🔗

திர்மிதி: 3087

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّهُ شَهِدَ حَجَّةَ الوَدَاعِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ وَذَكَّرَ وَوَعَظَ ثُمَّ قَالَ: «أَيُّ يَوْمٍ أَحْرَمُ، أَيُّ يَوْمٍ أَحْرَمُ، أَيُّ يَوْمٍ أَحْرَمُ؟» قَالَ: فَقَالَ النَّاسُ: يَوْمُ الحَجِّ الأَكْبَرِ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَإِنَّ دِمَاءَكُمْ وَأَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا فِي بَلَدِكُمْ هَذَا فِي شَهْرِكُمْ هَذَا، أَلَا لَا يَجْنِي جَانٍ إِلَّا عَلَى نَفْسِهِ، وَلَا يَجْنِي وَالِدٌ عَلَى وَلَدِهِ، وَلَا وَلَدٌ عَلَى وَالِدِهِ، أَلَا إِنَّ المُسْلِمَ أَخُو المُسْلِمِ، فَلَيْسَ يَحِلُّ لِمُسْلِمٍ مِنْ أَخِيهِ شَيْءٌ إِلَّا مَا أَحَلَّ مِنْ نَفْسِهِ، أَلَا وَإِنَّ كُلَّ رِبًا فِي الجَاهِلِيَّةِ مَوْضُوعٌ، لَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ  وَلَا تُظْلَمُونَ غَيْرَ رِبَا العَبَّاسِ بْنِ عَبْدِ المُطَّلِبِ فَإِنَّهُ مَوْضُوعٌ كُلُّهُ، أَلَا وَإِنَّ كُلَّ دَمٍ كَانَ فِي الجَاهِلِيَّةِ مَوْضُوعٌ، وَأَوَّلُ دَمٍ وُضِعَ مِنْ دَمِ الْجَاهِلِيَّةِ دَمُ الحَارِثِ بْنِ عَبْدِ المُطَّلِبِ، كَانَ مُسْتَرْضَعًا فِي بَنِي لَيْثٍ فَقَتَلَتْهُ هُذَيْلٌ، أَلَا وَاسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا، فَإِنَّمَا هُنَّ عَوَانٍ عِنْدَكُمْ لَيْسَ تَمْلِكُونَ مِنْهُنَّ شَيْئًا غَيْرَ ذَلِكَ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ فَإِنْ فَعَلْنَ فَاهْجُرُوهُنَّ فِي المَضَاجِعِ، وَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ، فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا، أَلَا وَإِنَّ لَكُمْ عَلَى نِسَائِكُمْ حَقًّا، وَلِنِسَائِكُمْ عَلَيْكُمْ حَقًّا، فَأَمَّا حَقُّكُمْ عَلَى نِسَائِكُمْ، فَلَا يُوطِئْنَ فُرُشَكُمْ مَنْ تَكْرَهُونَ، وَلَا يَأْذَنَّ فِي بُيُوتِكُمْ لِمَنْ تَكْرَهُونَ، أَلَا وَإِنَّ حَقَّهُنَّ عَلَيْكُمْ أَنْ تُحْسِنُوا إِلَيْهِنَّ فِي كِسْوَتِهِنَّ وَطَعَامِهِنَّ»


3087. ஸுலைமான் பின் அம்ர் பின் அஹ்வஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

என் தந்தை (அம்ர் பின் அஹ்வஸ்-ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் விடைபெறும் ஹஜ்ஜில் கலந்துகொண்டேன். அப்போது அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனுக்கு நன்றி செலுத்தி, பிறகு அல்லாஹ்வை நினைவூட்டி, உபதேசம் செய்தார்கள்.

பின்னர் அவர்கள், “எந்த நாள் புனிதமானது? எந்த நாள் புனிதமானது? எந்த நாள் புனிதமானது?” என்று கேட்டார்கள்.

மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! ஹஜ்ஜுல் அக்பர் (எனும் இன்றைய) தினமே!” என்று பதிலளித்தார்கள்.

அதற்கு அவர்கள், “நிச்சயமாக உங்களின் இரத்தங்கள், உங்களின் செல்வங்கள், உங்களின் மானங்கள் ஆகியவை, உங்களின் இந்த நகரத்தில், உங்களின் இந்த மாதத்தில், உங்களின் இந்த நாளுக்கு எந்த அளவுக்குப் புனிதமானதோ, அதே அளவுக்கு உங்களுக்குள்ளே புனிதமானவை ஆகும்” என்று கூறினார்கள்.

“அறிந்து கொள்ளுங்கள் ஒருவர் செய்த குற்றத்திற்கு அவரைத் தவிர வேறு யாருக்கும் தண்டனை தரக்கூடாது. பிள்ளை செய்த குற்றத்திற்காக பெற்றோருக்கு தண்டனை தரக் கூடாது. பெற்றோர் செய்த குற்றத்திற்காக பிள்ளைக்கு தண்டனை தரக்கூடாது…

“அறிந்துகொள்ளுங்கள்! ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரன் ஆவான். ஒரு முஸ்லிமுக்கு அவனது சகோதரனுக்குச் சொந்தமான எந்தப் பொருளும், அவனது மனப்பூர்வமான அனுமதியுடன் அவனே அளித்ததைத் தவிர, ஆகுமானதல்ல”

“அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தில் இருந்த அனைத்து வட்டிகளும் நீக்கப்பட்டுவிட்டன. உங்களின் மூலதனம் மட்டுமே உங்களுக்குரியது. நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள். நீங்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டீர்கள். அப்பாஸ் பின் அப்துல் முத்தலிப் அவர்களின் வட்டியைத் தவிர (வேறு ஏதுமில்லை). அது முழுவதும் நீக்கப்பட்டுவிட்டது.”

“அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தில் நடந்த அனைத்து இரத்தப் பழிகளும் நீக்கப்பட்டுவிட்டன. அறியாமைக் காலத்தில் நீக்கப்பட்டுவிட்ட முதல் இரத்தப்பழி, ஹாரிஸ் பின் அப்துல் முத்தலிப் அவர்களின் இரத்தப்பலியாகும். அவர் பனூ லைஸ் கோத்திரத்தாரிடம் பால்குடி மகனாக இருந்தார். அவரை ஹுதைல் கோத்திரத்தார் கொன்றுவிட்டனர்.”

“அறிந்துகொள்ளுங்கள்! பெண்களை நல்ல முறையில் நடத்துமாறு நான் உங்களுக்கு உபதேசம் செய்கிறேன். ஏனெனில், அவர்கள் உங்களிடம் அடைக்கலப் பொருளாகவே இருக்கிறார்கள். அவர்களைக் கையாள்வதில் அதனைத் தவிர வேறு எந்த அதிகாரமும் உங்களுக்கு இல்லை. அவர்கள் வெளிப்படையான மானக்கேடான செயலைச் செய்தால் தவிர. அவர்கள் அவ்வாறு செய்தால், படுக்கைகளில் அவர்களை விட்டுப் பிரிந்துவிடுங்கள்; மேலும் வடு உண்டாக்காதவாறு (லேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள்.”

“அறிந்துகொள்ளுங்கள்! உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு சில உரிமைகள் உள்ளன, அதேபோல் உங்கள்மீது உங்கள் மனைவியருக்கு சில உரிமைகள் உள்ளன.”

“உங்கள் மனைவியர்மீது உங்களுக்கு உள்ள உரிமை என்னவென்றால், நீங்கள் வெறுப்பவர்களை அவர்கள் உங்களின் படுக்கையில் (மனைவிகளுக்கான இடத்தில்) அமர அனுமதிக்கக்கூடாது, நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் வீடுகளில் நுழைய அனுமதிக்கக்கூடாது.”

“அறிந்துகொள்ளுங்கள்! அவர்கள்மீது உங்களுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்களின் ஆடை விஷயத்திலும், உணவு விஷயத்திலும் நீங்கள் அவர்களுக்கு நல்ல முறையில் செலவு செய்ய வேண்டும்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். இந்த ஹதீஸை அபுல்அஹ்வஸ் அவர்கள் ஷபீப் பின் ஃகர்கதா அவர்களிடமிருந்தும் அறிவித்துள்ளார்.