دَفَنْتُ ابْنِي سِنَانًا، وَأَبُو طَلْحَةَ الخَوْلَانِيُّ جَالِسٌ عَلَى شَفِيرِ القَبْرِ، فَلَمَّا أَرَدْتُ الخُرُوجَ أَخَذَ بِيَدِي، فَقَالَ: أَلَا أُبَشِّرُكَ يَا أَبَا سِنَانٍ؟ قُلْتُ: بَلَى، فَقَالَ: حَدَّثَنِي الضَّحَّاكُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا مَاتَ وَلَدُ العَبْدِ قَالَ اللَّهُ لِمَلَائِكَتِهِ: قَبَضْتُمْ وَلَدَ عَبْدِي، فَيَقُولُونَ: نَعَمْ، فَيَقُولُ: قَبَضْتُمْ ثَمَرَةَ فُؤَادِهِ، فَيَقُولُونَ: نَعَمْ، فَيَقُولُ: مَاذَا قَالَ عَبْدِي؟ فَيَقُولُونَ: حَمِدَكَ وَاسْتَرْجَعَ، فَيَقُولُ اللَّهُ: ابْنُوا لِعَبْدِي بَيْتًا فِي الجَنَّةِ، وَسَمُّوهُ بَيْتَ الحَمْدِ
பாடம்:
துன்பம் நேரும்போது நன்மையை எதிர்பார்(த்து பொறுமை கா)ப்பதன் சிறப்பு.
1021. ஈஸா பின் ஸினான் அவர்கள் கூறியதாவது:
நான் (என் புதல்வர்) ஸினான் என்பாரை அடக்கம் செய்தேன். அப்போது அபூதல்ஹா அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் அந்தக் குழியின் ஓரத்தில் அமர்ந்திருந்தார். நான் (அடக்கி முடித்துவிட்டு அங்கிருந்து) புறப்பட முற்பட்டபோது, அபூதல்ஹா (ரஹ்) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு, “அபூஸினானே! நான் உமக்கு ஒரு நற்செய்தியைச் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். நான், “சரி (கூறுங்கள்)” என்றேன்.
அப்போது அபூதல்ஹா அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள், “அடியார் ஒருவரின் பிள்ளை இறந்துவிட்டால்அல்லாஹ் தன் வானவர்களிடம், ‘என் அடியாரின் பிள்ளையின் உயிரைக் கைப்பற்றி விட்டீர்களா?’ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘ஆம்’ என்பார்கள். அப்போது அல்லாஹ், “அவரது இதயக்கனியையா நீங்கள் கைப்பற்றினீர்கள்?” என்று கேட்பான். அதற்கு வானவர்கள், ‘ஆம்’ என்பர்.
(அப்போது) என் அடியார் என்ன சொன்னார்?” என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு வானவர்கள், “அவர் உன்னைப் புகழ்ந்து, இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் (நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே நாங்கள் திரும்பிச் செல்லக்கூடியவர்கள்) என்று கூறினார்” என்பார்கள்.
அப்போது அல்லாஹ், என் அடியாருக்காகச் சொர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புங்கள். அதற்கு ‘பைத்துல் ஹம்த்’ (புகழ் மாளிகை) எனப் பெயரிடுங்கள் என்று கூறுவான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் வழியாக ளஹ்ஹாக் பின் அப்துர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள் (அதுவே அந்த நற்செய்தியாகும்) என்றார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். அபூஸினான் என்பவரின் (இயற்)பெயர் ஈஸா பின் ஸினான் என்பதாகும்.