடையை மாற்றிப் போட்டுக்கொண்டு எட்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
அவர்கள் தொழுது முடித்ததும், “அல்லாஹ்வின் தூதரே! என் தாயாரின் மகன் (என் சகோதரர் அலீ,) நான் புகலிடம் அளித்திருக்கும் ஒரு மனிதரை (ஹுபைராவின் மகன் இன்னாரை) தாம் கொல்லப் போவதாகக் கூறுகிறார்” என்று சொன்னேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உம்மு ஹானியே! நீ அபயம் அளித்தவருக்கு நாமும் அபயம் அளித்து விட்டோம் (ஆகவே கவலை வேண்டாம்)” என்று கூறினார்கள். (நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற) அந்த நேரம் முற்பகல் (ளுஹா) நேரமாக இருந்தது.
அத்தியாயம் : 8