🔗

திர்மிதி: 3173

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُنْزِلَ عَلَيْهِ الوَحْيُ سُمِعَ عِنْدَ وَجْهِهِ كَدَوِيِّ النَّحْلِ فَأُنْزِلَ عَلَيْهِ يَوْمًا فَمَكَثْنَا سَاعَةً فَسُرِّيَ عَنْهُ فَاسْتَقْبَلَ القِبْلَةَ وَرَفَعَ يَدَيْهِ وَقَالَ: «اللَّهُمَّ زِدْنَا وَلَا تَنْقُصْنَا، وَأَكْرِمْنَا وَلَا تُهِنَّا، وَأَعْطِنَا وَلَا تَحْرِمْنَا، وَآثِرْنَا وَلَا تُؤْثِرْ عَلَيْنَا، وَارْضِنَا وَارْضَ عَنَّا»، ثُمَّ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُنْزِلَ عَلَيَّ عَشْرُ آيَاتٍ، مَنْ أَقَامَهُنَّ دَخَلَ الجَنَّةَ»، ثُمَّ قَرَأَ: {قَدْ أَفْلَحَ المُؤْمِنُونَ} [المؤمنون: 1] حَتَّى خَتَمَ عَشْرَ آيَاتٍ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ يُونُسَ بْنِ سُلَيْمٍ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ بِمَعْنَاهُ.


பாடம்:

அத்தியாயம்: 23

அல்முஃமினூன் (நம்பிக்கை கொண்டோர்)

3173. உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படும் போது, அவர்களின் முகத்துக்கருகே தேனீயின் ரிங்காரம் போன்ற (மெல்லிய) சத்தம் கேட்கும். அப்படி ஒரு நாள் அவர்களுக்கு வஹீ வந்தது. (அவர்கள் முன்) நாங்கள் சிறிது நேரம் காத்திருந்தோம்.

(பிறகு வஹீயின் நிலை அவர்களை விட்டு விலகியதும்), அவர்கள் கிப்லாவை முன்னோக்கித் தம் கைகளை உயர்த்தி, “அல்லாஹும்ம ஸித்னா! வலா தன்குஸ்னா! வ அக்ரிம்னா! வலா துஹின்னா! வ அஃத்தினா! வலா தஹ்ரிம்னா! வ ஆஸிர்னா! வலா துஃஸிர் அலைனா! வர்ள அன்னா! வ அர்ளினா! என்று பிரார்த்தனைச் செய்தார்கள்.

(பொருள்: இறைவா! எங்களுக்கு அதிகமாக வழங்கு; குறைத்து விடாதே! எங்களை கண்ணியப்படுத்து; கேவலப்படுத்தி விடாதே! எங்களுக்கு முன்னுரிமை வழங்கு; எங்களை பின்னுக்குத் தள்ளி விடாதே! எங்களை இழப்படைந்தவர்களாக ஆக்கி விடாதே! (உனதருளுக்காக) எங்களை தேர்வு செய்; எங்களை விடுத்து (எங்கள் எதிரிகளைத்) தேர்வு செய்து விடாதே! நீ எங்களுக்கு வழங்கியிருப்பவற்றில் எங்களை மனநிறைவு அடையச் செய்! நீ எங்களைக் குறித்து உவப்புக் கொள்!)

பிறகு, “எனக்கு (இப்போது) பத்து இறைவசனங்கள் அருளப்பட்டன. அவற்றை யார் கடைப்பிடிக்கிறாரோ நிச்சயம் அவர் சொர்க்கம் செல்வார்’ என்று கூறிவிட்டு, “இறைநம்பிக்கையாளர்கள் வெற்றியடைந்துவிட்டனர்” (அல்குர்ஆன் 23:1-10) எனத் துவங்கும் அந்த பத்து வசனங்களை முழுமையாக எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

மேற்கண்ட செய்தியை (யூனுஸ் பின் ஸுலைமுக்கும், ஸுஹ்ரீ அவர்களுக்கும் இடையில் யூனுஸ் பின் யஸீத் இடம்பெறுமாறு) முஹம்மது பின் அபான் எங்களுக்கு அறிவித்தார்.

இந்த அறிவிப்பாளர்தொடரே சரியானதாகும். (யூனுஸ் பின் ஸுலைமுக்கும், ஸுஹ்ரீ அவர்களுக்கும் இடையில் யூனுஸ் பின் யஸீத் விடுபட்டு வருவது தவறாகும்.)

காரணம் என்னவெனில் இந்த செய்தியை இமாம் அஹ்மத், அலீ பின் மதீனீ, இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ஆகியோர் அப்துர் ரஸ்ஸாக் —> யூனுஸ் பின் ஸுலைம் —> யூனுஸ் பின் யஸீத் —> ஸுஹ்ரீ … என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளனர் என்று இஸ்ஹாக் பின் மன்ஸூர் அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அப்துர்ரஸ்ஸாக் அவர்களிடம் ஆரம்பத்தில் ஹதீஸைக் கேட்டவர்கள் இந்த செய்தியில் யூனுஸ் பின் யஸீதைக் கூறியுள்ளனர். சிலர் கூறவில்லை. யூனுஸ் பின் யஸீதைக் கூறி அறிவிப்பவர்களின் அறிவிப்பாளர்தொடரே மிகச் சரியானதாகும்.

அப்துர்ரஸ்ஸாக் அவர்கள் இந்த செய்தியை அறிவிக்கும்போது சில சமயம் யூனுஸ் பின் யஸீதை கூறி அறிவித்துள்ளார். சில சமயம் யூனுஸ் பின் யஸீதை கூறாமல் அறிவித்துள்ளார். யூனுஸ் பின் யஸீதை கூறாத அறிவிப்பாளர்தொடர் முர்ஸல் (அதாவது முன்கதிஃ) ஆகும்.