🔗

திர்மிதி: 248

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ: {غَيْرِ المَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، فَقَالَ: «آمِينَ»، وَمَدَّ بِهَا صَوْتَهُ


பாடம்:

(சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்த பின்) ஆமீன் கூறுவது பற்றி வந்துள்ளவை.

248. வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தில்), “ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலழ்ழால்லின்” (எவர் மீது கோபம் கொண்டாயோ அவர்கள் வழியும், வழி தவறியோர் வழியும் அல்ல) என்று ஓதியபோது, “ஆமீன்” என்று தமது குரலால் நீட்டி கூறியதை நான் செவியேற்றேன்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ்கள் அலீ (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களின் இந்த ஹதீஸ் “ஹஸன்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

நபித்தோழர்கள், தாபியீன்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்த அறிஞர்கள், (தொழுகையில்) ஆமீன் கூறும் போது சப்தத்தை உயர்த்தி கூற வேண்டும் என்றும், அதை இரகசியமாக கூறக்கூடாது என்றும் கருதுகின்றனர். இமாம் ஷாஃபிஈ (ரஹ்), இமாம் அஹ்மத் (ரஹ்), இமாம் இஸ்ஹாக் (ரஹ்) ஆகியோரும் இந்த கருத்தையே கொண்டுள்ளனர்.

ஆனால் ஷுஃபா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை, ஸலமா பின் குஹைல் —>  ஹுஜ்ர் (அபுல்அன்பஸ்) —> அல்கமா பின் வாயில் —> அவரது தந்தை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில்,

“நபி (ஸல்) அவர்கள் “கைரில் மஃக்ளூபி அலைஹிம் வலழ்ழால்லீன்” (என்று சூரத்துல் ஃபாத்திஹா 7 வது வசனத்தை) ஓதி முடித்த பிறகு “ஆமீன்” என்று கூறி, தமது சப்தத்தை குறைத்தார்கள்” என்று அறிவிக்கிறார்.

முஹம்மத் பின் இஸ்மாயில்-புகாரீ (ரஹ்) அவர்கள், இந்த விஷயத்தில் ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) அவர்களின் ஹதீஸ் தான் ஷுஃபா (ரஹ்) அவர்களின் ஹதீஸை விட மிகச் சரியானது என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

மேலும் புகாரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஷுஃபா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் பல இடங்களில் தவறு செய்துள்ளார்.

1 . அவர், இதில் இடம்பெறும் அறிவிப்பாளரின் பெயரை “ஹுஜ்ர் அபுல்அன்பஸ்” என்று கூறியிருப்பது தவறு. சரியான பெயர் “ஹுஜ்ர் பின் அன்பஸ்” ஆகும். அவரது புனைப்பெயர் அபுஸ்ஸகன் ஆகும்.

2 . அவர் இதன் அறிவிப்பாளர்தொடரில், “அல்கமா பின் வாயில்” என்று கூடுதலாக ஒரு அறிவிப்பாளரைக் கூறியிருப்பது தவறு. அல்கமா பின் வாயில் வழியாக இந்த ஹதீஸ் வரவில்லை. சரியான அறிவிப்பாளர்தொடர், “ஹுஜ்ர் பின் அன்பஸ் —> வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)” என்பதாகும்.

3 . மேலும், அவர் “(நபி-ஸல்-அவர்கள்) ஆமீன் கூறும் போது சப்தத்தை குறைத்தார்கள்” என்று கூறியிருப்பது தவறு. சரியான அறிவிப்பு “சப்தத்தை நீட்டினார்கள்” என்பதாகும்.


அபூஸுர்ஆ (ரஹ்) அவர்களிடம் இந்த ஹதீஸ் பற்றி நான் கேட்டபோது, “இந்த விஷயத்தில் ஸுஃப்யான் (ரஹ்) அவர்களின் ஹதீஸ் தான் சரியானது” என்று கூறினார்.

மேலும், அலா பின் ஸாலிஹ் அல்அஸதீ (ரஹ்) அவர்களும், ஸலமா பின் குஹைல் —>  ஹுஜ்ர் பின் அன்பஸ் —> வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில், ஸுஃப்யான் (ரஹ்) அவர்கள் அறிவிப்பதைப் போன்றே அறிவித்துள்ளார்.