பாடம் : 40 பள்ளிவாசலில் மதிய ஓய்வெடுப்பது
6280. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
(தம் பெயர்களில்) ‘அபூ துராப்’ (மண்ணின் தந்தை) எனும் பெயரைவிட வேறெந்தப் பெயரும் அலீ(ரலி) அவர்களுக்கு விருப்பமானதாக இருக்கவில்லை. அப்பெயர் கூறி அழைக்கப்படும்போது அவர்கள் (மிகவும்) மகிழ்வார்கள். (ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் புதல்வி) ஃபாத்திமா(ரலி) அவர்களின் இல்லத்திற்கு வந்தார்கள். அப்போது அலீ அவர்களை வீட்டில் காணவில்லை. எனவே, நபி அவர்கள் ‘உன் பெரிய தந்தையின் புதல்வர் (உன் கணவர்) எங்கே? என்று கேட்டார்கள். அதற்கு ஃபாத்திமா(ரலி) அவர்கள், ‘எனக்கும் அவருக்குமிடையே ஒரு சின்ன பிரச்சினை ஏற்பட்டுவிட்டது. எனவே, அவர் கோபித்துக் கொண்டு என்னிடம் மதிய ஓய்வெடுத்துக் கொள்ளாமல் வெளியே சென்றார் என்று பதிலளித்தார்கள்.
அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், ‘அவர் எங்கே என்று பார்’ என்றார்கள். அவர் (சென்று தேடிவிட்டு) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அவர் பள்ளிவாசலில் உறங்கி கொண்டிருக்கிறார்’ என்றார். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்கு) வந்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள் தங்களின் மேனியிலிருந்து மேல் துண்டு கீழே விழுந்து கிடக்க, உடம்பில் மண் படிந்த நிலையில் ஒருக்களித்துப் படுத்திருந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த மண்ணை அவர்களின் உடலிலிருந்து துடைத்துக் கொண்டே ‘அபூ துராப்! (மண்ணின் தந்தையே!) எழுங்கள். அபூ துராபே ! எழுங்கள்’ என்று (இரண்டு முறை) கூறினார்கள்.
Book : 79