أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، ثَابِتُ بْنُ قَيْسٍ، مَا أَعْتِبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الكُفْرَ فِي الإِسْلاَمِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ؟» قَالَتْ: نَعَمْ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْبَلِ الحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً»
பாடம்: 12
‘அல்குல்உ’ (ஈடாக ஏதேனும் கொடுத்து ஒரு பெண் தன் கணவனிடமிருந்து பிரிந்துகொள்வது) பற்றியும், அதுவே மணவிலக்கு ஆகிவிடுமா என்பது பற்றியும்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: (தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர, மனைவியருக்கு நீங்கள் வழங்கிய எந்தப் பொருளையும் (திரும்பப்) பெறுவது உங்களுக்குத் தகாது. அப்படி அவ்விருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என நீங்கள் அஞ்சினால், அவள் ஈட்டுத் தொகை வழங்குவதில் (கணவன் அதைப் பெறுவதில்) இருவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (அல்குர்ஆன்: 2:229)
ஆட்சியாளர் (அல்லது நீதிபதியின் அனுமதி) இல்லாமலேயே ‘குல்உ’ நிகழ்வதை உமர் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மனைவியின் பின்னலில் கட்டும் கயிற்றைத் தவிர (அவளின் அனைத்துச் சொத்துகளுக்கும் ஈடாக) ‘குல்உ’ நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.
தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என அஞ்சினால் தவிர…” எனும் (அல்குர்ஆன்: 2:229) ஆவது வசனத் தொடரின் கருத்தாவது: இல்லற வாழ்க்கையிலும் பரஸ்பர உறவிலும் தம்பதியரில் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமையென அல்லாஹ் விதித்துள்ளவற்றை அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என அஞ்சினால் தவிர.
(உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு) உன் மூலம் ஏற்பட்ட பெருந்துடக்கிற்காக நான் குளிக்கப்போவதில்லை என்று மனைவி கூறுகின்ற அளவுக்கு (பிணக்கு முற்றியதாக) இருந்தால்தான் ‘குலா’ செய்வது செல்லும் என்று விவரம் அறியாத சிலர் கூறியதைப் போன்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறவில்லை.
5273. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறைமறுப்புக்குரிய செயலைச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று கூறினார்.
அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘ஆம் (தந்துவிடுகிறேன்)” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), ‘‘தோட்டத்தை ஏற்றுக்கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லிவிடுங்கள்!” என்று கூறினார்கள்.
அபூஅப்துல்லாஹ் (புகாரி இமாம்) கூறுகிறார்:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் இந்த அறிவிப்பாளர்தொடரில் ‘முதாபஆ’ (அறிவிப்பாளர்தொடரில் ஒற்றுமை) இல்லை.
(அதாவது புகாரி அவர்கள் இதன் மூலம் கூறும் தகவல்: இந்தச் செய்தியை காலித் அல்ஹத்தாஃ அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள் இதில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைக் கூறாமல் முர்ஸலாக அறிவித்துள்ளனர். அஸ்ஹர் பின் ஜமீல் மட்டுமே இதில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைக் கூறியுள்ளார் என்பதாகும். எனவே முதாபஅத் இல்லை என்கிறார். மேலும் இந்தச் செய்தி அய்யூப் அவர்கள் வழியாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறப்பட்டு மவ்ஸூலாக-அறிவிப்பாளர்தொடரில் முறிவு ஏற்படாமல் வந்துள்ளது. முர்ஸலாகவும் வந்துள்ளது)
விரிவாக பார்க்க: புகாரி-5276)
அத்தியாயம்: 68