أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَ عُمَرُ بْنُ الخَطَّابِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُرْهُ فَلْيُرَاجِعْهَا، ثُمَّ لِيُمْسِكْهَا حَتَّى تَطْهُرَ، ثُمَّ تَحِيضَ ثُمَّ تَطْهُرَ، ثُمَّ إِنْ شَاءَ أَمْسَكَ بَعْدُ، وَإِنْ شَاءَ طَلَّقَ قَبْلَ أَنْ يَمَسَّ، فَتِلْكَ العِدَّةُ الَّتِي أَمَرَ اللَّهُ أَنْ تُطَلَّقَ لَهَا النِّسَاءُ»
அத்தியாயம்: 68
மணவிலக்குச் செய்தல்.
பாடம்: 1
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நபியே! (மக்களிடம் கூறுக:) நீங்கள் பெண்களுக்கு மணவிலக்கு அளிப்பீர்களானால், அவர்களுடைய ‘இத்தா’விற்கேற்ற நேரத்தில் மணவிலக்கு அளித்து, ‘இத்தா’வைக் கணக்கிட்டுவாருங்கள். (அல்குர்ஆன்: 65:1)
இந்த வசனத்தின் மூலத்திலுள்ள ‘அஹ்ஸூ’ எனும் சொல்லின் வினைச் சொல்லான) ‘அஹ்ஸய்னாஹு’ எனும் சொல்லுக்கு ‘அதை நாம் கணக்கிட்டு மனனமிட்டோம்’ என்பது பொருள். ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளாமல் (மாதவிடாய் போன்றவற்றிலிருந்து) அவள் தூய்மையானவளாய் இருக்கும் சமயத்தில் இரு சாட்சிகளின் முன்னிலையில் அளிக்கின்ற மணவிலக்கு (நபிவழியில் அமைந்த) ‘தலாக்குஸ் ஸுன்னா’ ஆகும்.
5251. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தாள்.
ஆகவே, (என் தந்தை) உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம், ‘‘உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்: அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் அதிலிருந்து அவள் தூய்மையடையும்வரை அவளைத் தம்மிடமே வைத்திருக்கட்டும்.
பிறகு அவர் நாடினால், (இரண்டாம் மாதவிடாயிலிருந்து தூய்மையான) பின்னர் (தொடர்ந்து அவளை) தம்மிடமே (தம் மனைவியாக) வைத்திருக்கட்டும். அவர் நாடினால் அவளுடன் உடலுறவு கொள்வதற்கு முன்பாக அவளை மணவிலக்குச் செய்யட்டும்.
(மாதவிடாயிலிருந்து தூய்மையான) இந்தக் காலகட்டமே மனைவியரை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் (அல்குர்ஆன்: 2:228) ஆவது வசனத்தில் அனுமதித்துள்ள (‘இத்தா’ காலத்தைக் கணக்கிட்டுக்கொள்வதற்கு ஏற்ற) காலகட்டமாகும்” என்று சொன்னார்கள்.
அத்தியாயம்: 68