«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ كَأَنَّهُ عَلَى الرَّضْفِ»
366. நபி (ஸல்) அவர்கள் (தொழும்போது) முதலிரண்டு ரக்அத்களின் முடிவில் சூடான கல்மீது அமர்ந்திருப்பதைப் போன்று (சிறிது நேரமே அத்தஹிய்யாத் இருப்பில்) அமர்ந்திருப்பார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும். என்றாலும் அபூஉபைதா (ரஹ்) அவர்கள், தனது தந்தையான அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து, நேரடியாக எந்த ஹதீஸையும் செவியேற்கவில்லை.
மேற்கண்ட நபிமொழியின்படியே செயல்படவேண்டும் என்பது சில அறிஞர்களின் கருத்தாகும். முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் அமரக்கூடாது; அத்தஹிய்யாத் துஆவை விட வேறெதையும் கூடுதலாக ஓதக்கூடாது என்பது இவர்களின் கருத்தாகும்.
ஒருவர் அத்தஹிய்யாத் துஆவை விட வேறெதையும் கூடுதலாக ஓதினால் அவர் மறதிக்கான இரு ஸஜ்தா செய்வது அவசியம் என்றும் இவர்கள் கூறுகின்றனர். ஷஅபீ (ரஹ்) அவர்களிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும் இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.