🔗

புகாரி: 4855

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قُلْتُ لِعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: يَا أُمَّتَاهْ هَلْ رَأَى مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَبَّهُ؟ فَقَالَتْ: لَقَدْ قَفَّ شَعَرِي مِمَّا قُلْتَ، أَيْنَ أَنْتَ مِنْ ثَلاَثٍ، مَنْ حَدَّثَكَهُنَّ فَقَدْ كَذَبَ: مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَبَّهُ فَقَدْ كَذَبَ، ثُمَّ قَرَأَتْ: {لاَ تُدْرِكُهُ الأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الأَبْصَارَ وَهُوَ اللَّطِيفُ الخَبِيرُ} [الأنعام: 103]، {وَمَا كَانَ لِبَشَرٍ أَنْ يُكَلِّمَهُ اللَّهُ إِلَّا وَحْيًا أَوْ مِنْ وَرَاءِ حِجَابٍ} [الشورى: 51]. وَمَنْ حَدَّثَكَ أَنَّهُ يَعْلَمُ مَا فِي غَدٍ فَقَدْ كَذَبَ، ثُمَّ قَرَأَتْ: {وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا} [لقمان: 34]. وَمَنْ حَدَّثَكَ أَنَّهُ كَتَمَ فَقَدْ كَذَبَ، ثُمَّ قَرَأَتْ: {يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ} [المائدة: 67] الآيَةَ وَلَكِنَّهُ «رَأَى جِبْرِيلَ عَلَيْهِ السَّلاَمُ فِي صُورَتِهِ مَرَّتَيْنِ»


பாடம்: 53.

‘அந்நஜ்ம்’ எனும் 53 ஆவது அத்தியாயம்.

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…)

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(அல்குர்ஆன்: 53:6) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃதூ மிர்ரா’ எனும் சொல்லுக்கு ‘வலிமை வாய்ந்தவர்’ என்பது பொருள்.

(அல்குர்ஆன்: 53:9) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காப கவ்சைன்’ (வில்லின் இரு முனைகளுக்குச் சமமான அளவு) என்பது, வில்லில் நாண் இருக்கும் இடத்தைக் குறிக்கிறது.

(அல்குர்ஆன்:53:22) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளீஸா’ எனும் சொல்லுக்கு ‘வளைந்தது’ என்பது பொருள்.

(அல்குர்ஆன்: 53:34) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ அக்தா’ எனும் சொல்லுக்கு ‘மேலும் தான் கொடுப்பதை நிறுத்திக்கொண்டான்’ என்று பொருள்.

(அல்குர்ஆன்: 53:49) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரப்புஷ் ஷிஅரா’ என்பதிலுள்ள ‘ஷிஅரா’ எனும் சொல், ‘மிர்ஸமுல் ஜவ்ஸாஉ’ எனும் நட்சத்திரத்தைக் குறிக்கும்.

(அல்குர்ஆன்: 53:37) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்லஃதீ வஃப்பா’ (நிறைவேற்றிய அவர்) என்பது, ‘தம்மீது விதியாக்கப்பட்டிருந்த இறையாணைகளை நிறைவேற்றிய இப்ராஹீம் (அலை) அவர்களைக் குறிக்கும்.

(அல்குர்ஆன்: 53:57) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸிஃபத்தில் ஆஸிஃபா’ (வரவேண்டிய நேரம் நெருங்கி வந்துவிட்டது) எனும் வாக்கியத்திற்கு ‘மறுமை நெருங்கிவிட்டது’ என்று பொருள்.

(அல்குர்ஆன்: 53:61) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாமிதூன்’ எனும் சொல்லுக்கு ‘ஆடிப்பாடி ஆர்ப்பாட்டம் செய்கிறீர்’ என்று பொருள். ‘‘யமன் நாட்டுப் பாடல்களைப் பாடி ஆரவாரம் செய்தனர் என்பதையே இந்த வசனம் குறிப்பிடுகிறது” என இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(அல்குர்ஆன்: 53:12) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அ ஃப துமாரூனஹு’ எனும் சொல்லுக்கு, ‘நீங்கள் அவருடன் தர்க்கம் செய்கிறீர்களா?’ என்று பொருள். (இதை) ‘அ ஃப தம்ரூனஹு’ என்று ஓதியவர்கள் ‘அவரை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்களா?’ என்று பொருள் கொள்கின்றனர்.

(அல்குர்ஆன்: 53:17) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மா ஸாஃகல் பஸர்’ (பார்வை விலகிவிடவுமில்லை) என்பதிலுள்ள பார்வை என்பது, முஹம்மத் (ஸல்) அவர்களின் பார்வையைக் குறிக்கும். ‘வமா தஃகா’ எனும் சொல்லுக்கு ‘‘அவரது பார்வை, தான் கண்டதைக் கடந்துவிடவுமில்லை” என்று பொருள்.

அடுத்த அத்தியாயமான (அல்குர்ஆன்: 54:36) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபதமாரவ்’ எனும் சொல்லுக்கு, ‘அவர்கள் (எல்லா எச்சரிக்கைகளையும்) பொய்யனவை எனக் கருதினர்’ என்று பொருள்.

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(அல்குர்ஆன்: 53:1) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘இதா ஹவா’ எனும் சொல்லுக்கு ‘அது மறையும்போது’ என்று பொருள்.

(அல்குர்ஆன்: 53:48) ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அஃக்னா வ அக்னா’ எனும் வாக்கியத்திற்கு, ‘அவனே செல்வத்தை வழங்கித் தன்னிறைவு அடையச்செய்தான்’ என்று பொருள்.


பாடம்: 1

4855. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘அன்னையே! முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (விண்ணுலகப் பயணத்தின்போது நேரில்) பார்த்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்துவிட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கிறாரோ அவர் பொய்யுரைத்துவிட்டார்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் கூறுகிறாரோ அவர் பொய் சொல்லிவிட்டார்” என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) ‘‘கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்” எனும் (அல்குர்ஆன்: 6:103) ஆவது வசனத்தையும், ‘‘எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹீயின் (வேதஅறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை” எனும் (அல்குர்ஆன்: 42:51) ஆவது வசனத்தையும் ஓதினார்கள்.

மேலும், ‘‘எவர் உங்களிடம் முஹம்மத் (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்” என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார்” என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) ‘‘எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப்போகிறான் என்பதை அறிவதில்லை” எனும் (அல்குர்ஆன்: 31:34) ஆவது வசனத்தை ஓதினார்கள்.

மேலும், ‘‘எவர் உங்களிடம் முஹம்மத் (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்து விடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்துவிட்டார்கள்” என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார் என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) ‘‘தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உம்மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக!…” எனும் (அல்குர்ஆன்: 5:67) ஆவது வசனத்தை ஓதினார்கள்.

‘‘மாறாக, முஹம்மத் (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம்: 65