«يَوْمُ عَرَفَةَ، وَيَوْمُ النَّحْرِ، وَأَيَّامُ التَّشْرِيقِ، عِيدُنَا أَهْلَ الإِسْلَامِ، وَهِيَ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ»
பாடம்: 59
அய்யாமுத் தஷ்ரீக் (துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய) நாட்களில் நோன்பு நோற்கலாகாது என்பது தொடர்பாக வந்துள்ளவை.
773. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
துல்ஹஜ் ஒன்பது (அரஃபா), துல்ஹஜ் பத்து (ஹஜ்ஜுப் பெருநாள்), துல்ஹஜ் பதினொன்று பன்னிரண்டு பதிமூன்று (அய்யாமுத் தஷ்ரீக்) ஆகிய (ஐந்து) நாட்களும் இஸ்லாமியர்களான நம்முடைய பண்டிகை நாட்களாகும். அவை உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், அலீ (ரலி), ஸஃத் (ரலி), அபூஹுரைரா (ரலி), ஜாபிர் (ரலி), நுபைஷா (ரலி), பிஷ்ர் பின் ஸுஹைம் (ரலி), அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி), அனஸ் (ரலி), ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ (ரலி), கஅப் பின் மாலிக் (ரலி), ஆயிஷா (ரலி), அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸ், ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்ததாகும்.
இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டுமென அறிஞர்கள் கருதுகின்றனர்; அய்யாமுத் தஷ்ரீக் (எனும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று) நாட்களில் நோன்பு நோற்கலாகாது என்று அவர்கள் கூறுகின்றனர். நபித்தோழர்கள் உள்ளிட்ட ஒரு சாரார், ‘தமத்துஉ’ முறையில் ஹஜ் செய்பவருக்கு பலிப்பிராணி கிடைக்காதபோது (அதற்குப் பரிகாரமாக) அவர் நிறைவேற்ற வேண்டிய நோன்புகளை துல்ஹஜ் முதல் பத்து நாட்களுக்குள் அவர் நோற்காமலிருந்தால் ‘அய்யாமுத் தஷ்ரீக்’ நாட்களில் நோற்றுக்கொள்ள அனுமதி உண்டு என்கின்றனர்.
இவ்வாறே மாலிக் (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்), இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) ஆகியோரும் கூறுகின்றனர்.
(இந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ள) மூஸா பின் அலீ (ரஹ்) அவர்களின் பெயரை, இராக் அறிஞர்கள் ‘மூஸா பின் அலீ பின் ரபாஹ்’ என்று குறிப்பிடுகின்றனர். எகிப்து அறிஞர்கள் ‘மூஸா பின் உலய்யு’ என்றே குறிப்பிடுகின்றனர்.
மூஸா பின் அலீ அவர்களே, “என் தந்தையின் பெயரை உலைய்யு என்று குறிப்பிட எவரையும் நான் அனுமதிக்கமாட்டேன்” என்று கூறியதாக ஸைஸ் பின் ஸஃத் (ரஹ்) அவர்கள் தெரிவித்தார் என்று குதைபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.