🔗

திர்மிதி: 464

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي الوِتْرِ: «اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ، وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ، فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ، وَإِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ»


பாடம் :

வித்ருத் தொழுகையின் குனூத் துஆ பற்றி வந்துள்ளவை.

464. ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வித்ரில் நான் ஓதவேண்டிய வார்த்தைகளை எனக்கு கற்று தந்தார்கள். (அவைகள்)

அல்லாஹும்மஹ்தினீ ஃபீமன் ஹதைத்த, வ ஆஃபினீ பீமன் ஆஃபைத்த. வதவல்லனீ பீமன் தவல்லைத்த. வபாரிக்லீ ஃபீமா அஃதைத, வகினீ ஷர்ர மா களைத்த. ஃப இன்னக்க தக்லீ வலா யுக்லா அலைக்க. வ இன்னஹு லா யதிள்ளு மவ்வாலைத்த, தபாரக்த ரப்பனா வதஆலைத்த.

(பொருள்: இறைவா நீ நேர்வழி காட்டியவர்களுடன் எனக்கும் நேர்வழி காட்டுவாயாக. நீ யாருக்கு ஆரோக்கியத்தை வழங்கினாயோ அவர்களுடன் எனக்கும் ஆரோக்கியத்தை வழங்குவாயாக. யாருக்கு நீ பொறுப்பேற்றுக் கொண்டாயோ அவர்களுடன் எனக்கும் பொறுப்பேற்றுக் கொள். நீ எனக்குக் கொடுத்தவற்றில் அருள் புரி. நீ தீர்ப்பாக்கிய விஷயங்களில் கெட்டதை விட்டு என்னைக் காப்பாற்று. ஏனென்றால் நீயே முடிவு செய்வாய். உனக்கு எதிராக முடிவு செய்யப்படாது. நீ யாருக்குப் பொறுப்பேற்றாயோ அவர்கள் இழிவடைய மாட்டார்கள். எங்களின் இறைவா! நீயே பாக்கியசாலி. நீயே உயர்ந்தவன்.)

அறிவிப்பவர்: அபுல் ஹவ்ரா (ரஹ்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தப் பாடப் பொருளின் செய்தி அலீ (ரலி) வழியாகவும் வந்துள்ளது.

மேற்கண்ட செய்தி ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும். ரபீஆ பின் ஷைபான் என்ற பெயர்கொண்ட அபுல்ஹவ்ரா அஸ்ஸஃதிய்யி என்பவரின் வழியாகவே இந்த செய்தியை நாம் அறிகிறோம். வித்ருத் தொழுகையில் குனூத் ஓதுவது சம்பந்தமாக நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படும் செய்திகளில் இந்த செய்தியை விட அழகான செய்தியை நாம் அறியவில்லை.

வருடம் முழுவதும் வித்ருத்தொழுகையில் குனூத் ஓதலாம் என்றும், குனூதை ருகூஃ செய்வதற்கு முன்பு ஓதவேண்டும் என்றும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கருதுகிறார். இதுவே சில கல்வியாளர்கள், ஸுஃப்யான் ஸவ்ரீ, இப்னுல் முபாரக், இஸ்ஹாக் பின் ராஹவைஹி, கூஃபாவாசிகள் ஆகியோரின் கருத்துமாகும்.

அலீ (ரலி) அவர்கள், ரமலானின் இரண்டாவது பகுதியில் தான் குனூத் ஓதுவார்கள் என்றும், குனூத் துஆவை ருகூஃ செய்த பின்பு ஓதுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே சில கல்வியாளர்கள், ஷாஃபி இமாம், அஹ்மத் இமாம் ஆகியோரின் கருத்துமாகும்.