مَا الْمَيِّتُ فِي الْقَبْرِ إِلَّا كَالْغَرِيقِ الْمُتَغَوِّثِ، يَنْتَظِرُ دَعْوَةً تَلْحَقُهُ مِنْ أَبٍ أَوْ أُمٍّ أَوْ أَخٍ أَوْ صَدِيقٍ، فَإِذَا لَحِقَتْهُ كَانَتْ أَحَبَّ إِلَيْهِ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا، وَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَيُدْخِلُ عَلَى أَهْلِ الْقُبُورِ مِنْ دُعَاءِ أَهْلِ الْأَرْضِ أَمْثَالَ الْجِبَالِ، وَإِنَّ هَدِيَّةَ الْأَحْيَاءِ إِلَى الْأَمْوَاتِ الِاسْتِغْفَارُ لَهُمْ
7527. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மண்ணறையில் இருக்கும் மரணித்தவர், “யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா?” என்ற எண்ணத்தில் நீரில் மூழ்கி தத்தளிப்பவரைப் போன்றவர் ஆவார்.
தனது தந்தை, அல்லது தாய், அல்லது சகோதரன், அல்லது நண்பர்கள் ஆகியோரிடமிருந்து தமக்கு வந்து சேரும் துஆவை (பிராத்தனையை) எதிர்பார்க்கின்றார்.
அந்தப் பிரார்த்தனை அவரை வந்தடைந்தால், உலகையும், அதில் உள்ள அனைத்தையும் விட அது அவருக்கு மிகவும் பிரியமானதாக இருக்கும்.
நிச்சயமாக, அல்லாஹ் மண்ணறையிலுள்ளவர்களுக்கு, பூமியில் வாழ்பவர்களின் பிரார்த்தனையால் மலைகளைப் போன்ற நன்மைகளை வழங்குவான். மேலும், உயிருள்ளவர்கள் மரணித்தவர்களுக்குச் செய்யும் அன்பளிப்பு, அவர்களுக்காகப் பாவமன்னிப்பு தேடுவதுதான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
பைஹகீ இமாம் கூறுகிறார்:
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அல்ஹாஃபிள்-அபூஅலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்களின் வழியாக வரும் இந்தச் செய்தி ‘ஃகரீப்’ எனும் தரத்தில் அமைந்ததாகும். மேலும் இது குராசானில் உள்ள அறிஞர்களிடையே பரவலாகக் காணப்படவில்லை. நான் இதை ஃபள்ல் பின் முஹம்மத் என்ற இந்த ஆசிரியரிடமிருந்து மட்டுமே எழுதிக் கொண்டேன்.
மேலும் இந்தச் செய்தி பற்றி அஹ்மத் (பைஹகீ இமாம்) அவர்கள் கூறுகிறார்:
முஹம்மத் பின் குஸைமா-அல்பஸரீ-அபூபக்ர் அவர்கள் இந்தக் கருத்தில் சிலதை, முஹம்மத் பின் அபூஅய்யாஷ் —> இப்னுல் முபாரக் என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இப்னு அபூஅய்யாஷ் மட்டுமே இதை தனித்து அறிவித்துள்ளார்.
அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்.