தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3905

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என் பெற்றோர் (அபூ பக்ரும், உம்மு ரூமானும்) எனக்கு விவரம் தெரிந்தது முதல் (இஸ்லாமிய) மார்க்கத்தை கடைப்பிடிப்பவர்களாகவே இருந்தனர். பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும் மாலையிலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வருகை தராமல் எங்களின் எந்த நாளும் கழிந்ததில்லை. (மக்கா நகரில் வாழ்ந்த) முஸ்லிம்கள் (இணை வைப்பவர்களால் பல்வேறு துன்பங்கள்) சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டபோது, அபூ பக்ர் அவர்கள் அபிசீனிய நாட்டை நோக்கி, நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். அவர்கள் (யமன் செல்லும் வழியில்) ‘பர்குல் கிமாத்’ என்னும் இடத்தை அடைந்தபோது இப்னு தஃம்னா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் ‘அல்காரா’ எனும் (பிரபல) குலத்தின் தலைவராவார் – அவர் ‘அபூ பக்ரே எங்கே செல்கிறீர்?’ என்று கேட்டார். ‘என் சமுதாயத்தினர் என்னை (நாடு துறந்து) வெளியேறிச் செல்லும் நிலைக்குத் தள்ளிவிட்டனர். எனவே, நான் பூமியில் பரவலாகப் பயணம் செய்து (நிம்மதியாக) என் இறைவனை வணங்கப் போகிறேன்’ என்று அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது இப்னு தஃம்னா, ‘அபூ பக்ரே! தங்களைப் போன்றவர்கள் (தாமாகவும்) வெளியேறக் கூடாது, (பிறரால்) வெளியேற்றப்படவும் கூடாது. (ஏனெனில்) நீங்கள் ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். இரத்த பந்த உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள். (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள். விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள். சத்திய சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள் என்று (அவர்களின் அறச் சேவைகளைப் புகழ்ந்து) கூறிவிட்டு, ‘தங்களுக்கு அடைக்கலம் தருகிறேன். நீங்கள் (மக்காவிற்கே) திரும்பிச் சென்று உங்களின் (அந்த) ஊரிலேயே உங்களுடைய இறைவனை வணங்குங்கள்’ என்று கூறினார். அபூ பக்ர் (அபிசீனிய பயணத்தை ரத்துச் செய்துவிட்டு மக்காவிற்குத்) திரும்பினார்கள். அவர்களுடன் இப்னு தஃம்னாவும் பயணமா(கித் திரும்பி)னார். மாலையில் இப்னு தஃம்னா குறைஷிக் குல பிரமுகர்களைப் போய்ச் சந்தித்து அவர்களிடம் (நாட்டு மக்களுக்காகப் பாடுபடும்) அபூ பக்ரைப் போன்றவர்கள் (நாட்டிலிருந்து தாமாக) வெளியேறுவதோ, (பிறரால்) வெளியேற்றப்படுவதோ கூடாது. ஏழைகளுக்காக உழைக்கும், உறவுகளைப் பேணிவாழும், (சிரமப்படுவோரின்) பாரம் சுமந்து வரும், விருந்தினர்களை உபரிசத்து வரும், சத்திய சோதனைகளில் (ஆட்படுத்தப்பட்டோருக்கு) உதவி வரும் ஒரு (ஒப்பற்ற) மனிதரையா (நாடு துறந்து) வெளியேறிச் செல்லும் நிலைக்கு உள்ளாக்குகிறீர்கள்?’ என்று கேட்டார். (அபூ பக்ர் – ரலி – அவர்களுக்குத் தாம் அடைக்கலம் தரப் போவதாகக் கோரிய) இப்னு தஃம்னாவின் அடைக்கலத்தை குறைஷிகள் மறுக்கவில்லை. அவர்கள் இப்னு தஃம்னாவை நோக்கி, ‘அபூ பக்ர், தம் இல்லத்திற்குள்ளேயே தம் இறைவனை வணங்கவோ, தொழுகவோ, தாம் விரும்பியதை ஒதவோ செய்யட்டும். ஆனால், இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோ இவற்றை பகிரங்கமாகச் செய்வதோ கூடாது. ஏனெனில் எங்கள் மனைவி மக்கள் (புதிய மத நம்பிக்கை மற்றும் வணக்க வழிபாட்டு முறைகளைப் பார்த்து) குழப்பமடைந்து விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று அவரிடம் கூறிவிடுங்கள்’ என்று கூறினார்கள். அ(வர்கள் கூறிய)தை இப்னு தஃம்னா அபூ பக்ர்(ரலி) தம் இல்லத்திற்கு தம் இறைவனை வணங்கியும், தம் தொழுகையை பகிரங்கப்படுத்தாமலும் தம் வீட்டுக்கு வெளியில் (திருக்குர்ஆன் வசனங்களை) ஓதாமலும் (அவர்கள் விதித்த நிபந்தனைப்படி) இருந்து வந்தார்கள் பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு (மாற்று யோசனை) தோன்றியது. தம் வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் திருக்குர்ஆனை ஓதியும் வந்தார்கள். அப்போது, இணைவைப்பவர்களின் மனைவி மக்கள் அபூ பக்ர் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு (அவர்களைச் சூழ்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதற்காக) அவர்களின் மீது முண்டியடித்து விழுந்தனர். அபூ பக்ர்(ரலி) குர்ஆன் ஓதும்போது தம் கண்களை கட்டுப்படுத்த முடியாமல் (கண்ணீர் உகுத்த வண்ணம்) அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள். (அபூ பக்ர் அவர்களின்) இந்த நடவடிக்கை (எங்கே தங்களின் இளகிய இதயம் படைத்த மனைவி மக்களை மதம் மாறச் செய்து விடுமோ என்ற அச்சம்) இணைவைப்பவர்களான குறைஷிகளை பீதிக்குள்ளாக்கியது. அதனால் அவர்கள் இப்னு தஃம்னாவிடம் ஆளனுப்பினர். அவரும் குறைஷிகளிடம் வந்தார். அப்போது அவர்கள், ‘அபூ பக்ர் தம் இல்லத்திற்குள்ளேயே தம் இறைவனை வழிபட்டுக் கொள்ளட்டும் என்று (நிபந்தனையிட்டு) அவருக்கு நீங்கள் அடைக்கலம் தந்ததன் பேரிலேயே நாங்கள் அவருக்கு அடைக்கலம் தந்தோம். அவர் அதை மீறிவிட்டு தம் வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அந்த இடத்தில் பகிரங்கமாக தொழுது கொண்டும், (குர்ஆனை) ஓதிக் கொண்டும் இருக்கிறார். நாங்கள் எங்கள் மனைவி மக்கள் குழப்பத்திற்குள்ளாகி விடுவார்களோ என்று அஞ்சுகிறோம். எனவே, அபூ பக்ரைத் தடுத்துவையுங்கள். அவர் அவரின் இறைவனை தம் இல்லத்தில் வணங்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்யட்டும். அவர் அதை மறுத்து பகிரங்கப்படுத்தவே செய்வேன் என்றால் அவரிடம் உம்முடைய (அடைக்கலப்) பொறுப்பைத் திரும்பத் தருமாறு கேளுங்கள். ஏனெனில், (உங்களின் உடன்பாட்டை முறித்து) உங்களுக்கு நாங்கள் மோசடி செய்வதை வெறுக்கிறோம். (அதே சமயம்) அபூ பக்ர் (அவற்றை) பகிரங்கமாகச் செய்ய நாங்கள் அனுமதிப்போராகவும் இல்லை’ என்று கூறினார்.
ஆயிஷா(ரலி) கூறினார்: இப்னு தஃம்னா அபூ பக்ர் அவர்களிடம் வந்து, ‘நான் எ(ந்)த (நிபந்தனையி)ன் பேரில் உங்களிடம் ஒப்பந்தம் செய்தேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். எனவே ஒன்று, அதனோடு மட்டும் நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும், அல்லது என்னுடைய (அடைக்கலப்) பொறுப்பை என்னிடம் திரும்பத் தந்து விடவேண்டும். ஏனென்றால் நான் உடன்படிக்கை செய்த ஒரு மனிதரின் விஷயத்தில் நான் ஏமாற்றப்பட்டேன் என்று அரபுகள் கேள்விப்படுவதை நான் விரும்பமாட்டேன் ‘என்று கூறினார். அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘உம்முடைய அடைக்கலத்தை உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன். வல்லவனும் கண்ணியமிக்கவனுமான அல்லாஹ்வின் அடைக்கலம் குறித்து நான் திருப்திபடுகிறேன்’ என்று கூறினார்கள். அன்றைக்கு நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம்களைப் பார்த்து, ‘இரண்டு கருங்கல் மலைகளுக்கிடையே பேரீச்ச மரங்கள் நிறைந்த (மதீனா) பகுதியை நீங்கள் ஹிஜ்ரத் செல்கிற நாடாக நான் (கனவில்) காட்டப்பட்டேன்’ என்று கூறினார்கள். எனவே, மதீனா நோக்கி ஹிஜ்ரத் சென்றவர்கள் சென்றார்கள். (ஏற்கெனவே) அபிசீனிய நாட்டிற்கு ஹிஜ்ரத் சென்றிருந்தவர்கள் பலர் (முஸ்லிம்கள் மதீனாவில் குடியேறுவதைக் கேள்விப்பட்டு) மதீனாவுக்குத் திரும்பினார்கள். (மக்காவிலிருந்து) அபூ பக்ர் அவர்களும் மதீனா நோக்கி (ஹிஜ்ரத் புறப்பட) ஆயத்தமானார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘சற்று பொறுங்கள். எனக்கு (ஹிஜ்ரத்திற்கு) அனுமதி வழங்கப்படுவதை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்று (அபூ பக்ர் அவர்களிடம்) கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘என் தந்தை தங்களுக்கு அர்ப்பணம்; அனுமதியை(த்தான்) எதிர் பார்க்கிறீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கு, ‘ஆம் (எதிர்பார்க்கிறேன்)’ என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். எனவே, அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் (ஹிஜ்ரத்) செல்வதற்காகத் தன் (பயணத்தி)னை நிறுத்தினார்கள். மேலும், அபூ பக்ர் அவர்கள் (இந்தப் பயணத்திற்காகவே) தம்மிடம் இருந்த இரண்டு வாகன (ஒட்டக)ங்களுக்கு நான்கு மாதம் கருவேலந்தழையைத் தீனிபோட்டு (வளர்த்து) வந்தார்கள்.
ஆயிஷா(ரலி) (தொடர்ந்து) கூறுகிறார்கள்:
நாங்கள் ஒரு நாள் அபூ பக்ர்(ரலி) அவர்களின் இல்லத்தில் உச்சிப் பொழுதில் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் அபூ பக்ர் அவர்களிடம் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் தலையை மூடிய வண்ணம் – நம்மிடம் வருகைதராத நேரத்தில் (வழக்கத்திற்கு மாற்றமாக) இதோ வந்து கொண்டிருக்கிறார்கள்’ என்று கூறினார். அதற்கு அபூ பக்ர்(ரலி), ‘என் தந்தையும் என் தாயும் நபி(ஸல்) அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! ஏதோ (முக்கிய) விஷயம் தான் அவர்களை இந்த நேரத்தில் (இங்கு) வரச் செய்திருக்கிறது’ என்று கூறினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘உங்களிடம் இருப்பவர்களை வெளியே போகச் சொல்லுங்கள். (உங்களிடம் ஒரு ரகசியம் பேச வேண்டும்)’ என்று கூறினார்கள். அதற்கு, அபூ பக்ர் அவர்கள் (இல்லத்திற்குள் இருக்கும்) இவர்கள் உங்களுடைய (துணைவியின்) குடும்பத்தினர் தாம். என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத்) புறப்பட்டுச் செல்ல எனக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டது’ என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர் அவர்கள், ‘தங்களுடன் நானும் வர விரும்புகிறேன்! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் இறைத்தூதர் அவர்களே! என்று கேட்டார்கள். ‘சரி! (நீங்களும் வாருங்கள்)’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! என் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த என்னுடைய இரண்டு வாகன (ஒட்டக)ங்களில் ஒன்றைத் தாங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘விலைக்கு தான் (இதை நான் எடுத்துக் கொள்வேன்)’ என்று கூறினார்கள்:
ஆயிஷா(ரலி) கூறினார்: அவர்கள் இருவருக்காகவும் வேண்டிப் பயண ஏற்பாடுகளை வெகுவிரைவாக நாங்கள் செய்து முடித்தோம். ஒரு தோல்பையில் பயண உணவை நாங்கள் தயார் செய்து வைத்தோம். அப்போது அபூ பக்ரின் மகள் (என் சகோதரி) அஸ்மா தன்னுடைய இடுப்புக் கச்சிலிருந்து ஒரு துண்டை(க் கிழித்து) அதனை அந்தப் பையின் வாய் மீது வைத்துக் கட்டினார்கள். இதனால் தான் அவர்களுக்கு ‘கச்சுடையாள்’ என்று பெயர் வந்தது. பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களும் (பயணம் புறப்பட்டு) ‘ஸவ்ர்’ மலையில் உள்ள ஒரு குகைக்கு வந்து சேர்ந்து அதில் மூன்று நாள்களில்) அவர்கள் இருவருடன் அப்துல்லாஹ் இப்னு அபீ பக்ரும் இரவில் வந்து தங்கியிருப்பார் – அவர் சமயோசித அறிவு படைத்த, புத்திக் கூர்மையுள்ள இளைஞராக இருந்தார் பின்னிரவு (சஹர்) நேரத்தில் அவர்கள் இருவரைவிட்டும் புறப்பட்டு மக்கா குறைஷிகளுடன் இரவு தங்கியிருந்தவர் போன்று அவர்களுடன் காலையில் இருப்பார். அவர்கள் இருவரைப் பற்றி (குறைஷிகளால் செய்யப்படும்) சூழ்ச்சிகளைக் கேட்டு, அவற்றை நினைவில் இருத்திக் கொண்டு இருள் சேரும் நேரத்தில் அவர்கள் இருவரிடமும் அச்செய்திகளைக் கொண்டு வந்து விடுவார்.
அவர்கள் இருவருக்காக அபூ பக்ர்(ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமை ஆமிர் இப்னு ஃபுஹைரா (அபூ பக்ர் அவர்களின்) மந்தையிலிருந்து ஒரு பால் தரும் ஆட்டை மேய்த்து வருவார். இரவின் சிறிது நேரம் கழிந்தவுடன் அதனை அவர்கள் இருவரிடமும் ஓட்டி வருவார். அந்தப் பாலிலேயே இருவரும் இரவைக் கழித்து விடுவார்கள் – அது புத்தம் புதிய, அடர்த்தி அகற்றப்பட்ட பாலாகும் – அந்த ஆட்டை ஆமிர் இப்னு ஃபுஹைரா இரவின் இருட்டு இருக்கும் போதே விரட்டிச் செல்வார். இதை (அவர்கள் இருவரும் அந்தக் குகையில் தங்கியிருந்த) மூன்று இரவுகளில் ஒவ்வோர் இரவிலும் அவர் செய்து வந்தார். மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் பனூ அப்து இப்னு அதீ குலத்தில் ‘பனூ அத்தீல்’ என்னும் கிளையைச் சேர்ந்த கை தேர்ந்த ஒருவரை பயண வழி காட்டியாக இருக்கக் கூலிக்கு அமர்த்தினர். அவர் ஆஸ்பின் வாயில் அஸ்ஸஹ்மீ என்னும் குலத்தாருடன் நட்புறவு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். (ஆனாலும்) அவர் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களின் மதத்தில் இருந்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி) அவர்களும் அவரை நம்பி, தங்களின் இரண்டு வாகன (ஒட்டக)ங்களை ஒப்படைத்து மூன்று இரவுகளுக்குப் பின் ‘ஸவ்ர்’ குகைக்கு வந்து விடுமாறு வாக்குறுதி வாங்கியிருந்தனர். மூன்றாம் (நாள்) அதிகாலையில் அந்த இருவாகனங்களுடன் (அவர் ஸவ்ர் குகைக்கு வந்து சேர்ந்தார்.) அவர்கள் இருவருடன் ஆமிர் இப்னு ஃபுஹைராவும் பயண வழிகாட்டியும் சென்றனர். பயண வழிகாட்டி அவர்களைக் கடற்கரைப் பாதையில் அழைத்துச் சென்றார்.
Book :63

(புகாரி: 3905)

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، قَالَ ابْنُ شِهَابٍ: فَأَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ

لَمْ أَعْقِلْ أَبَوَيَّ قَطُّ، إِلَّا وَهُمَا يَدِينَانِ الدِّينَ، وَلَمْ يَمُرَّ عَلَيْنَا يَوْمٌ إِلَّا يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَرَفَيِ النَّهَارِ، بُكْرَةً وَعَشِيَّةً، فَلَمَّا ابْتُلِيَ المُسْلِمُونَ خَرَجَ أَبُو بَكْرٍ مُهَاجِرًا نَحْوَ أَرْضِ الحَبَشَةِ، حَتَّى إِذَا بَلَغَ بَرْكَ الغِمَادِ لَقِيَهُ ابْنُ الدَّغِنَةِ وَهُوَ سَيِّدُ القَارَةِ، فَقَالَ: أَيْنَ تُرِيدُ يَا أَبَا بَكْرٍ؟ فَقَالَ أَبُو بَكْرٍ: أَخْرَجَنِي قَوْمِي، فَأُرِيدُ أَنْ أَسِيحَ فِي الأَرْضِ وَأَعْبُدَ رَبِّي، قَالَ ابْنُ الدَّغِنَةِ: فَإِنَّ مِثْلَكَ يَا أَبَا بَكْرٍ لاَ يَخْرُجُ وَلاَ يُخْرَجُ، إِنَّكَ تَكْسِبُ المَعْدُومَ وَتَصِلُ الرَّحِمَ، وَتَحْمِلُ الكَلَّ وَتَقْرِي الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الحَقِّ، فَأَنَا لَكَ جَارٌ ارْجِعْ وَاعْبُدْ رَبَّكَ بِبَلَدِكَ، فَرَجَعَ وَارْتَحَلَ مَعَهُ ابْنُ الدَّغِنَةِ، فَطَافَ ابْنُ الدَّغِنَةِ عَشِيَّةً فِي أَشْرَافِ قُرَيْشٍ، فَقَالَ لَهُمْ: إِنَّ أَبَا بَكْرٍ لاَ يَخْرُجُ مِثْلُهُ وَلاَ يُخْرَجُ، أَتُخْرِجُونَ رَجُلًا يَكْسِبُ المَعْدُومَ وَيَصِلُ الرَّحِمَ، وَيَحْمِلُ الكَلَّ وَيَقْرِي الضَّيْفَ، وَيُعِينُ عَلَى نَوَائِبِ الحَقِّ، فَلَمْ تُكَذِّبْ قُرَيْشٌ بِجِوَارِ ابْنِ الدَّغِنَةِ، وَقَالُوا: لِابْنِ الدَّغِنَةِ: مُرْ أَبَا بَكْرٍ فَلْيَعْبُدْ رَبَّهُ فِي دَارِهِ، فَلْيُصَلِّ فِيهَا وَلْيَقْرَأْ مَا شَاءَ، وَلاَ يُؤْذِينَا بِذَلِكَ وَلاَ يَسْتَعْلِنْ بِهِ، فَإِنَّا نَخْشَى أَنْ يَفْتِنَ نِسَاءَنَا وَأَبْنَاءَنَا، فَقَالَ ذَلِكَ ابْنُ الدَّغِنَةِ لِأَبِي بَكْرٍ، فَلَبِثَ أَبُو بَكْرٍ بِذَلِكَ يَعْبُدُ رَبَّهُ فِي دَارِهِ، وَلاَ يَسْتَعْلِنُ بِصَلاَتِهِ وَلاَ يَقْرَأُ فِي غَيْرِ دَارِهِ، ثُمَّ بَدَا لِأَبِي بَكْرٍ، فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ، وَكَانَ يُصَلِّي فِيهِ، وَيَقْرَأُ القُرْآنَ، فَيَنْقَذِفُ عَلَيْهِ نِسَاءُ المُشْرِكِينَ وَأَبْنَاؤُهُمْ، وَهُمْ يَعْجَبُونَ مِنْهُ وَيَنْظُرُونَ إِلَيْهِ، وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلًا بَكَّاءً، لاَ يَمْلِكُ عَيْنَيْهِ إِذَا قَرَأَ القُرْآنَ، وَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنَ المُشْرِكِينَ، فَأَرْسَلُوا إِلَى ابْنِ الدَّغِنَةِ فَقَدِمَ عَلَيْهِمْ، فَقَالُوا: إِنَّا كُنَّا أَجَرْنَا أَبَا بَكْرٍ بِجِوَارِكَ، عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِي دَارِهِ، فَقَدْ جَاوَزَ ذَلِكَ، فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ، فَأَعْلَنَ بِالصَّلاَةِ وَالقِرَاءَةِ فِيهِ، وَإِنَّا قَدْ خَشِينَا أَنْ يَفْتِنَ نِسَاءَنَا وَأَبْنَاءَنَا، فَانْهَهُ، فَإِنْ أَحَبَّ أَنْ يَقْتَصِرَ عَلَى أَنْ يَعْبُدَ رَبَّهُ فِي دَارِهِ فَعَلَ، وَإِنْ أَبَى إِلَّا أَنْ يُعْلِنَ بِذَلِكَ، فَسَلْهُ أَنْ يَرُدَّ إِلَيْكَ ذِمَّتَكَ، فَإِنَّا قَدْ كَرِهْنَا أَنْ نُخْفِرَكَ، وَلَسْنَا مُقِرِّينَ لِأَبِي بَكْرٍ الِاسْتِعْلاَنَ، قَالَتْ عَائِشَةُ: فَأَتَى ابْنُ الدَّغِنَةِ إِلَى أَبِي بَكْرٍ فَقَالَ: قَدْ عَلِمْتَ الَّذِي عَاقَدْتُ لَكَ عَلَيْهِ، فَإِمَّا أَنْ تَقْتَصِرَ عَلَى ذَلِكَ، وَإِمَّا أَنْ تَرْجِعَ إِلَيَّ ذِمَّتِي، فَإِنِّي لاَ أُحِبُّ أَنْ تَسْمَعَ العَرَبُ أَنِّي أُخْفِرْتُ فِي رَجُلٍ عَقَدْتُ لَهُ، فَقَالَ أَبُو بَكْرٍ: فَإِنِّي أَرُدُّ إِلَيْكَ جِوَارَكَ، وَأَرْضَى بِجِوَارِ اللَّهِ عَزَّ وَجَلَّ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ بِمَكَّةَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْمُسْلِمِينَ: «إِنِّي أُرِيتُ دَارَ هِجْرَتِكُمْ، ذَاتَ نَخْلٍ بَيْنَ لاَبَتَيْنِ» وَهُمَا الحَرَّتَانِ، فَهَاجَرَ مَنْ هَاجَرَ قِبَلَ المَدِينَةِ، وَرَجَعَ عَامَّةُ مَنْ كَانَ هَاجَرَ بِأَرْضِ الحَبَشَةِ إِلَى المَدِينَةِ، وَتَجَهَّزَ أَبُو بَكْرٍ قِبَلَ المَدِينَةِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى رِسْلِكَ، فَإِنِّي أَرْجُو أَنْ يُؤْذَنَ لِي» فَقَالَ أَبُو بَكْرٍ: وَهَلْ تَرْجُو ذَلِكَ بِأَبِي أَنْتَ؟ قَالَ: «نَعَمْ» فَحَبَسَ أَبُو بَكْرٍ نَفْسَهُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَصْحَبَهُ، وَعَلَفَ رَاحِلَتَيْنِ كَانَتَا عِنْدَهُ وَرَقَ السَّمُرِ وَهُوَ الخَبَطُ، أَرْبَعَةَ أَشْهُرٍ. قَالَ ابْنُ شِهَابٍ، قَالَ: عُرْوَةُ، قَالَتْ عَائِشَةُ: فَبَيْنَمَا نَحْنُ يَوْمًا جُلُوسٌ فِي بَيْتِ أَبِي بَكْرٍ فِي نَحْرِ الظَّهِيرَةِ، قَالَ قَائِلٌ لِأَبِي بَكْرٍ: هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَقَنِّعًا، فِي سَاعَةٍ لَمْ يَكُنْ يَأْتِينَا فِيهَا، فَقَالَ أَبُو بَكْرٍ: فِدَاءٌ لَهُ أَبِي وَأُمِّي، وَاللَّهِ مَا جَاءَ بِهِ فِي هَذِهِ السَّاعَةِ إِلَّا أَمْرٌ، قَالَتْ: فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَأْذَنَ، فَأُذِنَ لَهُ فَدَخَلَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي بَكْرٍ: «أَخْرِجْ مَنْ عِنْدَكَ». فَقَالَ أَبُو بَكْرٍ: إِنَّمَا هُمْ أَهْلُكَ، بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «فَإِنِّي قَدْ أُذِنَ لِي فِي الخُرُوجِ» فَقَالَ أَبُو بَكْرٍ: الصَّحَابَةُ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ» قَالَ أَبُو بَكْرٍ: فَخُذْ – بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ – إِحْدَى رَاحِلَتَيَّ هَاتَيْنِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِالثَّمَنِ». قَالَتْ عَائِشَةُ: فَجَهَّزْنَاهُمَا أَحَثَّ الجِهَازِ، وَصَنَعْنَا لَهُمَا سُفْرَةً فِي جِرَابٍ، فَقَطَعَتْ أَسْمَاءُ بِنْتُ أَبِي بَكْرٍ قِطْعَةً مِنْ نِطَاقِهَا، فَرَبَطَتْ بِهِ عَلَى فَمِ الجِرَابِ، فَبِذَلِكَ سُمِّيَتْ ذَاتَ النِّطَاقَيْنِ قَالَتْ: ثُمَّ لَحِقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ بِغَارٍ فِي جَبَلِ ثَوْرٍ، فَكَمَنَا فِيهِ ثَلاَثَ لَيَالٍ، يَبِيتُ عِنْدَهُمَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، وَهُوَ غُلاَمٌ شَابٌّ، ثَقِفٌ لَقِنٌ، فَيُدْلِجُ مِنْ عِنْدِهِمَا بِسَحَرٍ، فَيُصْبِحُ مَعَ قُرَيْشٍ بِمَكَّةَ كَبَائِتٍ، فَلاَ يَسْمَعُ أَمْرًا، يُكْتَادَانِ بِهِ إِلَّا وَعَاهُ، حَتَّى يَأْتِيَهُمَا بِخَبَرِ ذَلِكَ حِينَ يَخْتَلِطُ الظَّلاَمُ، وَيَرْعَى عَلَيْهِمَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ، مَوْلَى أَبِي بَكْرٍ مِنْحَةً مِنْ غَنَمٍ، فَيُرِيحُهَا عَلَيْهِمَا حِينَ تَذْهَبُ سَاعَةٌ مِنَ العِشَاءِ، فَيَبِيتَانِ فِي رِسْلٍ، وَهُوَ لَبَنُ مِنْحَتِهِمَا وَرَضِيفِهِمَا، حَتَّى يَنْعِقَ بِهَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ بِغَلَسٍ، يَفْعَلُ ذَلِكَ فِي كُلِّ لَيْلَةٍ مِنْ تِلْكَ اللَّيَالِي الثَّلاَثِ، وَاسْتَأْجَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ رَجُلًا مِنْ بَنِي الدِّيلِ، وَهُوَ مِنْ بَنِي عَبْدِ بْنِ عَدِيٍّ، هَادِيَا خِرِّيتًا، وَالخِرِّيتُ المَاهِرُ بِالهِدَايَةِ، قَدْ غَمَسَ حِلْفًا فِي آلِ العَاصِ بْنِ وَائِلٍ السَّهْمِيِّ، وَهُوَ عَلَى دِينِ كُفَّارِ قُرَيْشٍ، فَأَمِنَاهُ فَدَفَعَا إِلَيْهِ رَاحِلَتَيْهِمَا، وَوَاعَدَاهُ غَارَ ثَوْرٍ بَعْدَ ثَلاَثِ لَيَالٍ، بِرَاحِلَتَيْهِمَا صُبْحَ ثَلاَثٍ، وَانْطَلَقَ مَعَهُمَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ، وَالدَّلِيلُ، فَأَخَذَ بِهِمْ طَرِيقَ السَّوَاحِلِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.