أَنَّهُ جَاءَ أَفْلَحُ أَخُو أَبِي الْقُعَيْسِ يَسْتَأْذِنُ عَلَيْهَا بَعْدَ مَا نَزَلَ الْحِجَابُ، وَكَانَ أَبُو الْقُعَيْسِ أَبَا عَائِشَةَ مِنَ الرَّضَاعَةِ، قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: وَاللهِ، لَا آذَنُ لِأَفْلَحَ، حَتَّى أَسْتَأْذِنَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَإِنَّ أَبَا الْقُعَيْسِ لَيْسَ هُوَ أَرْضَعَنِي، وَلَكِنْ أَرْضَعَتْنِي امْرَأَتُهُ، قَالَتْ عَائِشَةُ: فَلَمَّا دَخَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنَّ أَفْلَحَ أَخَا أَبِي الْقُعَيْسِ جَاءَنِي يَسْتَأْذِنُ عَلَيَّ، فَكَرِهْتُ أَنْ آذَنَ لَهُ حَتَّى أَسْتَأْذِنَكَ، قَالَتْ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ائْذَنِي لَهُ»، قَالَ عُرْوَةُ: فَبِذَلِكَ كَانَتْ عَائِشَةُ تَقُولُ: «حَرِّمُوا مِنَ الرَّضَاعَةِ مَا تُحَرِّمُونَ مِنَ النَّسَبِ»
2857. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபுல்குஐஸின் சகோதரர் அஃப்லஹ் (ரலி) அவர்கள் வந்து, என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். -அபுல்குஐஸ் ஆயிஷா (ரலி) அவர்களின் பால்குடித் தந்தை ஆவார்.- பர்தா (ஹிஜாப்) சட்டம் அருளப்பட்ட பின் இச்சம்பவம் நடைபெற்றது. அப்போது நான், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்காமல் அஃப்லஹ் (ரலி) அவர்களுக்கு அனுமதியளிக்கமாட்டேன். ஏனெனில், அபுல்குஐஸ் எனக்குப் பாலூட்டவில்லை; அவருடைய துணைவிதான் எனக்குப் பாலூட்டினார்” என்று கூறினேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்ததும் நான் அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! (என் பால்குடித் தந்தை) அபுல் குஐஸின் சகோதரர் அஃப்லஹ் வந்து என் வீட்டில் நுழைவதற்கு அனுமதி கேட்டார். உங்களிடம் அனுமதி கேட்காமல் அவருக்கு அனுமதியளிக்க எனக்கு விருப்பமில்லை. (எனவே, அவருக்கு நான் அனுமதியளிக்க வில்லை)” என்று தெரிவித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு அனுமதியளி” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இதன் அடிப்படையில்தான் ஆயிஷா (ரலி) அவர்கள், “இரத்த உறவால் எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத்தகாத) நெருங்கிய உறவுகளாக நீங்கள் ஆக்குவீர்களோ அந்த உறவுகளைப் பால்குடி உறவின் மூலமும் நெருங்கிய உறவுகளாக ஆக்கிவிடுங்கள்” என்று கூறுவார்கள்.
Book : 17