أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَقَطَ عَنْ فَرَسِهِ فَجُحِشَتْ سَاقُهُ – أَوْ كَتِفُهُ – وَآلَى مِنْ نِسَائِهِ شَهْرًا، فَجَلَسَ فِي مَشْرُبَةٍ لَهُ دَرَجَتُهَا مِنْ جُذُوعٍ، فَأَتَاهُ أَصْحَابُهُ يَعُودُونَهُ، فَصَلَّى بِهِمْ جَالِسًا وَهُمْ قِيَامٌ، فَلَمَّا سَلَّمَ قَالَ: «إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَإِنْ صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا» وَنَزَلَ لِتِسْعٍ وَعِشْرِينَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ آلَيْتَ شَهْرًا، فَقَالَ: «إِنَّ الشَّهْرَ تِسْعٌ وَعِشْرُونَ»
378. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணம் செய்துகொண்டிருந்தபோது) தமது குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டார்கள். இதனால் அவர்களது ‘கணைக்கால்’ அல்லது ‘தோள்பட்டை’யில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது.
மேலும், (இந்தக் காலகட்டத்தில்) நபி (ஸல்) அவர்கள் ‘தம் துணைவியரை ஒரு மாத காலத்திற்கு நெருங்கமாட்டேன்’ என்று சத்தியமும் செய்திருந்தார்கள். அப்போது அவர்கள் தமக்குரிய மாடி அறையொன்றில் ஏறி அமர்ந்தார்கள். அதன் படிகள் பேரீச்சங்கட்டையால் ஆனவை.
ஆகவே, அவர்களுடைய தோழர்கள் அவர்களிடம் உடல்நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது அவர்களுக்கு அமர்ந்தவாறே தொழுவித்தார்கள்; தோழர்கள் நின்றவாறு தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்(து தொழுகையை முடித்)தபோது, “பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள்; அவர் ருகூஉ செய்தால் ருகூஉ செய்யுங்கள்; அவர் சஜ்தா செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் நின்றவராகத் தொழுதால் நீங்களும் நின்றவாறு தொழுங்கள்” என்று சொன்னார்கள்.
(அந்த அறையிலிருந்து) அவர்கள் இருபத்தொன்பதாம் நாள் இறங்கிவந்தார்கள். அப்போது மக்கள், “ஒரு மாத காலம் தங்கள் துணைவியரை நெருங்கமாட்டேன் எனத் தாங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இந்த மாதத்திற்கு இருபத்தொன்பது நாட்கள்தான்” என்று கூறினார்கள்.
அத்தியாயம்: 8