தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6830

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31

விபசாரத்தால் கர்ப்பமுற்ற பெண் மணமுடித்தவளாக இருக்கும் போது கல்லெறி தண்டனை வழங்குதல்.43

 இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நான் முஹாஜிர்களில் சிலருக்குக் குர்ஆனை ஓதிக் கொடுத்து வந்தேன். அவர்களில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களும் ஒருவராவார். (இந்நிலையில் ஒரு நாள்) நான் ‘மினா’ பெருவெளியில் அவரின் முகாமில் இருந்து கொண்டிருந்தபோது அவர் உமர் இப்னு அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் இருந்துவிட்டு என்னிடம் திரும்பிவந்தார். இது உமர் (ரலி) அவர்கள் செய்த இறுதி ஹஜ்ஜின்போது (ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு) நடந்தது.

(திரும்பி வந்த) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுக்குத் தெரியுமா? இன்று ஒருவர் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா உமர் (ரலி) அவர்களிடம் சென்று, ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உமர் அவர்கள் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (முதல் கலீஃபா) அபூ பக்ர் (ரலி) அவர்களின் வாக்களிப்புப் பிரமாணம் அவசரக் கோலமாக நடைபெற்று முடிந்தது என்று கூறிய இன்னாரைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்.

இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள் கோபப்பட்டார்கள். பிறகு, ‘இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) இன்று மாலை நான் மக்கள் முன் நின்று, தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையீடு செய்ய நினைக்கும் இவர்களை எச்சரிக்கை செய்யப் போகிறேன்’ என்றார்கள். உடனே நான், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! அவ்வாறு செய்யாதீர்கள். ஏனெனில், ஹஜ் பருவ காலத்தில் (நல்லவர்களுடன்) விவரமற்ற மக்களும் தரம் தாழ்ந்தோறும் குழுமுகின்றனர். நீங்கள் (உரையாற்றுவதற்காக) மக்கள் முன் நிற்கும்போது அவர்கள்தாம் உங்களுக்கருகே மிகுதியாக இருப்பர். நீங்கள் எழுந்து நின்று ஏதோ ஒன்றைச் சொல்ல, அதற்கு உரிய பொருள் தந்து முறையாக விளங்காமல் அவரவர் (மனம்போன போக்கில்) தவறாகப் புரிந்துகொள்வார்களோ என நான் அஞ்சுகிறேன். எனவே, நீங்கள் மதீனா சென்று சேரும் வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில், மதீனாதான் ஹிஜ்ரத் மற்றும் நபிவழி பூமியாகும். நீங்கள் (அங்கு சென்று) மார்க்க ஞானம் உடையவர்களையும் பிரமுகர்களையும் தனியாகச் சந்தித்து நீங்கள் சொல்ல வேண்டியதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னால், அறிவுபடைத்தோர் உங்கள் கூற்றை அறிந்து அதற்கு உரிய இடமளிப்பார்’ என்று சொன்னேன்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) நான் மதீனா சென்ற பின் முதலாவது கூட்டத்திலேயே இதைப் பற்றிப் பேசப் போகிறேன்’ என்றார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறே நாங்கள் துல்ஹஜ் மாதத்தின் பிந்திய பகுதியில் மதீனா வந்து சேர்ந்தோம். வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாள்) அன்று சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்தபோது (பள்ளிவாசலை நோக்கி) நான் விரைந்தேன். அப்போது ‘ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல் (ரலி) அவர்களை சொற்பொழிவு மேடையின் (மிம்பர்) ஓர் ஓரத்தில் சாய்ந்து அமர்ந்திருக்கக் கண்டேன். உடனே நான் அவர் அருகில் என் முட்டுக்கால் அவரின் முட்டுக்காலைத் தொட்டுக் கொண்டிருக்கும் வண்ணம் அமர்ந்துகொண்டேன். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும்; அதற்கும் உமர் இப்னு அல்கத்தாப் (ரலி) அவர்கள் (சொற்பொழிவு மேடையை நோக்கி) வந்தார்கள். அவர்கள் வருவதைக் கண்ட நான் ‘ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல் (ரலி) அவர்களிடம், ‘உமர்(ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்ட நாளிலிருந்து (இந்த நேரம் வரை எப்போதுமே) சொல்லியிராத ஒன்றை இன்று மாலை சொல்ல இருக்கிறார்கள்’ என்று கூறினேன். அதற்கு ஸயீத் அவர்கள் ‘அப்படியெல்லாம் எதையும் உமர் கூறுவதற்கில்லை’ என்று கூறி என்னிடம் மறுத்தார்கள்.

அப்போது உமர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லி மெளனமானதும் உமர் (ரலி) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தார்கள். பிறகு, ‘நான் (இன்று) எதைச் சொல்ல வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதை நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். இது என் இறப்புக்கு சமீபத்திய பேச்சாக இருக்கக்கூடும்; (உறுதியாக) எனக்குத் தெரியாது. இதை (கேட்டு) விளங்கி நினைவில் நிறுத்திக் கொள்கிறவர் தம் வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இதை எடுத்துரைக்கட்டும்! இதை(ச் சரியாக) விளங்க முடியாது என அஞ்சுகிற (அவர் மட்டுமல்ல வேறு) யாரும் என் மீது பொய்யுரைப்பதை நான் அனுமதிக்கமாட்டேன்’ (என்று கூறிவிட்டுப் பின்வருமாறு பேசினார்கள்:)

நிச்சயமாக அல்லாஹ், முஹம்மத் (ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தீல் கல்லெறி தண்டனை (ரஜ்ம்) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்ம்) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை’ என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்.

மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும். பிறகு, நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்: உங்களுடைய (உண்மையான) தந்தையரைப் புறக்கணித்து(விட்டு வேறொரு வரை தந்தையாக்கிவிடவேண்டாம். அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி கொல்லலாகும்.

அறிந்துகொள்ளுங்கள்: இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘மர்யமின் புதல்வர் ஈசா எல்லை மீறிப் புகழப்பட்டதைப் போன்று என்னை நீங்கள் எல்லை மீறிப் புகழாதீர்கள். மாறாக, (என்னைக் குறித்து நான்) அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள்.

மேலும், உங்களில் ஒருவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உமர் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன்’ என்று கூறுவதாக எனக்குச் செய்தி எட்டியது. ‘(கலீஃபா) அபூ பக்ர் (ரலி) அவர்களின் வாக்களிப்புப் பிரமாணம் அவசரக் கோலமாகத்தான் நடைபெற்று முடிந்தது’ என்று கூறி எந்த மனிதரும் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். ஆம்! அது எப்படி (அனைவரிடமும் ஆலோசிக்காமல் அவசரமாக)த்தான் நடந்தது. ஆனால், அதன் தீமைகளிலிருந்து அல்லாஹ் (நம்மைப்) பாதுக்காத்துவிட்டான். உங்களில் ஒட்டகங்களில் அதிகமாகப் பயணிக்கும் (-அரபுகள்) எவரும் (மூப்பிலும் மேன்மையிலும்) அபூ பக்ர் (ரலி) அவர்களைப் போன்று இல்லை.44

முஸ்லிம்களின் (சம்மதம் மற்றும்) ஆலோசனையின்றி ஒரு மனிதருக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுக்கிறவரும் அவர் யாருக்கு வாக்களித்தாரோ அவரும் ஏற்கப்பட மாட்டார்கள். எச்சரிக்கை! அவ்விருவரும் கொல்லப்படவும் செய்யலாம்.

மேலும், அல்லாஹ் தன் தூதரை இறக்கச் செய்தபோது நம்மிடையே நடந்த சம்பவங்களில் ஒன்று: அன்சாரிகள் நமக்கு மாறாக பனூ சாஇதா சமுதாயக் கூடத்தில் அனைவரும் ஒன்று திரண்டனர். (ஆனால், முஹாஜிர்களான) அலீ (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோரும் அவர்களுடன் வேறு சிலரும் நமக்கு மாறுபட்ட நிலையை மேற்கொண்டனர். (நம்முடன் அந்த அரங்கிற்கு அவர்கள் வரவில்லை.) முஹாஜிர்கள் அபூ பக்ர் (ரலி) அவர்களிடம் போய் ஒன்று கூடினர். நான் அபூ பக்ர் (ரலி) அவர்களிடம், ‘அபூ பக்ர் அவர்களே! நம் சகோதரர்களான அன்சாரிகளிடம் நாம் செல்வோம்’ என்று கூறிவிட்டு, அவர்களை நாடிச் சென்றோம்.

அன்சாரிகளை நாங்கள் நெருங்கியபோது அவர்களில் இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தனர். அவர்களிருவரும் (அன்சாரி) மக்கள் (தங்களில் ஒருவரான ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களுக்கு வாக்களிப்பதென) ஒரு மனதாக முடிவு செய்திருப்பது குறித்து தெரிவித்துவிட்டு, ‘முஹாஜிர்களே! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?’ என்று கேட்டனர். அதற்கு நாங்கள், ‘எங்கள் சகோதரர்களான அன்சாரிகளை நோக்கிச் செல்கிறோம்’ என்றோம். அதற்கு அவர்கள் இருவரும், ‘அவர்களை நீங்கள் நெருங்க வேண்டாம். உங்கள் நிலையை நீங்கள் (இங்கேயே) தீர்மானித்துக்கொள்ளுங்கள். (அதுவரை பொறுமையைக் கடைபிடியுங்கள்)’ என்றார்கள். உடனே நான், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! கட்டாயம் நாங்கள் அவர்களிடம் செல்லத்தான் போகிறோம்’ என்று கூறிவிட்டு நடந்தோம். பனூ சாஇதா சமுதாயக் கூடத்திலிருந்த அன்சாரிகளிடம் சென்றோம்.

அங்கு அவர்களின் நடுவே போர்வை போர்த்திய மனிதர் ஒருவர் இருந்தார். நான், ‘இவர் யார்?’ என்று கேட்டேன். மக்கள், ‘இவர் தாம் ஸஅத் இப்னு உபாதா?’ என்று பதிலளித்தனர். ‘அவருக்கென்ன நேர்ந்துள்ளது?’ என்று கேட்டேன். மக்கள், ‘அவருக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது’ என்று கூறினர். நாங்கள் சிறிது நேரம் அமர்ந்திருந்த போது அன்சாரிகளின் பேச்சாளர் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனுக்குத் தகுதியான பண்புகளைச் சொல்லிப் புகழ்ந்துவிட்டு, ‘பின்னர், நாங்கள் (-அன்சாரிகள்) இறைவனுடைய (மார்க்கத்தின்) உதவியாளர்கள்; இஸ்லாத்தின் துருப்புகள். (அன்சாரிகளை ஒப்பிடும்போது) முஹாஜிர்களே! நீங்கள் சொற்பமானோர் தாம். உங்கள் கூட்டத்திலிருந்து சிலர் இரவோடிரவாக (மதீனா) வந்துசேர்ந்தார்கள். (இன்றோ) அவர்கள் எங்கள் பூர்வீகத்தை விட்டுமே எங்களைப் பிரித்துவிடவும், ஆட்சியதிகாரத்திலிருந்து எங்களை வெளியேற்றிவிடவும் எண்ணுகின்றனர்’ என்று கூறினார்.

(உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) அன்சாரிகளின் பேச்சாளர் பேசி முடித்து அமைதியானபோது நான் பேச நினைத்தேன். மேலும், நான் எனக்குப் பிடித்த ஓர் உரையை அழகாகத் தயாரித்து வைத்திருந்தேன். அதனை அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கு முன்பே எடுத்துரைத்துவிடவேண்டும் என்றும், (அன்சாரிகளின் பேச்சால்) அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டிருந்த உஷ்ணத்தில் சிறிதளவையேனும் தணித்திடவேண்டும் என்றும் விரும்பினேன். நான் பேச முற்பட்டபோது அபூ பக்ர் (ரலி) அவர்கள், ‘நிதானத்தைக் கையாளுங்கள்’ என்றார்கள். எனவே, நான் (அபூ பக்ர் அவர்களுக்கு மாறுசெய்து) அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்க விரும்பவில்லை.

இதையடுத்து அபூ பக்ர் (ரலி) அவர்கள் பேசினார்கள். அன்னார் என்னைவிடப் பொறுமைசாலியாகவும் நிதானமிக்கவராகவும் இருந்தார்கள். நான் எனக்குப் பிடித்த வகையில் அழகுபடத் தயாரித்து வைத்திருந்த உரையில் எதையும்விட்டுவிடாமல் அதைப் போன்று அல்லது அதைவிடவும் சிறப்பாகத் தயக்கமின்றி (தங்குதடையின்றி) அன்னார் பேசி முடித்தார்கள். அபூ பக்ர் (ரலி) அவர்கள் (தம் உரையில்) குறிப்பிட்டார்கள். (அன்சாரிகளே!) உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட (குண) நலன்களுக்கு நீங்கள் உரியவர்களே. (ஆனால்,) இந்த ஆட்சியதிகாரம் என்பது (காலங்காலமாக) இந்தக் குறைஷிக் குலத்தாருக்கே அறியப்பட்டு வருகிறது. அவர்கள்தாம் அரபுகளிலேயே சிறந்த பாரம்பரியத்தையும் சிறந்த ஊரையும் (மக்கா) சேர்ந்தவர்கள்.

நான் உங்களுக்காக இந்த இருவரில் ஒருவரை திருப்திப்படுகிறேன். இவர்களில் நீங்கள் விரும்பிய ஒருவருக்கு வாக்களி(த்து ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்)யுங்கள். இவ்வாறு கூறிவிட்டு, என் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களின் கையையும் பற்றினார்கள். (இறுதியாக அவர்கள் கூறிய) இந்த வார்த்தையைத் தவிர அபூ பக்ர் (ரலி) அவர்கள் கூறிய வேறெதையும் நான் வெறுக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அபூ பக்ர்(ரலி) அவர்கள் போன்ற தகுதியுள்ளவர்) இருக்கும் ஒரு சமுதாயத்திற்கு நான் ஆட்சித் தலைவராக ஆவதைவிட, நான் எந்தப் பாவமும் செய்யாமலேயே (மக்கள்) முன் கொண்டு வரப்பட்டு என் கழுத்து வெட்டப்படுவதையே விரும்பினேன். (இன்று வரை இதுவே என் நிலையாகும். இதற்கு மாற்றமாக) தற்போது எனக்கு ஏற்படாத ஓர் எண்ணத்தை மரணிக்கும்போது என் மனம் எனக்கு ஊட்டினால் அது வேறு விஷயம்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர் ‘நான் சிரங்கு பிடித்த ஒட்டகம் சொறிந்து கொள்வதற்கான மரக்கொம்பு ஆவேன்; முட்டுக் கொடுக்கப்பட்ட பேரீச்சமரம் ஆவேன். (அதாவது பிரச்சினையைத் தீர்ப்பவன் ஆவேன். நான் ஒரு நல்ல யோசனை கூறுகிறேன்: அன்சாரிகளான) எங்களில் ஒரு தலைவர்; குறைஷி குலத்தாரே! உங்களில் ஒரு தலைவர்’ என்றார்.

அப்போது கூச்சல் அதிகரித்தது. குரல்கள் உயர்ந்தன. பிளவு ஏற்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன். எனவே, ‘அபூ பக்ர் அவர்களே! உங்கள் கையை நீட்டுங்கள். (உங்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் செய்கிறேன்)’ என்று நான் சொன்னேன். அப்போது அபூ பக்ர் (ரலி) அவர்கள் தங்களின் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் அவர்களுக்கு (நீங்கள் தாம் ஆட்சித் தலைவர். உங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போமென) வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தேன். (அவ்வாறே) முஹாஜிர்களும் அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கு வாக்குப் பிரமாணம் செய்தனர். பிறகு, அவர்களுக்கு அன்சாரிகளும் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தனர். நாங்கள் ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களிடம் (அன்னாரைச் சமாதானப்படுத்துவதற்காக) விரைந்து சென்றோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர், ‘நீங்கள் ஸஅத் இப்னு உபாதா அவர்களை (நம்ப வைத்து)க் கொன்றுவிட்டீர்கள்’ என்றார்.

உடனே நான், ‘அல்லாஹ் தான் ஸஅத் இப்னு உபாதவைக் கொன்றான் (நாங்களல்ல)’ என்று கூறினேன்.45 மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! (இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது) நாங்கள் சந்தித்த பிரச்சினைகளில் அபூ பக்ர் (ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்ததை விட மிகவும் சிக்கலான பிரச்சினை வேறெதையும் நாங்கள் கண்டதில்லை. வாக்களிப்புப் பிரமாணம் நடைபெறாத நிலையில் நாங்கள் அந்த மக்களிடமிருந்து வெளியேறிச் சென்றால் நாங்கள் சென்றதற்குப் பிறகு, தங்களில் ஒருவருக்கு அவர்கள் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்து விடுவார்கள். அப்போது ஒன்று, நாங்கள் திருப்தியில்லாமலேயே அவர்களுக்கு வாக்களிப்புப் பிராமணம் செய்து கொடுக்க வேண்டி வரும். அல்லது அவர்களுக்கு மாறாக நாங்கள் செயல்பட நேரும். அப்போது குழப்பம் உருவாகும் என்று நாங்கள் அஞ்சினோம்.

ஆக, முஸ்லிம்களின் (சம்மதம் மற்றும்) ஆலோசனையின்றி ஒருவருக்கு வாக்களிக்கிறவரும், அவர் யாருக்கு வாக்களித்தாரோ அவரும் ஏற்கப்படமாட்டார்கள் எச்சரிக்கை! அவ்விருவரும் கொல்லப்படவும் செய்யலாம்.

Book : 86

(புகாரி: 6830)

بَابُ رَجْمِ الحُبْلَى مِنَ الزِّنَا إِذَا أَحْصَنَتْ

حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ:

كُنْتُ أُقْرِئُ رِجَالًا مِنَ المُهَاجِرِينَ، مِنْهُمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ، فَبَيْنَمَا أَنَا فِي مَنْزِلِهِ بِمِنًى، وَهُوَ عِنْدَ عُمَرَ بْنِ الخَطَّابِ، فِي آخِرِ حَجَّةٍ حَجَّهَا، إِذْ رَجَعَ إِلَيَّ عَبْدُ الرَّحْمَنِ فَقَالَ: لَوْ رَأَيْتَ رَجُلًا أَتَى أَمِيرَ المُؤْمِنِينَ اليَوْمَ، فَقَالَ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، هَلْ لَكَ فِي فُلاَنٍ؟ يَقُولُ: لَوْ قَدْ مَاتَ عُمَرُ لَقَدْ بَايَعْتُ فُلاَنًا، فَوَاللَّهِ مَا كَانَتْ بَيْعَةُ أَبِي بَكْرٍ إِلَّا فَلْتَةً فَتَمَّتْ، فَغَضِبَ عُمَرُ، ثُمَّ قَالَ: إِنِّي إِنْ شَاءَ اللَّهُ لَقَائِمٌ العَشِيَّةَ فِي النَّاسِ، فَمُحَذِّرُهُمْ هَؤُلاَءِ الَّذِينَ يُرِيدُونَ أَنْ يَغْصِبُوهُمْ أُمُورَهُمْ. قَالَ عَبْدُ الرَّحْمَنِ: فَقُلْتُ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ لاَ تَفْعَلْ، فَإِنَّ المَوْسِمَ يَجْمَعُ رَعَاعَ النَّاسِ وَغَوْغَاءَهُمْ، فَإِنَّهُمْ هُمُ الَّذِينَ يَغْلِبُونَ عَلَى قُرْبِكَ حِينَ تَقُومُ فِي النَّاسِ، وَأَنَا أَخْشَى أَنْ تَقُومَ فَتَقُولَ مَقَالَةً يُطَيِّرُهَا عَنْكَ كُلُّ مُطَيِّرٍ، وَأَنْ لاَ يَعُوهَا، وَأَنْ لاَ يَضَعُوهَا عَلَى مَوَاضِعِهَا، فَأَمْهِلْ حَتَّى تَقْدَمَ المَدِينَةَ، فَإِنَّهَا دَارُ الهِجْرَةِ وَالسُّنَّةِ، فَتَخْلُصَ بِأَهْلِ الفِقْهِ وَأَشْرَافِ النَّاسِ، فَتَقُولَ مَا قُلْتَ مُتَمَكِّنًا، فَيَعِي أَهْلُ العِلْمِ مَقَالَتَكَ، وَيَضَعُونَهَا عَلَى مَوَاضِعِهَا. فَقَالَ عُمَرُ: أَمَا وَاللَّهِ – إِنْ شَاءَ اللَّهُ – لَأَقُومَنَّ بِذَلِكَ أَوَّلَ مَقَامٍ أَقُومُهُ بِالْمَدِينَةِ. قَالَ ابْنُ عَبَّاسٍ: فَقَدِمْنَا المَدِينَةَ فِي عُقْبِ ذِي الحَجَّةِ، فَلَمَّا كَانَ يَوْمُ الجُمُعَةِ عَجَّلْتُ [ص:169] الرَّوَاحَ حِينَ زَاغَتِ الشَّمْسُ، حَتَّى أَجِدَ سَعِيدَ بْنَ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ جَالِسًا إِلَى رُكْنِ المِنْبَرِ، فَجَلَسْتُ حَوْلَهُ تَمَسُّ رُكْبَتِي رُكْبَتَهُ، فَلَمْ أَنْشَبْ أَنْ خَرَجَ عُمَرُ بْنُ الخَطَّابِ، فَلَمَّا رَأَيْتُهُ مُقْبِلًا، قُلْتُ لِسَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ: لَيَقُولَنَّ العَشِيَّةَ مَقَالَةً لَمْ يَقُلْهَا مُنْذُ اسْتُخْلِفَ، فَأَنْكَرَ عَلَيَّ وَقَالَ: مَا عَسَيْتَ أَنْ يَقُولَ مَا لَمْ يَقُلْ قَبْلَهُ، فَجَلَسَ عُمَرُ عَلَى المِنْبَرِ، فَلَمَّا سَكَتَ المُؤَذِّنُونَ قَامَ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ: أَمَّا بَعْدُ، فَإِنِّي قَائِلٌ لَكُمْ مَقَالَةً قَدْ قُدِّرَ لِي أَنْ أَقُولَهَا، لاَ أَدْرِي لَعَلَّهَا بَيْنَ يَدَيْ أَجَلِي، فَمَنْ عَقَلَهَا وَوَعَاهَا فَلْيُحَدِّثْ بِهَا حَيْثُ انْتَهَتْ بِهِ رَاحِلَتُهُ، وَمَنْ خَشِيَ أَنْ لاَ يَعْقِلَهَا فَلاَ أُحِلُّ لِأَحَدٍ أَنْ يَكْذِبَ عَلَيَّ: إِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالحَقِّ، وَأَنْزَلَ عَلَيْهِ الكِتَابَ، فَكَانَ مِمَّا أَنْزَلَ اللَّهُ آيَةُ الرَّجْمِ، فَقَرَأْنَاهَا وَعَقَلْنَاهَا وَوَعَيْنَاهَا، رَجَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَجَمْنَا بَعْدَهُ، فَأَخْشَى إِنْ طَالَ بِالنَّاسِ زَمَانٌ أَنْ يَقُولَ قَائِلٌ: وَاللَّهِ مَا نَجِدُ آيَةَ الرَّجْمِ فِي كِتَابِ اللَّهِ، فَيَضِلُّوا بِتَرْكِ فَرِيضَةٍ أَنْزَلَهَا اللَّهُ، وَالرَّجْمُ فِي كِتَابِ اللَّهِ حَقٌّ عَلَى مَنْ زَنَى إِذَا أُحْصِنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ، إِذَا قَامَتِ البَيِّنَةُ، أَوْ كَانَ الحَبَلُ أَوِ الِاعْتِرَافُ، ثُمَّ إِنَّا كُنَّا نَقْرَأُ فِيمَا نَقْرَأُ مِنْ كِتَابِ اللَّهِ: أَنْ لاَ تَرْغَبُوا عَنْ آبَائِكُمْ، فَإِنَّهُ كُفْرٌ بِكُمْ أَنْ تَرْغَبُوا عَنْ آبَائِكُمْ، أَوْ إِنَّ كُفْرًا بِكُمْ أَنْ تَرْغَبُوا عَنْ آبَائِكُمْ. أَلاَ ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” لاَ تُطْرُونِي كَمَا أُطْرِيَ عِيسَى ابْنُ مَرْيَمَ، وَقُولُوا: عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ ” ثُمَّ إِنَّهُ بَلَغَنِي أَنَّ قَائِلًا مِنْكُمْ يَقُولُ: وَاللَّهِ لَوْ قَدْ مَاتَ عُمَرُ بَايَعْتُ فُلاَنًا، فَلاَ يَغْتَرَّنَّ امْرُؤٌ أَنْ يَقُولَ: إِنَّمَا كَانَتْ بَيْعَةُ أَبِي بَكْرٍ فَلْتَةً وَتَمَّتْ، أَلاَ وَإِنَّهَا قَدْ كَانَتْ كَذَلِكَ، وَلَكِنَّ اللَّهَ وَقَى شَرَّهَا، وَلَيْسَ مِنْكُمْ مَنْ تُقْطَعُ الأَعْنَاقُ إِلَيْهِ مِثْلُ أَبِي بَكْرٍ، مَنْ بَايَعَ رَجُلًا عَنْ غَيْرِ مَشُورَةٍ مِنَ المُسْلِمِينَ فَلاَ يُبَايَعُ هُوَ وَلاَ الَّذِي بَايَعَهُ، تَغِرَّةً أَنْ يُقْتَلاَ، وَإِنَّهُ قَدْ كَانَ مِنْ خَبَرِنَا حِينَ تَوَفَّى اللَّهُ نَبِيَّهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الأَنْصَارَ خَالَفُونَا، وَاجْتَمَعُوا بِأَسْرِهِمْ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ، وَخَالَفَ عَنَّا عَلِيٌّ وَالزُّبَيْرُ وَمَنْ مَعَهُمَا، وَاجْتَمَعَ المُهَاجِرُونَ إِلَى أَبِي بَكْرٍ، فَقُلْتُ لِأَبِي بَكْرٍ: يَا أَبَا بَكْرٍ انْطَلِقْ بِنَا إِلَى إِخْوَانِنَا هَؤُلاَءِ مِنَ الأَنْصَارِ، فَانْطَلَقْنَا نُرِيدُهُمْ، فَلَمَّا دَنَوْنَا مِنْهُمْ، لَقِيَنَا مِنْهُمْ رَجُلاَنِ صَالِحَانِ، فَذَكَرَا مَا تَمَالَأَ عَلَيْهِ القَوْمُ، فَقَالاَ: أَيْنَ تُرِيدُونَ يَا مَعْشَرَ المُهَاجِرِينَ؟ فَقُلْنَا: نُرِيدُ إِخْوَانَنَا هَؤُلاَءِ مِنَ الأَنْصَارِ، فَقَالاَ: لاَ عَلَيْكُمْ أَنْ لاَ تَقْرَبُوهُمْ، اقْضُوا أَمْرَكُمْ، فَقُلْتُ: وَاللَّهِ لَنَأْتِيَنَّهُمْ، فَانْطَلَقْنَا حَتَّى أَتَيْنَاهُمْ فِي [ص:170] سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ، فَإِذَا رَجُلٌ مُزَمَّلٌ بَيْنَ ظَهْرَانَيْهِمْ، فَقُلْتُ: مَنْ هَذَا؟ فَقَالُوا: هَذَا سَعْدُ بْنُ عُبَادَةَ، فَقُلْتُ: مَا لَهُ؟ قَالُوا: يُوعَكُ، فَلَمَّا جَلَسْنَا قَلِيلًا تَشَهَّدَ خَطِيبُهُمْ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ: أَمَّا بَعْدُ، فَنَحْنُ أَنْصَارُ اللَّهِ وَكَتِيبَةُ الإِسْلاَمِ، وَأَنْتُمْ مَعْشَرَ المُهَاجِرِينَ رَهْطٌ، وَقَدْ دَفَّتْ دَافَّةٌ مِنْ قَوْمِكُمْ، فَإِذَا هُمْ يُرِيدُونَ أَنْ يَخْتَزِلُونَا مِنْ أَصْلِنَا، وَأَنْ يَحْضُنُونَا مِنَ الأَمْرِ. فَلَمَّا سَكَتَ أَرَدْتُ أَنْ أَتَكَلَّمَ، وَكُنْتُ قَدْ زَوَّرْتُ مَقَالَةً أَعْجَبَتْنِي أُرِيدُ أَنْ أُقَدِّمَهَا بَيْنَ يَدَيْ أَبِي بَكْرٍ، وَكُنْتُ أُدَارِي مِنْهُ بَعْضَ الحَدِّ، فَلَمَّا أَرَدْتُ أَنْ أَتَكَلَّمَ، قَالَ أَبُو بَكْرٍ: عَلَى رِسْلِكَ، فَكَرِهْتُ أَنْ أُغْضِبَهُ، فَتَكَلَّمَ أَبُو بَكْرٍ فَكَانَ هُوَ أَحْلَمَ مِنِّي وَأَوْقَرَ، وَاللَّهِ مَا تَرَكَ مِنْ كَلِمَةٍ أَعْجَبَتْنِي فِي تَزْوِيرِي، إِلَّا قَالَ فِي بَدِيهَتِهِ مِثْلَهَا أَوْ أَفْضَلَ مِنْهَا حَتَّى سَكَتَ، فَقَالَ: مَا ذَكَرْتُمْ فِيكُمْ مِنْ خَيْرٍ فَأَنْتُمْ لَهُ أَهْلٌ، وَلَنْ يُعْرَفَ هَذَا الأَمْرُ إِلَّا لِهَذَا الحَيِّ مِنْ قُرَيْشٍ، هُمْ أَوْسَطُ العَرَبِ نَسَبًا وَدَارًا، وَقَدْ رَضِيتُ لَكُمْ أَحَدَ هَذَيْنِ الرَّجُلَيْنِ، فَبَايِعُوا أَيَّهُمَا شِئْتُمْ، فَأَخَذَ بِيَدِي وَبِيَدِ أَبِي عُبَيْدَةَ بْنِ الجَرَّاحِ، وَهُوَ جَالِسٌ بَيْنَنَا، فَلَمْ أَكْرَهْ مِمَّا قَالَ غَيْرَهَا، كَانَ وَاللَّهِ أَنْ أُقَدَّمَ فَتُضْرَبَ عُنُقِي، لاَ يُقَرِّبُنِي ذَلِكَ مِنْ إِثْمٍ، أَحَبَّ إِلَيَّ مِنْ أَنْ أَتَأَمَّرَ عَلَى قَوْمٍ فِيهِمْ أَبُو بَكْرٍ، اللَّهُمَّ إِلَّا أَنْ تُسَوِّلَ إِلَيَّ نَفْسِي عِنْدَ المَوْتِ شَيْئًا لاَ أَجِدُهُ الآنَ. فَقَالَ قَائِلٌ مِنَ الأَنْصَارِ: أَنَا جُذَيْلُهَا المُحَكَّكُ، وَعُذَيْقُهَا المُرَجَّبُ، مِنَّا أَمِيرٌ، وَمِنْكُمْ أَمِيرٌ، يَا مَعْشَرَ قُرَيْشٍ. فَكَثُرَ اللَّغَطُ، وَارْتَفَعَتِ الأَصْوَاتُ، حَتَّى فَرِقْتُ مِنَ الِاخْتِلاَفِ، فَقُلْتُ: ابْسُطْ يَدَكَ يَا أَبَا بَكْرٍ، فَبَسَطَ يَدَهُ فَبَايَعْتُهُ، وَبَايَعَهُ المُهَاجِرُونَ ثُمَّ بَايَعَتْهُ الأَنْصَارُ. وَنَزَوْنَا عَلَى سَعْدِ بْنِ عُبَادَةَ، فَقَالَ قَائِلٌ مِنْهُمْ: قَتَلْتُمْ سَعْدَ بْنَ عُبَادَةَ، فَقُلْتُ: قَتَلَ اللَّهُ سَعْدَ بْنَ عُبَادَةَ، قَالَ عُمَرُ: وَإِنَّا وَاللَّهِ مَا وَجَدْنَا فِيمَا حَضَرْنَا مِنْ أَمْرٍ أَقْوَى مِنْ مُبَايَعَةِ أَبِي بَكْرٍ، خَشِينَا إِنْ فَارَقْنَا القَوْمَ وَلَمْ تَكُنْ بَيْعَةٌ: أَنْ يُبَايِعُوا رَجُلًا مِنْهُمْ بَعْدَنَا، فَإِمَّا بَايَعْنَاهُمْ عَلَى مَا لاَ نَرْضَى، وَإِمَّا نُخَالِفُهُمْ فَيَكُونُ فَسَادٌ، فَمَنْ بَايَعَ رَجُلًا عَلَى غَيْرِ مَشُورَةٍ مِنَ المُسْلِمِينَ، فَلاَ يُتَابَعُ هُوَ وَلاَ الَّذِي بَايَعَهُ، تَغِرَّةً أَنْ يُقْتَلاَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.