«مَنْ اسْتَفَادَ مَالًا فَلَا زَكَاةَ فِيهِ حَتَّى يَحُولَ عَلَيْهِ الحَوْلُ عِنْدَ رَبِّهِ»
632. ஒருவர், ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டால் ஒரு வருடம் கடக்கும் வரை அப்பொருளுக்கு அல்லாஹ்விடம் ஜகாத் இல்லை என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: நாஃபிஉ (ரஹ்)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்தச் செய்தியே அப்துர்ரஹ்மான் பின் ஸைத் என்பவர் வழியாக வரும் செய்தியைவிட மிகச் சரியானதாகும்.
இந்தச் செய்தியை நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அய்யூப் பின் கைஸான் (ரஹ்), உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) ஆகியோரும், வேறுசிலரும் இப்னு உமர் (ரலி) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளனர்.
(இந்தச் செய்தியை நபியின் சொல்லாக அறிவித்துள்ள) அப்துர்ரஹ்மான் பின் ஸைத் என்பவர் ஹதீஸ்துறையில் பலவீனமானவர் ஆவார். அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), அலீ பின் மதீனீ (ரஹ்) ஆகியோரும், மற்றும் பல ஹதீஸ்கலை அறிஞர்களும் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். மேலும் இவர் அதிகம் தவறிழைப்பவர் ஆவார்.
(புதிதாக கிடைத்த) ஒரு பொருளுக்கு ஒரு வருடம் கடக்கும் வரை அப்பொருளுக்கு ஸகாத் இல்லை என்ற கருத்து பல நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலிக் பின் அனஸ் (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகிய அறிஞர்கள் இச்சட்டத்தின்படியே முடிவு செய்கின்றனர்.
ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்), கூஃபாவாசிகள், மற்றும் வேறுசில கல்வியாளர்களின் கருத்து என்னவெனில்:
1 . ஒருவரிடம் ஏற்கனவே ஸகாத் கடமையான பொருள் இருந்தால், (அதாவது ஒருவருடம் கடந்த பொருள் இருந்து இடையில் புதிதாக கிடைத்தபொருளும் அந்த வகையைச் சேர்ந்ததாக இருந்தால்) புதிதாக கிடைத்த பொருளிலும் ஸகாத் கடமையாகும்.
2 . புதிதாக கிடைத்தப் பொருளைத் தவிர வேறுபொருள் இல்லாதிருந்தால் இந்த புதிதாக கிடைத்த பொருளுக்கு ஒருவருடம் கடக்கும் வரை ஸகாத் கடமையில்லை.
3 . ஒருவரிடம் ஏற்கனவே இருந்த பொருளில் ஒருவருடம் கடக்காமல் இருந்து, புதிதாக பொருள் கிடைத்தால் ஏற்கனவே இருந்த பொருளுக்கு ஒருவருடம் முடியும்போது, புதிதாக கிடைத்த பொருளையும் அத்துடன் சேர்த்து ஸகாத் கொடுக்க வேண்டும்.