🔗

முஸ்னது அஹ்மத்: 22030

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

دَخَلْتُ مَسْجِدَ دِمَشْقِ بالشَّامِ، فَإِذَا أَنَا بِفَتًى بَرَّاقِ الثَّنَايَا، وَإِذَا النَّاسُ حَوْلَهُ إِذَا اخْتَلَفُوا فِي شَيْءٍ أَسْنَدُوهُ إِلَيْهِ، وَصَدَرُوا عَنْ رَأْيِهِ، فَسَأَلْتُ عَنْهُ فَقِيلَ: هَذَا مُعَاذُ بْنُ جَبَلٍ، فَلَمَّا كَانَ الْغَدُ هَجَّرْتُ فَوَجَدْتُهُ قَدْ سَبَقَنِي بِالْهَجِيرِ، وَقَالَ إِسْحَاقُ: بِالتَّهْجِيرِ، وَوَجَدْتُهُ يُصَلِّي، فَانْتَظَرْتُهُ حَتَّى إِذَا قَضَى صَلَاتَهُ جِئْتُهُ مِنْ قِبَلِ وَجْهِهِ، فَسَلَّمْتُ عَلَيْهِ فَقُلْتُ لَهُ: وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ لِلَّهِ فَقَالَ: أَللَّهِ؟ فَقُلْتُ: أَللَّهِ. فَقَالَ: أَللَّهِ؟ فَقُلْتُ: أَللَّهِ. فَأَخَذَ بِحُبْوَةِ رِدَائِي فَجَبَذَنِي إِلَيْهِ وَقَالَ: أَبْشِرْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: «وَجَبَتْ مَحَبَّتِي لِلْمُتَحَابِّينَ فِيَّ وَالْمُتَجَالِسِينَ فِيَّ وَالْمُتَزَاوِرِينَ فِيَّ وَالْمُتَبَاذِلِينَ فِيَّ»


22030. ஆயிதுல்லாஹ் பின் அப்துல்லாஹ்-அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஷாமில் உள்ள திமிஷ்க் (டமாஸ்கஸ்) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கே பற்கள் ஜொலிக்கும் ஒரு வாலிபரைக் கண்டேன். மக்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தனர்; அவர்கள் ஏதேனும் விஷயத்தில் கருத்து வேறுபட்டால், அவரிடமே தீர்ப்பைக் கேட்பார்கள்; அவர் கூறுவதையே முடிவாக ஏற்றுக்கொள்வார்கள். நான் அவரைப் பற்றி விசாரித்தபோது, “இவர் முஆத் பின் ஜபல்” என்று கூறப்பட்டது.

மறுநாள் நான் விரைவாகப் பள்ளிவாசலுக்குச் சென்றேன். ஆனால் என்னை விட அவரே முன்னதாக வந்துவிட்டதைக் கண்டேன். அவர் தொழுது கொண்டிருந்தார். அவர் தொழுகையை முடிக்கும் வரை காத்திருந்தேன். அவர் தொழுகையை முடித்ததும் அவர் முன்னால் சென்று ஸலாம் கூறினேன். பிறகு அவரிடம், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உங்களை அல்லாஹ்வுக்காக நேசிக்கிறேன்” என்று கூறினேன். அதற்கு அவர், “அல்லாஹ்வின் பெயரால் நேசிக்கிறீர்களா?” என்று கேட்டார். நான், “அல்லாஹ்வின் பெயரால்” என்று பதிலளித்தேன். அவர் மீண்டும், “அல்லாஹ்வின் பெயரால் நேசிக்கிறீர்களா?” என்று கேட்டார். நான் மீண்டும், “அல்லாஹ்வின் பெயரால்” என்று பதிலளித்தேன்.

உடனே அவர் என் மேல் ஆடையின் முனையைப் பிடித்து என்னை அவர் பக்கம் இழுத்து, “நற்செய்தி பெறுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்: ‘அல்லாஹ் கூறுகிறான்: எனக்காக நேசிப்பவர்களுக்கும், எனக்காக ஒன்றாக அமர்பவர்களுக்கும், எனக்காக ஒருவரை ஒருவர் சந்திப்பவர்களுக்கும், எனக்காக போட்டி போட்டுக் கொண்டு தர்மம் செய்பவர்களுக்கும் என்னுடைய பிரியம் கடமையாகிவிட்டது'” என்று கூறினார்கள்.