தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-4970

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

உங்கள் இறைவனைப் புகழ்ந்து கொண்டு அவனைத் துதியுங்கள்! மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அவன் பாவமன்னிப்பைப் பெரிதும் ஏற்பவனாக இருக்கின்றான் எனும் (110:3ஆவது) இறைவசனம்.

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) தவ்வாப் எனும் சொல்லுக்கு, அடியார்களின் பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவன் என்று பொருள். மக்களில் பாவமன்னிப்புக் கோருபவருக்கும் தவ்வாப் என்று கூறப்படுவதுண்டு.

 இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்

உமர் (ரலி) பத்ருப்போரில் கலந்துகொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். எனவே, அவர்களில் சிலர் வருத்தமடைந்து, ‘எங்களுக்கு இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம்விட்டுவிட்டு) இவரை மட்டும் எங்களுடன் ஏன் அமரச்செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு உமர் (ரலி), ‘அவர் நீங்கள் அறிந்துள்ள வகையில் (அருமை பெருமைகள் உடையவராக) இருக்கிறார் என்பதால் தான்’ என்றார்கள். பின்னர் ஒருநாள் (எங்களை) உமர் (ரலி) (அவைக்கு) அழைத்தார்கள். அப்போதும் என்னை அவர்களுடன் அமரச் செய்தார்கள். அவர்களுக்கு (என் தகுதியினை உணர்த்திக்) காட்டுவதற்காகவே அன்று என்னை அழைத்தார்கள் என்றே கருதினேன். (எனவே, அனைவரும் வந்ததும் அவர்களிடம்) உமர் (ரலி), ‘அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்..’ எனும் (திருக்குர்ஆன் 110:1 வது) இறைவசனம் குறித்து நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் சிலர், ‘நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படுமபோது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் பணிக்கப்பட்டுள்ளோம்’ என்று (அவ்வசனத்திற்கு விளக்கம்) கூறினர். அவர்களில் இன்னும் சிலர் ஏதும் சொல்லாமல் அமைதியாயிருந்தனர்.

அப்போது உமர் (ரலி) என்னிடம், ‘இப்னு அப்பாஸே! நீங்களும் இவ்வாறுதான் கூறுகிறீர்களா?’ எனக் கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்றேன். ‘அவ்வாறாயின், நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நான், ‘அது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் (முடிந்துவிட்டதைக்) குறித்து (முன்) அறிவிப்புச் செய்ததாகும். ‘இறைவனின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்’.. அதாவது இது, உங்களின் ஆயுட்காலம் (முடிந்துவிட்டது) பற்றிய அறிகுறியாகும். எனவே, உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து, அவனுடைய தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் ஆவான் (என்பதே இதன் விளக்கமாகும்)’ என்று பதிலளித்தேன். அப்போது உமர் (ரலி), ‘நீங்கள் கூறுகிற விளக்கத்தையே இ(ந்த அத்தியாயத்)திலிருந்து நானும் அறிகிறேன்’ என்று கூறினார்கள். 4

Book : 65

(புகாரி: 4970)

بَابُ قَوْلِهِ: {فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا} [النصر: 3]

تَوَّابٌ عَلَى العِبَادِ وَالتَّوَّابُ مِنَ النَّاسِ التَّائِبُ مِنَ الذَّنْبِ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ

كَانَ عُمَرُ يُدْخِلُنِي مَعَ أَشْيَاخِ بَدْرٍ فَكَأَنَّ بَعْضَهُمْ وَجَدَ فِي نَفْسِهِ، فَقَالَ: لِمَ تُدْخِلُ هَذَا مَعَنَا وَلَنَا أَبْنَاءٌ مِثْلُهُ، فَقَالَ عُمَرُ: إِنَّهُ مَنْ قَدْ عَلِمْتُمْ، فَدَعَاهُ ذَاتَ يَوْمٍ فَأَدْخَلَهُ مَعَهُمْ، فَمَا رُئِيتُ أَنَّهُ دَعَانِي يَوْمَئِذٍ إِلَّا لِيُرِيَهُمْ، قَالَ: مَا تَقُولُونَ فِي قَوْلِ اللَّهِ تَعَالَى: {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالفَتْحُ} [النصر: 1]؟ فَقَالَ بَعْضُهُمْ: أُمِرْنَا أَنْ نَحْمَدَ اللَّهَ وَنَسْتَغْفِرَهُ إِذَا نُصِرْنَا، وَفُتِحَ عَلَيْنَا، وَسَكَتَ بَعْضُهُمْ فَلَمْ يَقُلْ شَيْئًا، فَقَالَ لِي: أَكَذَاكَ تَقُولُ يَا ابْنَ عَبَّاسٍ؟ فَقُلْتُ: لاَ، قَالَ: فَمَا تَقُولُ؟ قُلْتُ: «هُوَ أَجَلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلَمَهُ لَهُ»، قَالَ: {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالفَتْحُ} [النصر: 1] «وَذَلِكَ عَلاَمَةُ أَجَلِكَ»، {فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا} [النصر: 3]، فَقَالَ عُمَرُ: «مَا أَعْلَمُ مِنْهَا إِلَّا مَا تَقُولُ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.