1658. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களது காலத்தில் சூரியகிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பதற்றமடைந்தவர்களாக (தமது மேல்துண்டை எடுப்பதற்கு பதில்) தவறாக (தம் வீட்டாரின்) முகத்திரையை எடுத்துச் சென்றுவிட்டார்கள். பின்னர் அவர்களது மேல்துண்டு அவர்களிடம் சேர்க்கப்பட்டது.
(நபி (ஸல்) அவர்கள் கிரகணத்தொழுகை தொழுவிக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட போது) நான் என் தேவைகளை முடித்துக் கொண்டு வந்து பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று (தொழுவித்துக்) கொண்டிருந்ததை நான் கண்டேன். அவர்களுடன் நானும் நின்றுகொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். எந்த அளவிற்கென்றால், உட்கார்ந்துவிடலாமா என நான் எண்ணினேன். பிறகு (எனக்கு அருகில்) பலவீனமான ஒரு பெண்ணைக் கண்டேன். இவரோ என்னைவிட பலவீனமானவர். (இவரே நின்று தொழும்போது) நானும் நின்றுதான் தொழுவேன்” எனக் கூறிக்கொண்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்தார்கள். அதையும் நீண்ட நேரம் செய்தார்கள். பிறகு (ருகூஉவிலிருந்து) தமது தலையை உயர்த்தி நீண்ட நேரம் நிலையில் நின்றார்கள். ஒரு மனிதர் (தொழுகைக்கு இடையில்) வந்(து சேர்ந்)தால் நபி (ஸல்) அவர்கள் ருகூஉச் செய்யவில்லை என எண்ணிவிடுவார் (அந்த அளவிற்கு நீண்ட நேரம் நின்றுகொண்டேயிருந்தார்கள்.)
Book : 10