🔗

திர்மிதி: 739

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَخَرَجْتُ، فَإِذَا هُوَ بِالبَقِيعِ، فَقَالَ: «أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ»، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ، فَقَالَ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ»


பாடம்: 39

ஷஅபான் மாதத்தின் 15 ஆம் இரவு குறித்து வந்துள்ளவை.

739. ஒரு நாள் இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் காணாமல் நான் தேடினேன். நான் புறப்பட்டுவந்து பார்த்தபோது அவர்கள் ‘அல்பகீஉ’ எனும் பொதுமையவாடியில் இருந்தார்கள். (என்னைக் கண்டதும்) அவர்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உனக்கு அநீதி இழைத்துவிடுவார்கள் என நீ அஞ்சினாயா?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் தங்கள் துணைவியரில் வேறு யாரிடமும் சென்றுவிட்டீர்களோ என எண்ணிவிட்டேன்” என்று கூறினேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ஷஅபான் மாதம் 15 ஆம் நாள் இரவில் முதல் வானத்திற்கு இறங்கி, ‘கல்ப்’ குலத்தாரின் ஆடுகளின் ரோமங்களைவிட அதிகமாகப் பாவங்களை மன்னிக்கிறான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி, அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட செய்தி, ஹஜ்ஜாஜ் பின் அர்த்தாத் (ரஹ்) அவர்கள் வழியாகவே தவிர வேறு வழியில் வந்திருப்பதாக நாம் அறியவில்லை.

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் இது பலவீனமான ஹதீஸாகும் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

(காரணம் இந்த செய்தியின் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள) யஹ்யா பின் அபூகஸீர் (ரஹ்) அவர்கள், உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்து (நேரடியாக ஹதீஸ் எதையும்) செவியுற்றதில்லை. இதில் வரும் ஹஜ்ஜாஜ் பின் அர்த்தாத் (ரஹ்) அவர்கள், யஹ்யா பின் அபூகஸீர் (ரஹ்) அவர்களிடமிருந்து (எதையும்) செவியுற்றதில்லை என்று புகாரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.