🔗

musannaf-abdur-razzaq-21583: 21583

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

أَنَّ عُمَرَ بن الْخَطَّابِ اسْتَعْمَلَ أَبَا هُرَيرَةَ عَلَى الْبَحْرَيْنِ، فَقَدِمَ بَعَشَرَةِ آلاَفٍ، فَقَالَ لَهُ عُمَرُ: اسْتَأْثَرْتَ بِهَذِهِ الأَمْوَالِ يَا عَدُوَّ اللهِ، وَعَدُوَّ كِتَابِهِ، قَالَ أَبو هُرَيرَةَ: لَسْتُ عَدُوَّ اللهِ، وَلاَ عَدُوَّ كِتَابِهِ، وَلَكِنِّي عَدُوُّ مَنْ عَادَاهُمَا، قَالَ: فَمِنْ أَيْنَ هِيَ لَكَ؟ قَالَ: خَيْلٌ لِي تَنَاتَجَتْ، وَغَلَّةُ رَقِيقٍ لِي، وَأُعْطِيَةٌ تَتَابَعَتْ عَلَيَّ، فَنَظَرُوهُ، فَوَجَدُوهُ كَمَا قَالَ، قَالَ: فَلَمَّا كَانَ بَعْدَ ذَلِكَ، دَعَاهُ عُمَرُ لِيَسْتَعْمِلَهُ، فَأَبَى أَنْ يَعْمَلَ لَهُ، فَقَالَ: أتَكْرَهُ الْعَمَلَ، وَقَدْ طَلَبَ الْعَمَلَ مَنْ كَانَ خَيْرًا مِنْكَ يُوسُفُ؟ قَالَ: إِنَّ يُوسُفَ نَبِيٌّ ابْنُ نَبِيٍّ ابْنِ نَبِيٍّ، وَأَنَا أَبو هُرَيرَةَ ابْنُ أُمَيَّةَ، أَخْشَى ثَلاَثًا وَاثْنَيْنِ، قَالَ لَهُ عُمَرُ: أَفَلاَ قُلْتَ: خَمْسًا؟ قَالَ: لاَ، أَخْشَى أَنْ أَقُولَ بِغَيْرِ عِلْمٍ، وَأَقْضِيَ بِغَيْرِ حُكْمٍ، وَيُضْرَبَ ظَهْرِي، وَيُنْتَزَعَ مَالِي، وَيُشْتَمَ عِرْضِي.


21583. இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், அபூஹுரைரா (ரலி) அவர்களை பஹ்ரைனுக்கு ஆளுநராக நியமித்தார்கள். (அங்கிருந்து திரும்பிய) அபூஹுரைரா (ரலி) அவர்கள் பத்தாயிரம் (திர்ஹம்களை) கொண்டு வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “ஓ அல்லாஹ்வின் பகைவரே! அவனது வேதத்தின் பகைவரே! இந்த அல்லாஹ்வின் செல்வங்களை நீர் மோசடியாக எடுத்துக்கொண்டீரா?” என்று கேட்டார்கள்.

அதற்கு அபூஹுரைரா (ரலி), “நான் அல்லாஹ்வின் பகைவனும் அல்ல; அவனது வேதத்தின் பகைவனும் அல்ல. மாறாக, அவ்விருவருக்கும் பகைமை பாராட்டுபவர்களுக்கே நான் பகைவன்” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி), “இந்த செல்வம் உமக்கு எங்கிருந்து கிடைத்தது?” என்று வினவினார்கள். அபூ ஹுரைரா (ரலி), “எனது குதிரைகள் குட்டிகள் போட்டன. எனது அடிமைகளின் வருமானம், எனக்குத் தொடர்ந்து கிடைத்த அன்பளிப்புகள் ஆகியவற்றிலிருந்துதான் கிடைத்தது” என்று கூறினார்கள். அதை உமர் (ரலி) விசாரித்துப் பார்த்தபோது, அபூ ஹுரைரா (ரலி) சொன்னது போலவே இருந்தது.

அதற்குப் பிறகு, உமர் (ரலி) அவர்கள் அபூ ஹுரைரா (ரலி) அவர்களை மீண்டும் ஒரு பதவிக்கு அழைக்க, அவர்கள் மறுத்துவிட்டார்கள். உமர் (ரலி), “வேலை செய்வதை நீர் வெறுக்கிறீரா? உம்மை விட சிறந்தவரான யூசுப் (அலை) அவர்கள் பதவியைக் கேட்டுப் பெற்றாரே!” என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா (ரலி), “யூசுப் (அலை) அவர்கள் நபி, நபியின் மகன், நபியின் பேரன். ஆனால், நான் அபூ ஹுரைரா பின் உமையா. மூன்று விஷயங்களுக்கும் இரண்டு விஷயங்களுக்கும் நான் அஞ்சுகிறேன்” என்றார்கள். உமர் (ரலி), “ஐந்து விஷயங்கள் என்று ஏன் சொல்லவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா (ரலி), “இல்லை. எனக்குத் தெரியாத ஒரு விஷயத்தை நான் சொல்ல வேண்டி வந்துவிடுமோ; தீர்ப்பை சரியாக வழங்க முடியாமல் போய்விடுமோ; என் முதுகு தண்டிக்கப்படுமோ; என் செல்வம் பறிக்கப்பட்டுவிடுமோ; என் கண்ணியம் சீர்குலைந்துவிடுமோ என அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.