🔗

திர்மிதி: 806

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

صُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يُصَلِّ بِنَا، حَتَّى بَقِيَ سَبْعٌ مِنَ الشَّهْرِ، فَقَامَ بِنَا حَتَّى ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ، ثُمَّ لَمْ يَقُمْ بِنَا فِي السَّادِسَةِ، وَقَامَ بِنَا فِي الخَامِسَةِ، حَتَّى ذَهَبَ شَطْرُ اللَّيْلِ، فَقُلْنَا لَهُ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ نَفَّلْتَنَا بَقِيَّةَ لَيْلَتِنَا هَذِهِ؟ فَقَالَ: «إِنَّهُ مَنْ قَامَ مَعَ الإِمَامِ حَتَّى يَنْصَرِفَ كُتِبَ لَهُ قِيَامُ لَيْلَةٍ»، ثُمَّ لَمْ يُصَلِّ بِنَا حَتَّى بَقِيَ ثَلَاثٌ مِنَ الشَّهْرِ، وَصَلَّى بِنَا فِي الثَّالِثَةِ، وَدَعَا أَهْلَهُ وَنِسَاءَهُ، فَقَامَ بِنَا حَتَّى تَخَوَّفْنَا الفَلَاحَ،
قُلْتُ لَهُ: وَمَا الفَلَاحُ، قَالَ: «السُّحُورُ»


806. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமளானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. 23 ஆம் நாள் இரவில், மூன்றில் ஒரு பகுதி நேரம் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். 24 ஆம் நாள் எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை.

25 ஆம் நாள், பாதி இரவை தாண்டும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! மீதமுள்ள இந்த இரவு முழுதும் எங்களுக்கு தொழுகை நடத்துங்களேன்! என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஒரு மனிதர், இமாம் தொழுகை நடத்தி திரும்பிச் செல்லும் வரை அவருடன் தொழுதால் அவருக்கு அந்த இரவு முழுதும் நின்று வணங்கிய நன்மை எழுதப்படும்” என்று கூறினார்கள்.

26 ஆம் நாள் எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. 27 ஆம் நாள் இரவில் தமது மனைவிகளையும், குடும்பத்தினைரையும், மற்ற மக்களையும் ஒன்று திரட்டி, ஸஹர் உணவு தவறிவிடும் என்று நாங்கள் நினைக்கும் அளவுக்குத் தொழுகை நடத்தினார்கள். அதற்குப் பின் அவர்கள், மீதமுள்ள நாட்களில் தொழுகை நடத்தவில்லை.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

அபூதர் (ரலி) அவர்கள், “ஃபலாஹ் தவறிவிடும் அளவிற்கு” என்று கூறும் போது அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜுபைர் பின் நுஃபைர் (ரஹ்) அவர்கள், “ஃபலாஹ்” என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு, அபூதர் (ரலி) அவர்கள், “ஸஹர்” உணவு என்று பதிலளித்தார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

ரமளான் மாதத்தில் (கியாமுல் லைல் எனும்) இரவுத் தொழுகையின் ரக்அத் எண்ணிக்கை குறித்து அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். சிலர், வித்ருடன் சேர்த்து 41 ரக்அத்கள் தொழுவிப்பதை விரும்புகின்றனர். இது மதீனாவாசிகளின் கருத்து ஆகும். மேலும், மதீனாவில் இந்தப் பழக்கம் நடைமுறையில் இருந்தது.

பெரும்பாலான அறிஞர்கள் உமர் (ரலி), அலீ (ரலி) ஆகியோரிடமிருந்தும், நபி (ஸல்) அவர்களின் மற்ற தோழர்களிடமிருந்தும் அறிவிக்கப்பட்டுள்ள 20 ரக்அத்கள் என்ற கருத்தை ஆதரிக்கின்றனர். இதுவே ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்), இப்னுல் முபாரக் (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்) ஆகியோரின் கருத்தும் ஆகும்.

ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், “இவ்வாறே நான், என் ஊரான மக்காவில் 20 ரக்அத்கள் தொழுவிக்கப்படுவதைக் கண்டேன்” என்று கூறுகிறார்கள்.

அஹ்மத் (ரஹ்) அவர்கள், “இது குறித்து பல்வேறு அறிவிப்புகள் உள்ளன. ஆனால் இதில் எந்த ஒரு கருத்தும் (உறுதியாக) முடிவுசெய்யப்படவில்லை” என்று கூறுகிறார்கள்.

இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள், “உபை பின் கஅப் (ரலி) அவர்களிடமிருந்து வரும் அறிவிப்பின்படி 41 ரக்அத்களை நாங்கள் விரும்புகிறோம்” என்று கூறுகிறார்கள்.

இப்னுல் முபாரக் (ரஹ்), அஹ்மத் (ரஹ்), இஸ்ஹாக் (ரஹ்) ஆகியோர் ரமளான் மாதத்தில் (மக்கள்) இமாமுடன் சேர்ந்து தொழவேண்டும் என்று சட்டம் கூறுகின்றனர்.

ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள், “ஒருவர் குர்ஆன் ஓதத் தெரிந்தவராக இருந்தால், தனியாகத் தொழவேண்டும்” என்று சட்டம் கூறுகிறார்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் ஆயிஷா (ரலி), நுஃமான் பின் பஷீர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.