🔗

முஅத்தா மாலிக்: 1

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ أَخَّرَ الصَّلَاةَ يَوْمًا ، فَدَخَلَ عَلَيْهِ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ، فَأَخْبَرَهُ أَنَّ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ أَخَّرَ الصَّلَاةَ يَوْمًا وَهُوَ بِالْكُوفَةِ ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو مَسْعُودٍ الْأَنْصَارِيُّ فَقَالَ مَا هَذَا يَا مُغِيرَةُ؟ أَلَيْسَ قَدْ عَلِمْتَ أَنَّ جِبْرِيلَ نَزَلَ فَصَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – ثُمَّ صَلَّى فَصَلَّى رَسُولُ اللهِ – صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – فَقَالَ : بِهَذَا أُمِرْتُ ،

فَقَالَ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ : اعْلَمْ مَا تُحَدِّثُ يَا عُرْوَةُ ، أَوَ إِنَّ جِبْرِيلَ هُوَ الَّذِي أَقَامَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقْتَ الصَّلَاةِ  –

قَالَ عُرْوَةُ : كَذَلِكَ كَانَ بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيُّ يُحَدِّثُ عَنْ أَبِيهِ


بسم الله الرحمن الرحيم

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அல்லாஹ், நமது நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும் அருள் புரிவானாக! மேலும் அவர்களுக்கு முழுமையான சாந்தி அளிப்பானாக!


முஅத்தா மாலிக் நூலின் பிரதிகளில் இந்த பிரதியின் அறிவிப்பாளர்தொடர்:

“மார்க்க மேதை அபூஅப்துல்லாஹ்-முஹம்மது பின் ஃபரஜ் (ரஹ்) (ரலியல்லாஹு அன்ஹு-அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக!) அவர்கள் இந்த மாலிக் நூலை, அல்காழீ அபுல்வலீத் யூனுஸ் பின் அப்தில்லாஹ் பின் முஃகீஸ் (குர்துபாவின் நீதிபதி; இப்னுஸ் ஸஃப்பார் என்று பிரபலமானவர்) —> அபூஈஸா யஹ்யா பின் அப்தில்லாஹ் பின் அபூஈஸா —> உபைதுல்லாஹ் பின் யஹ்யா —> யஹ்யா அல்லைஸீ என்ற அறிவிப்பாளர்தொடரில் எங்களுக்கு அறிவித்தார்கள்.

இதை (ஸ்பெயினின்) குர்துபா எனும் நகரில் உள்ள அவரது மஸ்ஜிதில், ரபீஉல் ஆகிர் மாதத்தின் ஆரம்பத்தில், ஹிஜ்ரீ 494 ஆம் ஆண்டில், அவரிடம் (மாலிக் நூல்) படித்துக் காட்டப்பட்டது. அப்பொழுது நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.


அத்தியாயம்: 1

தொழுகை

பாடம்: 1

தொழுகையின் நேரங்கள்.

1. இப்னு ஷிஹாப்-முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அப்துல்அஸீஸ் ஒரு நாள் தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது உர்வா பின் ஸுபைர் அவரிடம் வந்து பின்வரும் நிகழ்ச்சியைக் கூறி (அவரின் செயலைக் கண்டிக்கலா)னார்கள்.

இராக்கில் இருக்கும்போது ஒரு நாள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது அபூமஸ்ஊத் அன்ஸாரி (ரலி), அவரிடம் வந்து, ‘முஃகீராவே! இது என்ன? ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி (ஃபஜ்ருத்) தொழ, நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (லுஹர்) தொழ, நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (அஸர்) தொழ நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (மஃக்ரிப்) தொழ நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு இஷா தொழ, நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்னர் நபியிடம், “இந்நேரங்களில் தொழ வேண்டும் என்றே உமக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது” என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். இதை நீர் அறியவில்லையா?’ என்று கேட்டார்கள்.

(இந்த நிகழ்ச்சியை உர்வா பின் ஸுபைர், உமர் பின் அப்துல்அஸீஸ் அவர்களிடம் கூறிய போது) ‘உர்வாவே நீர் கூறுவது என்னவென்பதைக் கவனித்துப் பாரும்! நபி (ஸல்) அவர்களுக்குத் தொழுகையின் நேரத்தை ஜிப்ரீல் (அலை) அவர்கள் நிர்ணயித்தார்களா?’ என்று உமர் பின் அப்துல்அஸீஸ் கேட்டார்கள். அதற்கு உர்வா (ரஹ்) அவர்கள், “(ஆம்) இவ்வாறுதான் பஷீர் பின் அபூமஸ்ஊத் (ரஹ்) அவர்கள் தம் தந்தை அபூமஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்புச் செய்பவர்களாக இருந்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.