مِثْلَهُ
3195.
அபூஜஅஃபர்-தஹாவீ இமாம் கூறுகிறார்:
இந்த இரு மாதங்களும் குறையாது என்று இந்த ஹதீஸில் வந்துள்ளது. இது குறித்து மக்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர்.
ஒரு சாரார் கூறினர்:
“இரு மாதங்களும் குறையாது” என்பதன் கருத்து, ஒரே ஆண்டில் இவ்விரு மாதங்களின் நாட்களும் ஒன்றாக (29 நாட்களாக) குறைந்துவிடாது என்பதாகும். அவற்றில் ஏதேனும் ஒன்று குறைவதற்கு வாய்ப்புண்டு. ஆனால், இக்கருத்து நம் கண்முன்னே காணும் நடைமுறை உண்மைக்கு மாறுபட்டதாக உள்ளது. ஏனெனில், சில ஆண்டுகளில் இவ்விரு மாதங்களுமே (இருபத்தொன்பது நாட்களாகக்) குறைந்து வருவதையும், இன்னும் ஒரே ஆண்டில் இவ்விரு மாதங்களிலும் இந்த நாட்குறைவு ஏற்படுவதையும் நாம் நேரில் கண்டுள்ளோம்.
எனவே, மற்றொரு சாரார் இக்கருத்தை மறுத்ததோடு, நாம் இந்த நூலின் வேறு ஒரு பகுதியில் குறிப்பிட்டுள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பின்வரும் பொன்மொழிகளையும் சான்றாகக் கூறுகின்றனர்:
“பிறையைக் கண்டு நோன்பு நோற்பதற்குத் தொடங்குங்கள்; பிறையைக் கண்டு நோன்பை நிறைவு செய்யுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.”
“மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கலாம்; முப்பது நாட்களாகவும் இருக்கலாம்.”
இதன் மூலம் எல்லா மாதங்களிலுமே இவ்வாறு நாட்கள் மாறுபடுவது இயல்பானதுதான் என்பதை நபியவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இச்செய்தியை அதன் முழுமையான அறிவிப்பாளர் தொடருடன் இந்த நூலில் அதற்குரிய இடத்தில் இன்ஷா அல்லாஹ்-அல்லாஹ் நாடினால் குறிப்பிடுவோம்.
வேறு சில அறிஞர்களோ, இந்த அறிவிப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்துச் சரியான விளக்கத்தை அளிக்கும் நோக்கில் பின்வருமாறு கூறுகின்றனர்:
“பிறையைக் கண்டு நோன்பு நோற்பதற்குத் தொடங்குங்கள்; பிறையைக் கண்டு நோன்பை நிறைவு செய்யுங்கள்” என்றும், “மாதம் என்பது இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கலாம்; முப்பது நாட்களாகவும் இருக்கலாம்” என்றும் நபியவர்கள் கூறியவை அனைத்தும் அவர்கள் குறிப்பிட்டபடியே உண்மையானதாகும். இது எல்லா மாதங்களிலும் நடைமுறையில் உள்ளதே ஆகும்.
அதே நேரத்தில், “பெருநாட்களைக் கொண்ட இரு மாதங்கள் குறையாது; அவை ரமலானும் துல் ஹிஜ்ஜாவும் ஆகும்” என்று நபியவர்கள் கூறியதன் நோக்கம், நாட்களின் எண்ணிக்கையைக் குறிப்பது அல்ல. மாறாக, மற்ற மாதங்களில் இல்லாத சில சிறப்புகள் இவ்விரு மாதங்களில் மட்டுமே அமைந்துள்ளன. ஒன்றில் நோன்பும், மற்றொன்றில் ஹஜ் வணக்கமும் அமைந்துள்ளன.
எனவே, இவ்விரு மாதங்களும் இருபத்தொன்பது நாட்களாக இருந்தாலும், அவை சிறப்பில் குறைவில்லாத முழுமையான மாதங்களே ஆகும் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அவை முப்பது முப்பது நாட்களாக இருந்தாலும் சரி, அல்லது இருபத்தொன்பது இருபத்தொன்பது நாட்களாக இருந்தாலும் சரி, அவற்றில் நிறைவேற்றப்படும் வழிபாடுகளுக்கான சட்டங்களும் நன்மைகளும் முழுமையானவையே. அவை முப்பது நாட்களாக இருக்கும் போது கிடைக்கும் பலன்களை விட, இருபத்தொன்பது நாட்களாக இருக்கும் போது எந்தக் குறையும் அடைவதில்லை.
இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகளை நாம் குறிப்பிட்டுள்ளதின்படி புரிந்து கொள்வதே சரியான விளக்கம் ஆகும். (யாவற்றையும்) அல்லாஹ்வே மிக அறிந்தவன்.