தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-3906

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 சுராகா இப்னு (மாலிக் இப்னி) ஜுஃஷும்(ரலி) அறிவித்தார்.
குறைஷிக்குலத்தின் தூதுவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களையும், அபூ பக்ர்(ரலி) அவர்களையும் கொலை செய்பவருக்கு, அல்லது (உயிருடன்) கைது செய்து வருபவருக்கு இருவரில் ஒவ்வொருவருக்கும் (நூறு ஒட்டகம் என்று) பரிசை நிர்ணயம் செய்(து அறிவித்)தவர்களாக எங்களிடம் வந்தனர். அப்போது நான் எங்களின் பனூ முத்லிஜ் சமுதாயத்தின் அவைகளில் ஒன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களில் ஒருவர் எழுந்து வந்து, அமர்ந்து கொண்டிருந்த எங்களிடையே நின்று கொண்டு, ‘சுராகாவே! சற்று முன் நான் கடலோரத்தில் சில உருவங்களைப் பார்த்தேன். அவர்கள் முஹம்மதும் அவரின் தோழர்களும் தாம் என்று கருதுகிறேன்’ என்று கூறினார். அவர்கள் முஹம்மதும் தோழர்களும் தாம் என்று அறிந்து கொண்டேன். (இருப்பினும் அவரைத் திசை திருப்புவதற்காக) ‘அவர்கள் முஹம்மதும் அவர்களின் தோழர்களும் அல்லர். மாறாக, இன்னார் இன்னாரைத்தான் நீ பார்த்திருப்பாய். அவர்கள் எங்கள் கண்ணெதிரே தான் (தங்களின் காணாமல் போன ஒட்டகங்களைத் தேடிப்) போனார்கள்’ என்று நான் அவரிடம் கூறினேன். பிறகு அந்த அவையிலேயே சிறிது நேரம் இருந்தேன். அதற்குப் பிறகு எழுந்து (என்னுடைய இல்லத்திற்குள்) நுழைந்து என் அடிமைப் பெண்ணிடம் என்னுடைய குதிரையை வெளியே கொண்டு வரும்படி உத்தரவிட்டேன் – அப்போது குதிரை ஒரு மலைக்குன்றுக்கு அப்பால் இருந்தது. – எனக்காக அதை அவள் (அங்கே) கட்டிவைத்திருந்தாள். பின்பு, நான் என்னுடைய ஈட்டியை எடுத்துக் கொண்டு வீட்டின் பின் புற வாசல் வழியாக வெளியேறினேன். (ஈட்டியை நான் தாழ்த்திப் பிடித்திருந்ததால்) அதன் கீழ் முனையால் (என்னையும் அறியாமலேயே) தரையில் கோடு கிழித்தேன். மேலும் அதன் மேல் நுனியை தாழ்த்திக் கொண்டு என் குதிரையிடம் வந்து அதன் மீது ஏறிக் கொண்டேன். அதன் முன்னங்கால் இரண்டையும் ஒரே நேரத்தில் உயர்த்தி ஒரே நேரத்தில் பூமியில் வைக்குமாறு செய்து மிக வேகமாகப் புறப்பட்டு அவர்களை நெருங்கினேன். அப்போது என்னுடைய குதிரை காலிடறி அதிலிருந்து நான் விழுந்து விட்டேன். உடனே நான் எழுந்து தன்னுடைய கையை அம்புக்கூட்டை நோக்கி நீட்டி, அதிலிருந்து (சகுனச் சொற்கள் எழுதப்பட்ட) அம்புகளை எடுத்தேன். அவற்றின் மூலம் என்னால் அவர்களுக்கு பாதிப்பை உருவாக்க முடியுமா அல்லது முடியாதா என்று குறிபார்த்தேன். நான் விரும்பாத (வகையில், என்னால் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியாது என்ப)தே வந்தது. என்னுடைய அம்புகளுக்கு மாறு செய்துவிட்டு என்னுடைய குதிரையில் ஏறினேன். அது பாய்ந்த வண்ணம் சென்றது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (திருக்குர்ஆன்) ஓதியதை கேட்டேன். அவர்கள் திரும்பிப் பார்க்கவில்லை. அபூ பக்ர் அவர்கள் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (அப்போது) என்னுடைய குதிரையின் முன்கால்கள் இரண்டும் முட்டுக்கால்கள் வரையிலும் பூமியில் புதைந்து கொண்டன. நான் குதிரையிலிருந்து கீழே விழுந்து விட்டேன். பிறகு (அதை எழச் செய்வதற்காக) அதை நான் அரற்றினேன். அது எழுந்(திருக்க முயற்றித்)தது. (ஆனால்,) அதன் கால்களை அதனால் வெளியே எடுக்க முடியவில்லை. அது நேராக எழுந்து நின்றபோது இரண்டு முன்னங்கால்களின் அடிச் சுவட்டிலிருந்து புகை போன்று வானத்தில் பரவலாகப் புழுதி கிளம்பிற்று. உடனே நான் (என்னுடைய) அம்புகளைக் கொண்டு (சகுனக்) குறிபார்த்தேன். நான் விரும்பாததே வந்தது. உடனே, நான் எனக்கு (உயிர்) பாதுகாப்பு நல்கும்படி அவர்களை அழைத்தேன். உடனே, அவர்கள் நின்றுவிட்டனர். நான் என்னுடைய குதிரையிலேறி அவர்களிடம் வந்து சேர்ந்தேன். அவர்களைவிட்டும் (என்னுடைய குதிரை) தடுக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியை நான் கண்டபோது என்னுடைய மனதிற்குள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (மார்க்க) விஷயம் மேலோங்கும் என்று தோன்றியது. நான் அல்லாஹ்வின் தூதரிடம், ‘உங்களுடைய (குறைஷி) சமுதாயத்தினர் உங்களுக்காகப் பரிசை நிர்ணயித்துள்ளனர்’ என்று கூறிவிட்டு அந்த (குறைஷி) மக்கள் முஸ்லிம்களைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்ற தகவல்களை அவர்களிடம் எடுத்துச் சொன்னேன். மேலும், என்னுடைய பயண உணவுப் பொருள்களை எடுத்துக் காட்டினேன். அவர்கள் என்னிடமிருந்து ஒன்றையும் (எடுத்து) எனக்கு குறைவு செய்யவுமில்லை. மேலும், (என்னிடமிருந்த எதையும்) அவர்கள் இருவரும் என்னிடம் கேட்கவுமில்லை. ஆயினும், நபி(ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘எங்களைப் பற்றி(ய செய்தியை) மறைத்து விடு’ என்று கூறினார்கள். உடனே, நான் நபி(ஸல்) அவர்களிடம் எனக்கு ஒரு பாதுகாப்புப் பத்திரம் எழுதித்தரும்படி வேண்டினேன். அப்போது, நபி(ஸல்) அவர்கள் ஆமிர் இப்னு ஃபுஹைராவுக்கு உத்தரவிட அவர் பாடமிடப்பட்ட தோல் துண்டில் (பாதுகாப்புப் பத்திரத்தின் வாசகத்தை) எழுதினார். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சகாக்களுடன் மதீனா நோக்கிச்) சென்றார்கள்.
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்:
ஷாம் நாட்டிலிருந்து (வியாபாரத்தை முடித்துக் கொண்டு) திரும்பிக் கொண்டிருந்த முஸ்லிம்களின் வணிகக் குழுவிலிருந்த ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும், அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும், வெண்ணிற ஆடைகளைப் போர்த்தினார்கள். மதீனாவிலிருந்த முஸ்லிம்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டுவிட்டதைக் கேள்விப்பட்டு, ஒவ்வொரு நாள் காலையிலும் (மதீனாவின் புறநகர்ப் பகுதியிலிருந்த கருற்கற்கள் நிறைந்த) ‘ஹர்ரா’ எனுமிடத்திற்கு வந்து நண்பகலின் வெப்பம் அவர்களைத் திருப்பியனுப்பும் வரையில் நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்திருந்தனர். அப்படி ஒரு நாள் நீண்ட நேரம் நபி(ஸல்) அவர்களை எதிர்பார்த்துவிட்டு (ஊருக்குள்) அவர்கள் திரும்பித் தத்தம் வீட்டுக்குள் ஒதுங்கியபோது யூதர்களில் ஒருவர் அவர்களின் கோட்டைகளில் ஒன்றின் மீது எதையோ பார்ப்பதற்காக ஏறியிருந்தார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் வெண்ணிற ஆடையில், கானல் நீர் விலக வருவதைப் பார்த்தார். அந்த யூதரால் (தம்மைக்) கட்டுப்படுத்த இயலாமல் உரத்த குரலில், ‘அரபுக் குலமே!’ இதோ நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த உங்களுடைய நாயகர்.’… என்று கூவினார். உடனே, முஸ்லிம்கள் (நபி – ஸல் – அவர்களைப் பாதுகாப்புடன் வரவேற்பதற்காக). ஆயுதங்களை நோக்கி கிளர்ந்தெழுந்தனர். அந்த (கருங்கற்கள் நிறைந்த) ஹர்ராவின் பரப்பில் இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அவர்களுடன் நபி(ஸல்) அவர்கள் வலப்பக்கமாகத் திரும்பி (‘குபா’வில் உள்ள) பனூ அம்ர் இப்னு அவ்ஃப் குலத்தாரி(ன் குடியிருப்புப் பகுதியி)ல் தங்கினார்கள். இது ரபீஉல் அவ்வல் மாதம் திங்கள் கிழமை நடந்தது. அப்போது மக்களை நோக்கி அபூ பக்ர்(ரலி) எழுந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மெளனமாக அமர்ந்திருந்தார்கள். அப்போது அங்கு வந்திருந்த நபி(ஸல்) அவர்களைப் பார்த்திராத – அன்சாரிகளில் சிலர் (அபூ பக்ர்(ரலி) அவர்களை இறைத்தூதர் என்று எண்ணிக் கொண்டு) அபூ பக்ர்,(ரலி) அவர்களுக்கு முகமன் கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மீது நிழலிட்டார்கள். அப்போதுதான் மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மீது நிழலிட்டார்கள். அப்போதுதான் மக்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களை அறிந்து கொண்டனர். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பனூ அம்ர் இப்னு அவ்ஃபினரிடையே (குபாவில்) பத்துக்கும் மேற்பட்ட நாள்கள் தங்கியிருந்து ‘இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (மஸ்ஜித் குபா) பள்ளிவாசலை’ நிறுவினார்கள். (தாம் தங்கியிருந்த நாள்களில்) அந்தப் பள்ளியில் தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பிறகு தம் வாகனத்திலேறி பயணமானார்கள். அவர்களுடன் மக்களும் நடந்து சென்றனர். முடிவாக (அவர்களின்) ஒட்டகம் மதீனாவில் (தற்போது) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் (அமைந்துள்ள இடம்) அருகே மண்டியிட்டு படுத்துக் கொண்டது. அந்த நாளில் முஸ்லிம்களில் சிலர் அங்கு தான் தொழுது கொண்டிருந்தனர். அது ஸஅத் இப்னு ஸுராரா(ரலி) அவர்களின் பொறுப்பிலிருந்த ஸஹ்ல், சுஹைல் என்ற இரண்டு அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமான பேரீச்சம் பழம் (உலர வைக்கப்படும்) களமாக இருந்தது. அந்த இடத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாகனம் மண்டியிட்டுப் படுத்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘இன்ஷா அல்லாஹ் இதுதான் (நம்முடைய) தங்குமிடம்’ என்று கூறினார்கள். பிறகு அந்த இரண்டு சிறுவர்களையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைத்து அந்தக்களத்தை பள்ளிவாயில் அமைப்பதற்காக விலைக்குக் கேட்டார்கள். அவர்கள் இருவரும், ‘இல்லை. அதை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறோம் இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினர். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சிறுவர்களிடமிருந்து அதை அன்பளிப்பாகப் பெற மறுத்து இறுதியில் அதை அவர்களிடமிருந்து விலைக்கே வாங்கினார்கள். பிறகு அதில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். அதைக் கட்டும்போது அவர்களுடன் இறைத்தூதர்(ஸல்) அவர்களும் செங்கல் சுமக்கலானார்கள். (அப்போது,) ‘இந்தச் சுமை கைபரின் சுமையல்ல. இது எங்களின் இறைவனிடம் (சேமித்து வைக்கப்படும்) நீடித்த நன்மையும் (கைபரின் சுமையை விடப் பரிசுத்தமானதுமாகும்’ என்று (‘ரஜ்ஸ்’ எனும் யாப்பு வகைப் பாடலைப் பாடியபடி) கூறிக் கொண்டிருந்தார்கள். மேலும், ‘இறைவா (உண்மையான) பலன் மறுமையின் பலனே. எனவே (மறுமைப் பலனுக்காக பாடுபடும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் கருணையன்பு காட்டுவாயாக’ என்று கூறினார்கள்.
அப்போது முஸ்லிம்களில் ஒருவரின் கவிதையை நபியவர்கள் பாடிக்காட்டினார்கள். அவரின் பெயர் என்னிடம் கூறப்படவில்லை (என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப்(ரஹ்) கூறிவிட்டு தொடர்ந்து) இப்னு ஷிஹாப்(ரஹ்) கூறினார்கள்:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்தப் பாடல்(வரி)களைத் தவிர ஒரு முழுமையான கவிதையின் பாடலைப் பாடியதாக எனக்கு ஹதீஸ்களில் (செய்தி) எட்டவில்லை.
Book :63

(புகாரி: 3906)

قَالَ ابْنُ شِهَابٍ: وَأَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَالِكٍ المُدْلِجِيُّ، وَهُوَ ابْنُ أَخِي سُرَاقَةَ بْنِ مَالِكِ بْنِ جُعْشُمٍ، أَنَّ أَبَاهُ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ سُرَاقَةَ بْنَ جُعْشُمٍ يَقُولُ

جَاءَنَا رُسُلُ كُفَّارِ قُرَيْشٍ، يَجْعَلُونَ فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبِي بَكْرٍ، دِيَةَ كُلِّ وَاحِدٍ مِنْهُمَا، مَنْ قَتَلَهُ أَوْ أَسَرَهُ، فَبَيْنَمَا أَنَا جَالِسٌ فِي مَجْلِسٍ مِنْ مَجَالِسِ قَوْمِي بَنِي مُدْلِجٍ، أَقْبَلَ رَجُلٌ مِنْهُمْ، حَتَّى قَامَ عَلَيْنَا وَنَحْنُ جُلُوسٌ، فَقَالَ يَا سُرَاقَةُ: إِنِّي قَدْ رَأَيْتُ آنِفًا أَسْوِدَةً بِالسَّاحِلِ، أُرَاهَا مُحَمَّدًا وَأَصْحَابَهُ، قَالَ سُرَاقَةُ: فَعَرَفْتُ أَنَّهُمْ هُمْ، فَقُلْتُ لَهُ: إِنَّهُمْ لَيْسُوا بِهِمْ، وَلَكِنَّكَ رَأَيْتَ فُلاَنًا وَفُلاَنًا، انْطَلَقُوا بِأَعْيُنِنَا، ثُمَّ لَبِثْتُ فِي المَجْلِسِ سَاعَةً، ثُمَّ قُمْتُ فَدَخَلْتُ فَأَمَرْتُ جَارِيَتِي أَنْ تَخْرُجَ بِفَرَسِي، وَهِيَ مِنْ وَرَاءِ أَكَمَةٍ، فَتَحْبِسَهَا عَلَيَّ، وَأَخَذْتُ رُمْحِي، فَخَرَجْتُ بِهِ مِنْ ظَهْرِ البَيْتِ، فَحَطَطْتُ بِزُجِّهِ الأَرْضَ، وَخَفَضْتُ عَالِيَهُ، حَتَّى أَتَيْتُ فَرَسِي فَرَكِبْتُهَا، فَرَفَعْتُهَا تُقَرِّبُ بِي، حَتَّى دَنَوْتُ مِنْهُمْ، فَعَثَرَتْ بِي فَرَسِي، فَخَرَرْتُ عَنْهَا، فَقُمْتُ فَأَهْوَيْتُ يَدِي إِلَى كِنَانَتِي، فَاسْتَخْرَجْتُ مِنْهَا الأَزْلاَمَ فَاسْتَقْسَمْتُ بِهَا: أَضُرُّهُمْ أَمْ لاَ، فَخَرَجَ الَّذِي أَكْرَهُ، فَرَكِبْتُ فَرَسِي، وَعَصَيْتُ الأَزْلاَمَ، تُقَرِّبُ بِي حَتَّى إِذَا سَمِعْتُ قِرَاءَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ لاَ يَلْتَفِتُ، وَأَبُو بَكْرٍ يُكْثِرُ الِالْتِفَاتَ، سَاخَتْ يَدَا فَرَسِي فِي الأَرْضِ، حَتَّى بَلَغَتَا الرُّكْبَتَيْنِ، فَخَرَرْتُ عَنْهَا، ثُمَّ زَجَرْتُهَا فَنَهَضَتْ، فَلَمْ تَكَدْ تُخْرِجُ يَدَيْهَا، فَلَمَّا اسْتَوَتْ قَائِمَةً، إِذَا لِأَثَرِ يَدَيْهَا عُثَانٌ سَاطِعٌ فِي السَّمَاءِ مِثْلُ الدُّخَانِ، فَاسْتَقْسَمْتُ بِالأَزْلاَمِ، فَخَرَجَ الَّذِي أَكْرَهُ، فَنَادَيْتُهُمْ بِالأَمَانِ فَوَقَفُوا، فَرَكِبْتُ فَرَسِي حَتَّى جِئْتُهُمْ، وَوَقَعَ فِي نَفْسِي حِينَ لَقِيتُ مَا لَقِيتُ مِنَ الحَبْسِ عَنْهُمْ، أَنْ سَيَظْهَرُ أَمْرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقُلْتُ لَهُ: إِنَّ قَوْمَكَ قَدْ جَعَلُوا فِيكَ الدِّيَةَ، وَأَخْبَرْتُهُمْ أَخْبَارَ مَا يُرِيدُ النَّاسُ بِهِمْ، وَعَرَضْتُ عَلَيْهِمُ الزَّادَ وَالمَتَاعَ، فَلَمْ يَرْزَآنِي وَلَمْ يَسْأَلاَنِي، إِلَّا أَنْ قَالَ: «أَخْفِ عَنَّا». فَسَأَلْتُهُ أَنْ يَكْتُبَ لِي كِتَابَ أَمْنٍ، فَأَمَرَ عَامِرَ بْنَ فُهَيْرَةَ فَكَتَبَ فِي رُقْعَةٍ مِنْ أَدِيمٍ، ثُمَّ مَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

قَالَ ابْنُ شِهَابٍ، فَأَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَ الزُّبَيْرَ فِي رَكْبٍ مِنَ المُسْلِمِينَ، كَانُوا تِجَارًا قَافِلِينَ مِنَ الشَّأْمِ، فَكَسَا الزُّبَيْرُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ ثِيَابَ بَيَاضٍ، وَسَمِعَ المُسْلِمُونَ بِالْمَدِينَةِ مَخْرَجَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَكَّةَ، فَكَانُوا يَغْدُونَ كُلَّ غَدَاةٍ إِلَى الحَرَّةِ، فَيَنْتَظِرُونَهُ حَتَّى يَرُدَّهُمْ حَرُّ الظَّهِيرَةِ، فَانْقَلَبُوا يَوْمًا بَعْدَ مَا أَطَالُوا انْتِظَارَهُمْ، فَلَمَّا أَوَوْا إِلَى بُيُوتِهِمْ، أَوْفَى رَجُلٌ مِنْ يَهُودَ عَلَى أُطُمٍ مِنْ آطَامِهِمْ، لِأَمْرٍ يَنْظُرُ إِلَيْهِ، فَبَصُرَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابِهِ مُبَيَّضِينَ يَزُولُ بِهِمُ السَّرَابُ، فَلَمْ يَمْلِكِ اليَهُودِيُّ أَنْ قَالَ بِأَعْلَى صَوْتِهِ: يَا مَعَاشِرَ العَرَبِ، هَذَا جَدُّكُمُ الَّذِي تَنْتَظِرُونَ، فَثَارَ المُسْلِمُونَ إِلَى السِّلاَحِ، فَتَلَقَّوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِظَهْرِ الحَرَّةِ، فَعَدَلَ بِهِمْ ذَاتَ اليَمِينِ، حَتَّى نَزَلَ بِهِمْ فِي بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ، وَذَلِكَ يَوْمَ الِاثْنَيْنِ مِنْ شَهْرِ رَبِيعٍ الأَوَّلِ، فَقَامَ أَبُو بَكْرٍ لِلنَّاسِ، وَجَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَامِتًا، فَطَفِقَ مَنْ جَاءَ مِنَ الأَنْصَارِ – مِمَّنْ لَمْ يَرَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – يُحَيِّي أَبَا بَكْرٍ، حَتَّى أَصَابَتِ الشَّمْسُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَقْبَلَ أَبُو بَكْرٍ حَتَّى ظَلَّلَ عَلَيْهِ بِرِدَائِهِ، فَعَرَفَ النَّاسُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ ذَلِكَ، فَلَبِثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ بِضْعَ عَشْرَةَ لَيْلَةً، وَأُسِّسَ المَسْجِدُ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى، وَصَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ رَكِبَ رَاحِلَتَهُ، فَسَارَ يَمْشِي مَعَهُ النَّاسُ حَتَّى بَرَكَتْ عِنْدَ مَسْجِدِ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ، وَهُوَ يُصَلِّي فِيهِ يَوْمَئِذٍ رِجَالٌ مِنَ المُسْلِمِينَ، وَكَانَ مِرْبَدًا لِلتَّمْرِ، لِسُهَيْلٍ وَسَهْلٍ غُلاَمَيْنِ يَتِيمَيْنِ فِي حَجْرِ أَسْعَدَ بْنِ زُرَارَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ بَرَكَتْ بِهِ رَاحِلَتُهُ: «هَذَا إِنْ شَاءَ اللَّهُ المَنْزِلُ». ثُمَّ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الغُلاَمَيْنِ فَسَاوَمَهُمَا بِالْمِرْبَدِ، لِيَتَّخِذَهُ مَسْجِدًا، فَقَالاَ: لاَ، بَلْ نَهَبُهُ لَكَ يَا رَسُولَ اللَّهِ، فَأَبَى رَسُولُ اللَّهِ أَنْ يَقْبَلَهُ مِنْهُمَا هِبَةً حَتَّى ابْتَاعَهُ مِنْهُمَا، ثُمَّ بَنَاهُ مَسْجِدًا، وَطَفِقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْقُلُ مَعَهُمُ اللَّبِنَ فِي بُنْيَانِهِ وَيَقُولُ، وَهُوَ يَنْقُلُ اللَّبِنَ: ” هَذَا الحِمَالُ لاَ حِمَالَ خَيْبَرْ، هَذَا أَبَرُّ رَبَّنَا وَأَطْهَرْ، وَيَقُولُ: اللَّهُمَّ إِنَّ الأَجْرَ أَجْرُ الآخِرَهْ، فَارْحَمِ الأَنْصَارَ، وَالمُهَاجِرَهْ ” فَتَمَثَّلَ بِشِعْرِ رَجُلٍ مِنَ المُسْلِمِينَ لَمْ يُسَمَّ لِي قَالَ ابْنُ شِهَابٍ وَلَمْ يَبْلُغْنَا فِي الأَحَادِيثِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَمَثَّلَ بِبَيْتِ شِعْرٍ تَامٍّ غَيْرَ هَذَا البَيْتِ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.