பாடம் : 65 ஜரீர் (ரலி) அவர்கள் யமன் நாட்டிற்குச் சென்றது390
4359. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நான் யமன் நாட்டில் இருந்தேன். அப்போது யமன் வாசிகளில் ‘தூ கலாஉ’ மற்றும் ‘தூ அம்ர்’ ஆகிய இருவரை சந்தித்தேன். அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பற்றிப் பேசலானேன். அப்போது ‘தூ அம்ர்’ என்னிடம், ‘நீங்கள் சொல்லும் உங்கள் தோழரின் செய்தி உண்மையெனில் அவர் இறந்து போய் மூன்று நாள்கள் கடந்துவிட்டன என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்’ என்றார். அவர்கள் இருவரும் என்னுடன் வந்தார்கள். நாங்கள் இன்னும் பயணத்திலேயே இருந்து கொண்டிருக்கும்போது மதீனாவின் திசையிலிருந்து ஒரு பயணக் கூட்டம் வந்து கொண்டிருப்பது தென்பட்டது. நாங்கள் அவர்களிடம் விசாரித்தோம். அவர்கள், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். அபூ பக்ர் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டுவிட்டார்கள். மக்கள் அனைவரும் நல்லவர்களாக உள்ளனர்’ என்று பதிலளித்தனர். உடனே, தூ கலாஉ மற்றும் தூ அம்ர் இருவரும் , ‘நாங்கள் இருவரும் வந்திருந்தோம். (எனினும், இப்போது திரும்பிச் செல்கிறோம்.) இறைவன் நாடினால் (அவரிடம்) திரும்பி வருவோம்’ என்று உங்கள் தோழரிடம் (அபூ பக்ரிடம்) சொல்லுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்கள். பிறகு யமன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றார்கள். நான் அபூ பக்ர் அவர்களிடம் யமன் வாசிகளின் செய்தியைத் தெரிவித்தேன். அபூ பக்ர் அவர்கள், ‘அவர்களை (என்னிடம்) நீங்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா?’ என்று கேட்டார்கள். பிறகு (என்னைச் சந்திக்கும்) ஒரு சந்தர்ப்பம் வந்தபோது தூ அம்ர், ‘ஜரீரே! நீங்கள் எனக்கு உபகாரம் செய்திருக்கிறீர்கள். எனவே, நான் உங்களுக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறேன். அரபு மக்களாகிய நீங்கள், தலைவர் ஒருவர் இறந்துவிட்டால், (உங்களுக்குள் ஒருவரையொருவர் கலந்தாலோசித்து) வேறொருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வரை நன்மையில் இருப்பீர்கள். (ஆட்சித் தலைமை) வாள் பலத்தால் உருவாவதாயிருந்தால், ஆட்சித் தலைவர்களாக வருபவர்கள் மன்னர்களாக இருப்பார்கள். அவர்கள் மன்னர்கள் கோபப்படுவதைப் போன்றே (சொந்த நலன்களுக்காகக்) கோபப்பட்டு, மன்னர்கள் திருப்தியடைவதைப் போன்றே (சொந்த நலன்களுக்காகத்) திருப்தியடைவார்கள்.
Book : 64