🔗

முஸ்னது அஹ்மத்: 16042

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

بَلَغَنِي حَدِيثٌ عَنْ رَجُلٍ سَمِعَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاشْتَرَيْتُ بَعِيرًا، ثُمَّ شَدَدْتُ عَلَيْهِ رَحْلِي، فَسِرْتُ إِلَيْهِ شَهْرًا، حَتَّى قَدِمْتُ عَلَيْهِ الشَّامَ فَإِذَا عَبْدُ اللَّهِ بْنُ أُنَيْسٍ، فَقُلْتُ لِلْبَوَّابِ: قُلْ لَهُ: جَابِرٌعَلَى الْبَابِ، فَقَالَ ابْنُ عَبْدِ اللَّهِ؟ قُلْتُ: نَعَمْ، فَخَرَجَ يَطَأُ ثَوْبَهُ فَاعْتَنَقَنِي، وَاعْتَنَقْتُهُ، فَقُلْتُ: حَدِيثًا بَلَغَنِي عَنْكَ أَنَّكَ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقِصَاصِ، فَخَشِيتُ أَنْ تَمُوتَ، أَوْ أَمُوتَ قَبْلَ أَنْ أَسْمَعَهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ – أَوْ قَالَ: الْعِبَادُ – عُرَاةً غُرْلًا بُهْمًا ” قَالَ: قُلْنَا: وَمَا بُهْمًا؟ قَالَ: ” لَيْسَ مَعَهُمْ شَيْءٌ، ثُمَّ يُنَادِيهِمْ بِصَوْتٍ يَسْمَعُهُ مِنْ بُعْدٍ كَمَا يَسْمَعُهُ مِنْ قُرْبٍ: أَنَا الْمَلِكُ، أَنَا الدَّيَّانُ، وَلَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ أَهْلِ النَّارِ، أَنْ يَدْخُلَ النَّارَ، وَلَهُ عِنْدَ أَحَدٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ حَقٌّ، حَتَّى أَقُصَّهُ مِنْهُ، وَلَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ أَنْ يَدْخُلَ الْجَنَّةَ، وَلِأَحَدٍ مِنْ أَهْلِ النَّارِ عِنْدَهُ حَقٌّ، حَتَّى أَقُصَّهُ مِنْهُ، حَتَّى اللَّطْمَةُ ” قَالَ: قُلْنَا: كَيْفَ وَإِنَّا إِنَّمَا نَأْتِي اللَّهَ عَزَّ وَجَلَّ عُرَاةً غُرْلًا بُهْمًا؟ قَالَ: «بِالْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ»


பாடம்:

அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ்கள்.

16042. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒருவர் கேட்ட ஒரு ஹதீஸ் எனக்கு எட்டியது. உடனே நான் ஒட்டகம் ஒன்றை விலைக்கு வாங்கி, அதன் மீது எனது பயணச் சாமான்களைக் கட்டினேன். அவரிடம் செல்வதற்காக ஒரு மாதம் நான் பயணம் செய்தேன். இறுதியில் நான் ஷாம் (சிரியா) நாட்டை அடைந்தேன். அங்கு (விசாரித்தபோது) அவர் அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) என்று தெரியவந்தது.

நான் அவருடைய வாயிற்காப்போனிடம், ‘வாசலில் ஜாபிர் நிற்கிறார் என்று அவரிடம் சொல்’ என்றேன். அதற்கு அவர், ‘அப்துல்லாஹ்வின் மகன் ஜாபிரா?’ என்று கேட்டார். நான் ‘ஆம்’ என்றேன். (அவர் சென்று அவர்களிடம் கூற) அப்தில்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்கள் அவசர அவசரமாகத் தனது ஆடையை இழுத்துக்கொண்டு வெளியே வந்து என்னை தழுவிக்கொண்டார், நானும் அவரைத் தழுவிக்கொண்டேன்.

பிறகு நான், “பழிவாங்குதல் சட்டம் குறித்து நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட ஒரு ஹதீஸ் எனக்கு எட்டியது. அதை உங்களிடமிருந்து நான் நேரடியாகக் கேட்பதற்கு முன்னால் நீங்கள் மரணித்து விடுவீர்களோ அல்லது நான் மரணித்து விடுவேனோ என்று நான் அஞ்சினேன் (அதனால் தான் இவ்வளவு தூரம் தேடி வந்தேன்)” என்றேன்.

அப்போது அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மறுமை நாளில் மனிதர்கள் (அல்லது அடியார்கள்) ஆடையற்றவர்களாக, விருத்தசேதனம் (கத்னா) செய்யப்படாதவர்களாக, ‘புஹ்ம்’ ஆக எழுப்பப்படுவார்கள்” என்று கூறினார்கள். நாங்கள், ‘புஹ்ம் என்றால் என்ன?’ என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அவர்களிடம் (உலகப் பொருட்கள்) எதுவுமே இருக்காது. பிறகு அல்லாஹ், தூரத்தில் இருப்பவர்களுக்கும் கேட்கும் விதமாக, அருகில் இருப்பவர்கள் கேட்பதைப் போன்றே ஒரு சத்தத்தைக் கொண்டு அவர்களை அழைப்பான்:

நானே அரசன்! நானே தீர்ப்பு வழங்குபவன்! நரகவாசிகளில் எவரிடமாவது சொர்க்கவாசி ஒருவருக்குரிய உரிமை (பழி) இருக்குமேயானால், நான் அவரிடமிருந்து அதனைப் பழிவாங்கிக் கொடுக்கும் வரை அந்த நரகவாசி நரகத்திற்குள் செல்லக் கூடாது. சொர்க்கவாசிகளில் எவரிடமாவது நரகவாசி ஒருவருக்குரிய உரிமை இருக்குமேயானால், நான் அவரிடமிருந்து அதனைப் பழிவாங்கிக் கொடுக்கும் வரை அந்த சொர்க்கவாசி சொர்க்கத்திற்குள் செல்லக் கூடாது. அது ஒரு சாதாரணக் கன்னத்தில் அறைந்த விஷயமாக இருந்தாலும் சரியே!’ என்று கூறுவான்.

நாங்கள், “நாங்கள் தான் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆடையற்றவர்களாக, விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாக, எதுவுமே இல்லாதவர்களாக வருவோமே! பிறகு எவ்வாறு (பழிவாங்கப்படும்)?’ என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நன்மைகள் மற்றும் தீமைகள் மூலமாக (அங்கு பழிவாங்கப்படும்)’ என்று கூறினார்கள்.