🔗

பைஹகீ-குப்ரா: 5376

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

خَرَجْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ مِنَ الْمَسْجِدِ ضُحًى فَلَقِيَتْنَا امْرَأَةٌ بِهَا مِنَ الْعِطْرِ شَيْءٌ لَمْ أَجِدْ بِأَنْفِي مِثْلَهُ قَطُّ، فَقَالَ لَهَا أَبُو هُرَيْرَةَ: عَلَيْكِ السَّلَامُ، فَقَالَتْ: وَعَلَيْكَ، قَالَ: فَأَيْنَ تُرِيدِينَ؟ قَالَتْ: الْمَسْجِدَ، قَالَ: وَلِأِيِّ شَيْءٍ تَطَيَّبْتِ بِهَذَا الطِّيبِ؟ قَالَتْ: لِلْمَسْجِدِ، قَالَ: آللَّهِ؟ قَالَتْ: آللَّهِ، قَالَ: آللَّهِ؟ قَالَتْ: آللَّهِ، قَالَ: فَإِنَّ حِبِّي أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَنِي أَنَّهُ ” لَا تُقْبَلُ لِامْرَأَةٍ صَلَاةٌ تَطَيَّبَتْ بِطِيبٍ لِغَيْرِ زَوْجِهَا حَتَّى تَغْتَسِلَ مِنْهُ غُسْلَهَا مِنَ الْجَنَابَةِ “، فَاذْهَبِي فَاغْتَسِلِي مِنْهُ، ثُمَّ ارْجِعِي فَصَلِّي.


5376. உபைத் பின் கஸீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலிலிருந்து ஒரு முற்பகல் நேரத்தில் வெளியேறினேன். அப்போது, ஒரு பெண் எங்களைச் சந்தித்தாள். அவளிடமிருந்த நறுமணம் போன்ற ஒன்றை நான் என் மூக்கால் அதற்கு முன் ஒருபோதும் முகர்ந்ததில்லை. அவளிடம் அபூஹுரைரா (ரலி) “அஸ்ஸலாமு அலைக்கி” (உன் மீது சாந்தி உண்டாகட்டும்) எனக் கூறினார். அதற்கு அவள், “வ அலைக்க” (உங்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்) எனக் கூறினாள்.

அவர், “எங்கே செல்ல விரும்புகிறாய்?” என்று கேட்டார். அவள், “பள்ளிவாசலுக்கு” எனக் கூறினாள். அவர், “இந்த நறுமணத்தால் எதற்காக நீ மணம் பூசிக்கொண்டாய்?” எனக் கேட்டார். அவள், “பள்ளிவாசலுக்காகத்தான்” எனக் கூறினாள். அவர், “அல்லாஹ்வின் மீதாணையாகவா?” எனக் கேட்டார். அவள், “அல்லாஹ்வின் மீதாணையாக” எனக் கூறினாள். அவர் மீண்டும், “அல்லாஹ்வின் மீதாணையாகவா?” எனக் கேட்டார். அவள், “அல்லாஹ்வின் மீதாணையாக” எனக் கூறினாள்.

அவர், “என்னுடைய நேசரான அபுல்காஸிம் (முஹம்மத் ஸல்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: ஒரு பெண், தன் கணவனுக்காக அன்றி வேறொருவருக்காக வாசனை பூசிக்கொண்டால், அவள் அந்த வாசனையிலிருந்து பெருந்துடக்குக்கு குளிப்பதைப் போன்ற ஒரு குளியலை மேற்கொள்ளும் வரை, அவளுடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது.

எனவே, “நீ சென்று அதிலிருந்து குளித்துவிட்டு, பிறகு திரும்பி வந்து தொழு!” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.


பைஹகீ இமாம் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் அவர்களின் பாட்டனாரின் பெயர் அபுல்ஹாரிஸ்-உபைத் பின் அபூஉபைத் என்பதாகும்.

அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் என்பவரின் முழுப்பெயர் அப்துர்ரஹ்மான் பின் ஹாரிஸ் பின் அபுல்ஹாரிஸ் பின் அபூஉபைத் என்பதாகும்.

இந்தச் செய்தியை ஆஸிம் பின் அப்துல்லாஹ் என்பவர் அபூருஹ்மின் அடிமையான உபைத் என்பவரிடமிருந்து அறிவித்துள்ளார்.