صَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسْجِدِ بَنِي عَبْدِ الأَشْهَلِ المَغْرِبَ، فَقَامَ نَاسٌ يَتَنَفَّلُونَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ بِهَذِهِ الصَّلَاةِ فِي البُيُوتِ»
பாடம்: 72
மஃக்ரிப் தொழுகைக்குப்பின் தொழும் (கூடுதல்) தொழுகையை வீட்டில் தொழுவதே சிறந்தது என்பது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவை.
604. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பனூ அப்தில் அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலில் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதார்கள். பிறகு மக்கள் கூடுதலான (நஃபில்) தொழுகையைத் தொழ எழுந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்தத் தொழுகையை (உங்கள்) வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இஸ்ஹாக் பின் கஅப்
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸ் கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்களிடமிருந்து இந்த அறிவிப்பாளர்தொடரில் தவிர வேறு தொடர்களில் வந்திருப்பதாக நாம் அறியவில்லை. எனவே இது ‘ஃகரீப்’ வகை ஹதீஸ் ஆகும்.
நபி (ஸல்) அவர்கள் ‘மஃக்ரிப்’ தொழுகைக்குப்பின் தமது வீட்டில் இரண்டு ரக்அத்கள் தொழுதுவந்தார்கள்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸே ஆதாரபூர்வமானதாகும்.
நபி (ஸல்) அவர்கள் ‘மஃக்ரிப்’ தொழுகையைத் தொழுதுவிட்டு இஷா தொழுகைவரை பள்ளிவாசலில் தொழுதுகொண்டேயிருந்தார்கள்”
என ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், ‘மஃக்ரிப்’ தொழுகைக்குப் பின் பள்ளிவாசலில் இரண்டு ரக்அத் தொழுதுள்ளார்கள் என்றக் கருத்து அடங்கியுள்ளது.