أَنَّ النِّسَاءَ كُنَّ يَوْمَ أُحُدٍ خَلْفَ الْمُسْلِمِينَ، يُجْهِزْنَ عَلَى جَرْحَى الْمُشْرِكِينَ، فَلَوْ حَلَفْتُ يَوْمَئِذٍ رَجَوْتُ أَنْ أَبَرَّ: إِنَّهُ لَيْسَ أَحَدٌ مِنَّا يُرِيدُ الدُّنْيَا، حَتَّى أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {مِنْكُمْ مَنْ يُرِيدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَنْ يُرِيدُ الْآخِرَةَ، ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ} [آل عمران: 152] فَلَمَّا خَالَفَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَصَوْا مَا أُمِرُوا بِهِ، أُفْرِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي تِسْعَةٍ: سَبْعَةٍ مِنَ الْأَنْصَارِ، وَرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ وَهُوَ عَاشِرُهُمْ، فَلَمَّا رَهِقُوهُ، قَالَ: «رَحِمَ اللَّهُ رَجُلًا رَدَّهُمْ عَنَّا» ، قَالَ: فَقَامَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَقَاتَلَ سَاعَةً حَتَّى قُتِلَ، فَلَمَّا رَهِقُوهُ أَيْضًا، قَالَ: «يَرْحَمُ اللَّهُ رَجُلًا رَدَّهُمْ عَنَّا» ، فَلَمْ يَزَلْ يَقُولُ ذَا، حَتَّى قُتِلَ السَّبْعَةُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَاحِبَيْهِ: «مَا أَنْصَفْنَا أَصْحَابَنَا» فَجَاءَ أَبُو سُفْيَانَ، فَقَالَ: اعْلُ هُبَلُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُولُوا اللَّهُ أَعْلَى وَأَجَلُّ» ، فَقَالُوا: اللَّهُ أَعْلَى وَأَجَلُّ، فَقَالَ أَبُو سُفْيَانَ: لَنَا عُزَّى، وَلَا عُزَّى لَكُمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُولُوا اللَّهُ مَوْلَانَا، وَالْكَافِرُونَ لَا مَوْلَى لَهُمْ» ، ثُمَّ قَالَ أَبُو سُفْيَانَ: يَوْمٌ بِيَوْمِ بَدْرٍ يَوْمٌ لَنَا، وَيَوْمٌ عَلَيْنَا، وَيَوْمٌ نُسَاءُ، وَيَوْمٌ نُسَرُّ، حَنْظَلَةُ بِحَنْظَلَةَ، وَفُلَانٌ بِفُلَانٍ، وَفُلَانٌ بِفُلَانٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا سَوَاءً، أَمَّا قَتْلَانَا فَأَحْيَاءٌ يُرْزَقُونَ، وَقَتْلَاكُمْ فِي النَّارِ يُعَذَّبُونَ» ، قَالَ أَبُو سُفْيَانَ: قَدْ كَانَتْ فِي الْقَوْمِ مُثْلَةٌ، وَإِنْ كَانَتْ لَعَنْ غَيْرِ مَلَأٍ مِنَّا، مَا أَمَرْتُ وَلَا نَهَيْتُ، وَلَا أَحْبَبْتُ، وَلَا كَرِهْتُ، وَلَا سَاءَنِي، وَلَا سَرَّنِي، قَالَ: فَنَظَرُوا فَإِذَا حَمْزَةُ قَدْ بُقِرَ بَطْنُهُ، وَأَخَذَتْ هِنْدُ كَبِدَهُ فَلَاكَتْهَا، فَلَمْ تَسْتَطِعْ أَنْ تَأْكُلَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَأَكَلَتْ مِنْهُ شَيْئًا» قَالُوا: لَا. قَالَ: «مَا كَانَ اللَّهُ لِيُدْخِلَ شَيْئًا مِنْ حَمْزَةَ النَّارَ» ، فَوَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَمْزَةَ، فَصَلَّى عَلَيْهِ، وَجِيءَ بِرَجُلٍ مِنَ الْأَنْصَارِ، فَوُضِعَ إِلَى جَنْبِهِ، فَصَلَّى عَلَيْهِ، فَرُفِعَ الْأَنْصَارِيُّ، وَتُرِكَ حَمْزَةُ، ثُمَّ جِيءَ بِآخَرَ فَوَضَعَهُ إِلَى جَنْبِ حَمْزَةَ فَصَلَّى عَلَيْهِ، ثُمَّ رُفِعَ، وَتُرِكَ حَمْزَةُ حَتَّى صَلَّى عَلَيْهِ يَوْمَئِذٍ سَبْعِينَ صَلَاةً
4414. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுதுப் போரின் போது பெண்கள் முஸ்லிம்களுக்குப் பின்னால் இருந்தனர். அவர்கள் காயமடைந்த இணைவைப்பாளர்களைக் கொன்று முடித்தார்கள்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக! நம்மில் எவருமே இவ்வுலகத்தை விரும்பவில்லை” என்று நான் அன்று சத்தியம் செய்திருந்தால், நான் அந்த சத்தியத்தில் உண்மையானவனாகவே இருந்திருப்பேன் என்று கருதினேன். இறுதியில் அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கினான்: “உங்களில் இவ்வுலகத்தை விரும்புவோரும் உள்ளனர்; உங்களில் மறுமையை விரும்புவோரும் உள்ளனர். பின்னர் உங்களைச் சோதிப்பதற்காக அவர்களிடமிருந்து உங்களைத் திருப்பினான்”. (அல்குர்ஆன்: 3:152)
நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் கட்டளைக்கு மாறுசெய்து, அவர்களுக்கு இடப்பட்ட உத்தரவை மீறியபோது, நபி (ஸல்) அவர்கள் ஒன்பது பேருடன் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அவர்களில் ஏழு பேர் அன்சாரிகள், இருவர் குறைஷிகள். நபி (ஸல்) அவர்கள் பத்தாவது ஆளாவார்கள். எதிரிகள் அவர்களை நெருங்கியபோது, “எவர் இவர்களை நம்மிடமிருந்து விரட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அன்சாரிகளில் ஒருவர் எழுந்து, அவர் கொல்லப்படும் வரை போரிட்டார். மீண்டும் எதிரிகள் நெருங்கியபோது, “எவர் இவர்களை நம்மிடமிருந்து விரட்டுகிறாரோ அவருக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்” என்று மீண்டும் கூறினார்கள். அந்த ஏழு பேரும் கொல்லப்படும் வரை நபி (ஸல்) அவர்கள் இதையே கூறிக் கொண்டிருந்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தன்னுடனிருந்த இரு தோழர்களிடமும், “நம்முடைய தோழர்களுக்கு நாம் நீதி செலுத்தவில்லை” என்று கூறினார்கள். அப்போது அபூஸுஃப்யான் வந்து, “ஹுபல் சிலை மேலோங்கட்டும்!” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே மிக மேலானவன்; கண்ணியமிக்கவன் என்று சொல்லுங்கள்” என்றார்கள். அவ்வாறே அவர்களும் சொன்னார்கள். பின்பு அபூஸுஃப்யான், “எங்களுக்கு உஸ்ஸா சிலை உண்டு; உங்களுக்கு உஸ்ஸா கிடையாது” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே எங்களது பாதுகாவலன்; உங்களுக்குப் பாதுகாவலன் எவருமில்லை என்று சொல்லுங்கள்” என்றார்கள். (அவ்வாறே அவர்களும் சொன்னார்கள்).
தொடர்ந்து அபூஸுஃப்யான், “இன்றைய தினம் பத்ருப் போருக்குப் பதிலடியாக அமைந்துவிட்டது. ஒரு நாள் வெற்றி நமக்கும், ஒரு நாள் நமக்கு எதிராகவும் இருக்கும். ஒரு நாள் நாம் கவலையடைவோம், ஒரு நாள் நாம் மகிழ்ச்சியடைவோம். ஹன்ளலாவுக்குப் பதிலாக ஹன்ளலா; இன்னாருக்குப் பதிலாக இன்னார்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரண்டும் சமமாகாது. எங்களில் கொல்லப்பட்டவர்கள் உயிருடன் இருந்து அல்லாஹ்விடம் உணவளிக்கப்படுகிறார்கள். உங்களில் கொல்லப்பட்டவர்கள் நரகத்தில் தண்டிக்கப்படுகிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.
அதற்கு அபூஸுஃப்யான், “உங்கள் தரப்பு மக்களிடையே உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. அது என் உத்தரவின்றி நடந்திருந்தாலும், நான் அதைத் தடுக்கவுமில்லை; அதை நான் விரும்பவுமில்லை, வெறுக்கவுமில்லை” என்று கூறினார். பின்பு நபி (ஸல்) அவர்கள் பார்த்தபோது, ஹம்ஸா (ரலி) அவர்களின் வயிறு கிழிக்கப்பட்டிருந்தது. ஹிந்த் என்ற பெண், ஹம்ஸா (ரலி) அவர்களின் ஈரலை எடுத்து மென்றார். ஆனால் அவரால் அதை விழுங்க முடியவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவள் அதிலிருந்து ஏதேனும் சாப்பிட்டாளா?” என்று கேட்டார்கள். “இல்லை” என்று தோழர்கள் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஹம்ஸாவின் எந்த ஒரு பகுதியையும் நரக நெருப்பிற்குள் நுழையச் செய்ய மாட்டான்” என்று கூறினார்கள்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸா (ரலி) அவர்களின் உடலை வைத்தார்கள். அவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அன்சாரிகளில் ஒருவரின் உடல் கொண்டு வரப்பட்டு, ஹம்ஸா (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டது. அவருக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். பின்பு அந்த அன்சாரியின் உடல் எடுக்கப்பட்டது, ஹம்ஸா (ரலி) அவர்களின் உடல் அங்கேயே இருந்தது. பிறகு மற்றுமொருவர் கொண்டு வரப்பட்டு ஹம்ஸா (ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் வைக்கப்பட, அவருக்கும் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள். பின்பு அவர் எடுக்கப்பட்டார். இவ்வாறாக ஹம்ஸா (ரலி) அவர்களுக்கு அன்று எழுபது முறை ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.