🔗

முஸ்லிம்: 32

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتُخْلِفَ أَبُو بَكْرٍ بَعْدَهُ، وَكَفَرَ مَنْ كَفَرَ مِنَ الْعَرَبِ، قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ لِأَبِي بَكْرٍ: كَيْفَ تُقَاتِلُ النَّاسَ، وَقَدْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا: لَا إِلَهَ إِلَّا اللهُ، فَمَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ، فَقَدْ عَصَمَ مِنِّي مَالَهُ، وَنَفْسَهُ، إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللهِ “، فَقَالَ أَبُو بَكْرٍ: وَاللهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ، وَالزَّكَاةِ، فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ، وَاللهِ لَوْ مَنَعُونِي عِقَالًا كَانُوا يُؤَدُّونَهُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهِ، فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: فَوَاللهِ، مَا هُوَ إِلَّا أَنْ رَأَيْتُ اللهَ عَزَّ وَجَلَّ قَدْ شَرَحَ صَدْرَ أَبِي بَكْرٍ لِلْقِتَالِ، فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ


பாடம் : 8

மக்கள் “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்” என்று கூறி, தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத் வழங்கி, நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த அனைத்துக் கட்டளைகளையும் நம்பிக்கை கொள்ளாதவரை அவர்களுடன் போரிடுமாறு (இறைத் தூதருக்கு) இடப்பெற்ற உத்தரவு; அவ்வாறு செய்தவர் தகுந்த காரணம் இருந்தால் தவிர தமது உயிரையும் உடைமையையும் காத்துக்கொள்வார்; அவரது அந்தரங்கம் அல்லாஹ்விடம் விடப்படும் என்ற அறிவிப்பு; ஸகாத் முதலான இஸ்லாமியக் கடமைகளில் ஒன்றை மறுப்பவருடன் போரிடப்படும் என்ற அறிவிப்பு; ஆட்சித் தலைவர் இஸ்லாமிய அடையாளங்(களான சில விதிமுறை)களுக்கு முக்கியத்துவம் அளித்திடவேண்டும் என்ற உத்தரவு.

32. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபின் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சியாளர் ஆக்கப்பட்டதும் அரபுகளில் சிலர் (ஸகாத் வழங்க மறுத்ததன் மூலம்) இறை மறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க கலீஃபா அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆயத்தமானார்கள். அப்போது) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று (இந்த) மக்கள் கூறும்வரை அவர்களுடன் போரிடுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறியவர் (தகுந்த காரணமிருந்தாலன்றி)தமது செல்வத்தையும் உயிரையும் என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார். அவரது (அந்தரங்கம் பற்றிய) விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது.” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது நீங்கள் எவ்வாறு (இறை நம்பிக்கை கொண்டுள்ள) இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! தொழுகையையும் ஸகாத்தையும் வேறுபடுத்திப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஏனெனில் ஸகாத், செல்வத்திற்குரிய கடமையாகும்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வழங்கிவந்த ஒட்டகத்தின் கயிற்றை இவர்கள் என்னிடம் வழங்க மறுத்தாலும் அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்” என்றார்கள். இது குறித்து உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் (ரலி) அவர்களின் இதயத்தை, போர் (தொடுப்பதன் மீது உறுதியான முடிவு) செய்வதற்காக அல்லாஹ் விசாலமாக்கியிருந்ததை நான் கண்டுகொண்டேன். அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியதே சரியானது என நான் விளங்கிக்கொண்டேன்” என்று கூறினார்கள்.

Book : 1