لَمَّا غَزَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ، أَوْ قَالَ: لَمَّا تَوَجَّهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَشْرَفَ النَّاسُ عَلَى وَادٍ، فَرَفَعُوا أَصْوَاتَهُمْ بِالتَّكْبِيرِ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ارْبَعُوا عَلَى أَنْفُسِكُمْ، إِنَّكُمْ لاَ تَدْعُونَ أَصَمَّ وَلاَ غَائِبًا، إِنَّكُمْ تَدْعُونَ سَمِيعًا قَرِيبًا وَهُوَ مَعَكُمْ»،
وَأَنَا خَلْفَ دَابَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَمِعَنِي وَأَنَا أَقُولُ: لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَقَالَ لِي: «يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ». قُلْتُ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «أَلاَ أَدُلُّكَ عَلَى كَلِمَةٍ مِنْ كَنْزٍ مِنْ كُنُوزِ الجَنَّةِ» قُلْتُ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، فَدَاكَ أَبِي وَأُمِّي، قَالَ: «لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ»
4205. அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்தபோது அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கைபரை) நோக்கிச் சென்று (வெற்றி பெற்றுத்) திரும்பிய போது…
மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறுகையில், “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியோன்), “லாஇலாஹ இல்லல்லாஹ்” (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று குரல்களை உயர்த்திக் கூறினர்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில்லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்’ என்று கூறினார்கள்.
அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனப் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு, “லாஹவ்ல வலா ஃகுவ்வத்த இல்லா பில்லாஹ்” (அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது) என்று கூறுவதைக் கேட்டார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் இப்னு கைஸே!’ என்று அழைத்தார்கள். “கூறுங்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே!” என்று நான் பதிலளித்தேன்.
அதற்கு அவர்கள், “உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்” என்று கூறினார்கள். நான், “சரி (கட்டாயம் கூறுங்கள்) அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், (அந்த வார்த்தை,) “லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்” தான் என்று கூறினார்கள்.
அத்தியாயம்: 64