🔗

ஹாகிம்: 3872

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

أَنَّ الْوَلِيدَ بْنَ الْمُغِيرَةِ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَأَ عَلَيْهِ الْقُرْآنَ، فَكَأَنَّهُ رَقَّ لَهُ فَبَلَغَ ذَلِكَ أَبَا جَهْلٍ، فَأَتَاهُ فَقَالَ: يَا عَمُّ، إِنَّ قَوْمَكَ يَرَوْنَ أَنْ يَجْمَعُوا لَكَ مَالًا. قَالَ: لَمَ؟ قَالَ: لِيُعْطُوكَهُ فَإِنَّكَ أَتَيْتَ مُحَمَّدًا لِتُعْرِضَ لِمَا قِبَلَهُ قَالَ: قَدْ عَلِمَتْ قُرَيْشٌ أَنِّي مِنْ أَكْثَرِهَا مَالًا. قَالَ: فَقُلْ فِيهِ قَوْلًا يَبْلُغُ قَوْمَكَ أَنَّكَ مُنْكِرٌ لَهُ أَوْ أَنَّكَ كَارِهٌ لَهُ قَالَ: وَمَاذَا أَقُولُ «فَوَاللَّهِ مَا فِيكُمْ رَجُلٌ أَعْلَمَ بِالْأَشْعَارِ مِنِّي، وَلَا أَعْلَمَ بِرَجَزٍ وَلَا بِقَصِيدَةٍ مِنِّي وَلَا بِأَشْعَارِ الْجِنِّ وَاللَّهِ مَا يُشْبِهُ الَّذِي يَقُولُ شَيْئًا مِنْ هَذَا وَوَاللَّهِ إِنَّ لِقَوْلِهِ الَّذِي يَقُولُ حَلَاوَةً، وَإِنَّ عَلَيْهِ لَطَلَاوَةً، وَإِنَّهُ لَمُثْمِرٌ أَعْلَاهُ مُغْدِقٌ أَسْفَلُهُ، وَإِنَّهُ لَيَعْلُو وَمَا يُعْلَى وَإِنَّهُ لَيَحْطِمُ مَا تَحْتَهُ» قَالَ: لَا يَرْضَى عَنْكَ قَوْمُكَ حَتَّى تَقُولَ فِيهِ. قَالَ: فَدَعْنِي حَتَّى أُفَكِّرَ، فَلَمَّا فَكَّرَ قَالَ: ” هَذَا سِحْرٌ يُؤْثَرُ يَأْثُرُهُ مِنْ غَيْرِهِ فَنَزَلَتْ {ذَرْنِي وَمَنْ خَلَقْتُ وَحِيدًا} [المدثر: 11]


3872. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வலீத் பின் முஃகீரா என்பவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக் காட்டினார்கள். அதைக் கேட்டு வலீத் மனம் கனிந்தது போல் ஆனார். இந்தச் செய்தி அபூஜஹ்லுக்கு எட்டியது. உடனே அவன் அவரிடம் வந்து, “என் தந்தையின் சகோதரரே! உமக்குச் செல்வத்தைத் திரட்ட உமது சமூகத்தார் விரும்புகின்றனர்” என்றான்.

வலீத், “எதற்காக?” என்று கேட்டார். அபூஜஹ்ல், “அவர்கள் உமக்கு அதைக் கொடுப்பார்கள். நீங்களோ முஹம்மதுடைய செல்வத்தை பெறுவதற்காக அவரிடம் சென்றுள்ளீர்கள்” என்றான். அதற்கு வலீத், “நான் மக்காவிலேயே அதிகச் செல்வம் படைத்தவன் என்பதை குரைஷிகள் அறிவார்களே” என்றார்.

அபூஜஹ்ல், “அப்படியானால், முஹம்மதுடைய விஷயத்தில் நீ அதை மறுப்பவர் என்றோ அல்லது வெறுப்பவர் என்றோ உமது சமூகத்தார் அறியும் வண்ணம் ஏதாவது கூறுவீராக!” என்றான்.

வலீத், “நான் என்ன கூறுவது? அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களில் கவிதைகளை என்னைவிட நன்றாக அறிந்தவர் யாருமில்லை; ‘ரஜஸ்’ மற்றும் ‘கஸீதா’ கவிதைகளையும், ஜின்களின் கவிதைகளையும் என்னைவிட நன்றாக அறிந்தவர் யாருமில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் கூறுவது இவற்றில் எதையுமே ஒத்திருக்கவில்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் கூறுவதற்கு தனி இனிமையும் அழகும் உண்டு! அதன் மேல் பகுதி செழிப்பானது; கீழ் பகுதி நீர் நிரம்பியது. அது எல்லாவற்றையும் மிகைத்து நிற்கும்; அது எவராலும் மிகைக்கப்படாது. அது தனக்குக் கீழே உள்ள அனைத்தையும் நொறுக்கிவிடும்” என்றார்.

அபூஜஹ்ல், “நீ அதைப் பற்றி (குற்றஞ்சாட்டி) ஏதேனும் கூறாத வரை உமது சமூகத்தார் உன்னை திருப்தியடைய மாட்டார்கள்” என்றான். அதற்கு வலீத், “அப்படியானால் நான் சிந்திப்பதற்கு எனக்கு அவகாசம் அளிப்பாயாக!” என்றார். நன்கு சிந்தித்த பிறகு அவர், “இது மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளப்பட்ட சூனியமே தவிர வேறில்லை” என்றார்.

அப்பொழுது தான், “(யாருடைய துணையுமின்றி) நான் மட்டுமே யாரைப் படைத்தேனோ அவனை என்னோடு விட்டு விடுவீராக!” (அல்குர்ஆன் 74:11) என்ற இறைவசனம் இறங்கியது.