«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَخْرُجُ يَوْمَ الفِطْرِ حَتَّى يَطْعَمَ،
وَلَا يَطْعَمُ يَوْمَ الأَضْحَى حَتَّى يُصَلِّيَ»
பாடம்:
நோன்புப் பெருநாளன்று தொழுகைக்குப் புறப்படுவதற்குமுன் உணவு உண்பது தொடர்பாக வந்துள்ளவை.
542. புரைதா பின் அல்ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று உண்ணாமல் (தொழுகைக்குச்) செல்லமாட்டார்கள்.
ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழாமல் உணவு உண்ணமாட்டார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அலீ (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட
ஹதீஸ், ‘கரீப்’ எனும் வகையைச் சேர்ந்ததாகும்.
இந்த ஹதீஸின் (மூன்றாவது அறிவிப்பாளரான) ஸவாப் பின் உத்பா (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸைத் தவிர வேறு ஹதீஸ் எதையும் அறிவித்திருப்பதாக நான் அறியவில்லை என புகாரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நோன்புப் பெருநாளன்று எதையேனும் உட்கொண்ட பிறகே தொழுகைக்குச் செல்ல வேண்டும் என்று அறிஞர்களில் ஒரு குழுவினர் விரும்புகின்றனர். அதே நேரத்தில் (நோன்புப் பெருநாளன்று) பேரீச்சம் பழத்தை உண்பதும், ஹஜ்ஜுப் பெருநாளன்று தொழுதுவிட்டு திரும்பி வரும்வரை எதையும் உண்ணாமலிருப்பதும் விரும்பத்தக்கவை ஆகும் என்றும் கருதுகின்றனர்.