تَحَدَّثْتُ أَنَا وَالْقَاسِمُ، عِنْدَ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، حَدِيثًا وَكَانَ الْقَاسِمُ رَجُلًا لَحَّانَةً وَكَانَ لِأُمِّ وَلَدٍ، فَقَالَتْ لَهُ عَائِشَةُ: مَا لَكَ لَا تَحَدَّثُ كَمَا يَتَحَدَّثُ ابْنُ أَخِي هَذَا، أَمَا إِنِّي قَدْ عَلِمْتُ مِنْ أَيْنَ أُتِيتَ هَذَا أَدَّبَتْهُ أُمُّهُ، وَأَنْتَ أَدَّبَتْكَ أُمُّكَ، قَالَ: فَغَضِبَ الْقَاسِمُ وَأَضَبَّ عَلَيْهَا، فَلَمَّا رَأَى مَائِدَةَ عَائِشَةَ، قَدْ أُتِيَ بِهَا قَامَ، قَالَتْ: أَيْنَ؟ قَالَ: أُصَلِّي، قَالَتْ: اجْلِسْ، قَالَ: إِنِّي أُصَلِّي، قَالَتْ: اجْلِسْ غُدَرُ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا صَلَاةَ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا هُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»
-حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَابْنُ حُجْرٍ، قَالُوا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، أَخْبَرَنِي أَبُو حَزْرَةَ الْقَاصُّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِمِثْلِهِ وَلَمْ يَذْكُرْ فِي الْحَدِيثِ قِصَّةَ الْقَاسِمِ
969. இப்னு அபூஅதீக் (அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் அஸ்ஸித்தீக்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவரான காசிம் பின் முஹம்மத் பின் அப்திர் ரஹ்மானும் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒரு விஷயம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். காசிம் (எதையும்) பிழையாகப் பேசுபவராக இருந்தார். அவரிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், “உனக்கு என்ன நேர்ந்தது? நீ ஏன் இந்த என் சகோதரர் புதல்வரைப் போன்று (பிழையின்றி) பேசுவதில்லை? இந்தப் பழக்கம் உனக்கு எங்கிருந்து வந்தது என்று நான் அறிந்துகொண்டேன். இவரை இவருடைய தாய் வளர்த்தார். உன்னை உன்னுடைய தாய் வளர்த்தார்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட காசிம் கோபம் கொண்டு, ஆயிஷா (ரலி) அவர்கள்மீது எரிச்சலடைந்தார். ஆயிஷா (ரலி) அவர்களுக்கு முன் உணவுத் தட்டு கொண்டுவரப்பட்டபோது காசிம் எழுந்துவிட்டார். ஆயிஷா (ரலி) அவர்கள், “எங்கே (போகிறாய்)?” என்று கேட்க, காசிம் “நான் தொழப்போகிறேன்” என்றார். ஆயிஷா (ரலி) அவர்கள், “உட்கார்!” என்றார்கள். காசிம் “நான் தொழப்போகிறேன்” என்று (மீண்டும்) கூறினார். ஆயிஷா (ரலி) அவர்கள் “அவசரக்காரனே! உட்கார்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
– மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. ஆனால், அவற்றில் காசிம் பின் முஹம்மதைப் பற்றியக் குறிப்பு இடம்பெறவில்லை.
அத்தியாயம்: 5