🔗

திர்மிதி: 421

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ فَلَا صَلَاةَ إِلَّا المَكْتُوبَةُ»،


பாடம்:

தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டுவிட்டால், கடமையான அந்த தொழுகையைத் தவிர வேறு தொழுகை இல்லை.

421. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள், இப்னு புஹைனா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அப்துல்லாஹ் பின் ஸர்ஜிஸ் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன. அபூஹுரைரா (ரலி) அவர்களின் வழியாக வரும் (மேற்கண்ட) ஹதீஸ் “ஹஸன்” தரத்தில் அமைந்ததாகும்.

இந்தச் செய்தியை அம்ர் பின் தீனார் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அய்யூப், வர்காஉ பின் உமர், ஸியாத் பின் ஸஃத், இஸ்மாயீல் பின் முஸ்லிம், முஹம்மத் பின் ஜுஹாதா ஆகியோர், அம்ர் பின் தீனார் —> அதா பின் யஸார்—> அபூஹுரைரா (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

அம்ர் பின் தீனார் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸைத், ஸுஃப்யான் பின் உயைனா ஆகியோர் இதை நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.

நபி (ஸல்) அவர்களின் சொல்லாக வந்துள்ள ஹதீஸே எங்களின் பார்வையில் மிகவும் சரியானதாகும்.

இந்த ஹதீஸ் வேறு வகையான அறிவிப்பாளர்தொடரிலும் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து நபியின் சொல்லாக வந்துள்ளது.

மேலும் அய்யாஷ் பின் அப்பாஸ் அல்கித்பானீ அல்மிஸ்ரி அவர்கள், அபூஸலமா –> அபூஹுரைரா (ரலி) –> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில், இந்தச் செய்தியைப் போன்றே அறிவித்துள்ளார்.

நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் மற்றும் மற்ற அறிஞர்களில் சிலரின் கருத்து இந்த ஹதீஸின் அடிப்படையில் அமைந்துள்ளது. அதாவது, தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டுவிட்டால், பர்ளு தொழுகையைத் தவிர வேறு எந்தத் தொழுகையையும் ஒருவர் தொழக்கூடாது. ஸுஃப்யான் ஸவ்ரீ, இப்னுல் முபாரக், ஷாஃபிஈ, அஹ்மத், இஸ்ஹாக் ஆகியோர் இந்தக் கருத்தையே கொண்டுள்ளனர்.