பாடம் : 88 விருந்தாளி தம் தோழரிடம் ‘நீங்கள் சாப்பிடாதவரை நானும் சாப்பிடமாட்டேன்’ என்று கூறுவது. இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் வந்துள்ளது.157
6141. அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
(என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்கள் ‘தம் விருந்தாளியுடன்’ அல்லது ‘தம் விருந்தினருடன்’ (எங்கள் வீட்டிற்கு) வந்தார்கள்.
பிறகு மாலையில் (இஷாத் தொழும் வரை) நபி(ஸல்) அவர்களிடம் இருந்தார்கள். பிறகு அவர்கள் (திரும்பி) வந்தபோது என் தாயார் (உம்மு ரூமான்) ‘இன்றிரவு தங்கள் ‘விருந்தாளியை’ அல்லது ‘விருந்தினரை’ இங்கேயே (காத்து) இருக்கும்படி செய்து விட்டீர்களே!’ என்று கேட்டார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள், ‘அவர்களுக்கு நீ இரவு சாப்பாடு கொடுக்கவில்லையா?’ என்று கேட்டார்கள். அதற்கு என் தாயார் ‘நான் ‘இவரிடம்’ அல்லது ‘இவர்களிடம்’ சாப்பிடச் சொன்னேன். ஆனால் ‘இவர்’ அல்லது ‘இவர்கள்’ (சாப்பிட) மறுத்துவிட்டனர்’ என்று கூறினார்கள். இதனால் (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்கள் கோபமடைந்தார்கள்; ஏசினார்கள்; ‘உன் மூக்கறுந்து போக’ என (என்னை)த் திட்டினார்கள். மேலும், தாம் சாப்பிடப்போவதில்லை எனச் சத்தியம் செய்தார்கள். நான் ஒளிந்து கொண்டேன். அப்போது அவர்கள், ‘அறிவில்லாதவனே!’ என்று (என்னை) அழைத்தார்கள். ‘என் தந்தை சாப்பிடாமல் தாமும் சாப்பிடப் போவதில்லை என்று என் தாயாரும் சத்தியம் செய்தார்கள். என் தந்தை சாப்பிடாதவரை தாங்களும் சாப்பிடப்போவதில்லை என ‘விருந்தாளி’ அல்லது ‘விருந்தாளிகளும்’ சத்தியம் செய்தனர். அப்போது (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) அவர்கள் ‘இந்த நிலை ஷைத்தானால் ஏற்பட்டுவிட்டது போலும்’ என்று கூறிவிட்டு உணவு கொண்டு வரச்சொல்லி தாமும் சாப்பிட்டார்கள். விருந்தினரும் சாப்பிட்டனர்.
அவர்கள் ஒவ்வொரு கவளம் உணவு எடுக்கும் போதும் அதன் கீழ் பகுதியிலிருந்து (உணவு) அதிகமாம்க் கொண்டே இருந்தது. அப்போது என் தந்தை அபூ பக்ர்(ரலி) அவர்கள் (என் தாயாரிடம்), ‘பனூ ஃபிராஸ் குலத்தவளே! இது என்ன (பெருக்கம்)?’ என்று கேட்டார்கள். என் கண் குளிர்ச்சியின் மீது சத்தியமாக! நாம் சாப்பிடுவதற்கு முன்னால் இருந்ததை விட இப்போது (மும்மடங்கு) கூடுதலாக உள்ளதே!’ என்று கூறினார்கள். பிறகு அனைவரும் சாப்பிட்டோம். அந்த உணவை நபி(ஸல்) அவர்களுக்கும் கொடுத்தனுப்பினார்கள். நபி(ஸல்) அவர்களும் அதைச் சாப்பிட்டார்கள்.
Book : 78