أَتَيْتُ أَبَا ثَعْلَبَةَ الخُشَنِيَّ، فَقُلْتُ لَهُ: كَيْفَ تَصْنَعُ بِهَذِهِ الآيَةِ؟ قَالَ: أَيَّةُ آيَةٍ؟ قُلْتُ: قَوْلُهُ تَعَالَى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105] قَالَ: أَمَا وَاللَّهِ لَقَدْ سَأَلْتَ عَنْهَا خَبِيرًا، سَأَلْتُ عَنْهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «بَلْ ائْتَمِرُوا بِالمَعْرُوفِ وَتَنَاهَوْا عَنِ المُنْكَرِ، حَتَّى إِذَا رَأَيْتَ شُحًّا مُطَاعًا، وَهَوًى مُتَّبَعًا، وَدُنْيَا مُؤْثَرَةً، وَإِعْجَابَ كُلِّ ذِي رَأْيٍ بِرَأْيِهِ، فَعَلَيْكَ بِخَاصَّةِ نَفْسِكَ وَدَعِ العَوَامَّ، فَإِنَّ مِنْ وَرَائِكُمْ أَيَّامًا الصَّبْرُ فِيهِنَّ مِثْلُ القَبْضِ عَلَى الجَمْرِ، لِلْعَامِلِ فِيهِنَّ مِثْلُ أَجْرِ خَمْسِينَ رَجُلًا يَعْمَلُونَ مِثْلَ عَمَلِكُمْ»
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ: وَزَادَنِي غَيْرُ عُتْبَةَ – قِيلَ: يَا رَسُولَ اللَّهِ أَجْرُ خَمْسِينَ رَجُلًا مِنَّا أَوْ مِنْهُمْ. قَالَ: «بَلْ أَجْرُ خَمْسِينَ رَجُلًا مِنْكُمْ»
3058. அபூஉமைய்யா அஷ்ஷஃபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூஸஃலபா (ரலி) அவர்களிடம் சென்று, (அபூஸஃலபா அவர்களே!) இந்த குர்ஆன் வசனத்தை பற்றி உங்கள் விளக்கம் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “எந்த வசனம்? என்று கேட்டார்கள். நான், “நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர்வழி நடக்கும்போது வழிகெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது” என்ற (அல்குர்ஆன் 5:105) வசனத்தை ஓதிக் காட்டினேன்.
அதற்கவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதைப்பற்றி நன்கு அறிந்தவரிடமே நீ கேட்டுள்ளாய்! இதைப் பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (முன்பே) விளக்கம் கேட்டுள்ளேன்” என்று கூறிவிட்டு பின்வருமாறு கூறினார்கள்:
இதைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:
நீங்கள் நன்மையை ஏவிக்கொண்டே இருங்கள். தீமையைத் தடுத்துக்கொண்டே இருங்கள். மக்களிடம் கஞ்சத்தனம் கடைப்பிடிக்கப்படுவதையும், மனோஇச்சைக்கு கட்டுப்படுவதையும், உலக விசயத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுவதையும், ஒவ்வொருவரும் தன் கருத்தே சரியானது என பெருமையடிப்பதையும் நீ கண்டால் மக்களை விட்டுவிடு! உன்னை சரிப்படுத்திக்கொள்.
உங்களுக்கு பின் ஒரு காலம் வரவிருக்கின்றது. அப்போது (சிரமம் ஏற்படும் போது) மார்க்கத்தில் பொறுமையாக இருப்பவர் தன் கையில் நெருப்புக் கங்கை பிடித்தவர் போன்று இருப்பார். அப்போது நற்செயல் செய்பவருக்கு உங்களில் 50 பேர் செய்யும் நற்செயலின் கூலி வழங்கப்படும்.
அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(மேற்கண்டவாறு உத்பா பின் அபூஹகீம் எனக்கு அறிவித்தார்). ஆனால் மற்றவர்கள் “அப்போது நற்செயல் செய்பவருக்கு 50 பேர் செய்யும் நற்செயலின் கூலி வழங்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம், “எங்களில் உள்ள 50 பேரின் நற்செயலின் கூலியா? அல்லது அவர்களில் உள்ள 50 பேரின் நற்செயலின் கூலியா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் உள்ள 50 பேரின் நற்செயலின் கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள்” என்று கூடுதலாக எனக்கு அறிவித்தனர்.